dinamalar telegram
Advertisement

கோவில் நிலத்தை அபகரிப்போர் மீது குண்டாஸ் பாயும்!

Share
சென்னை:கோவில் சொத்து ஆக்கிரமிப்புகள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக, தேவைப்பட்டால் 'குண்டர்' தடுப்புச் சட்டத்தை பிரயோகிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

சென்னை மயிலாப்பூரில் ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தான கோவில் உள்ளது. இக்கோவில் அறங்காவலர்கள் ஐந்து பேரை, 'சஸ்பெண்ட்' செய்து, 2021 ஆக., 6ல் அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, அறங்காவலர்களில் ஒருவரான ஸ்ரீதர் என்பவர் தாக்கல் செய்த மனு:சட்ட விரோத செயல்அறங்காவலராக வருவதற்கு முன் நடந்த சட்ட விரோத செயல்களுக்கு நான் பொறுப்பாக முடியாது.

தற்போதைய சஸ்பெண்ட் உத்தரவு, குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை. கோவில் நிர்வாகத்தில் குறுக்கிட அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆகியோர் ஆஜராகினர்.

இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: கோவில்களை கட்டியது மட்டுமல்லாமல், அவற்றுக்கு பயன்படும் விதமாக பலரும் பங்களிப்பு செய்துள்ளனர். கடவுளுக்காக சொத்துக்கள், ஆபரணங்களை அளித்துள்ளனர். அதனால், கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய கடமை நீதிமன்றத்துக்கு உள்ளது.

நிதி முறைகேடு



அறங்காவலர்கள், நிர்வாக அதிகாரி ஆகியோர் கோவில் நலனைப் பாதுகாக்க தவறும்போது, அதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்து, தகுந்த முறையில் அணுகலாம். கோவில் சொத்துக்களை மோசடி செய்வது, ஆக்கிரமிப்பு செய்வது சமூகத்துக்கு எதிரான குற்றம். நிதி முறைகேடு செய்வதும் குற்றம்.கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்போர், மோசடி பரிவர்த்தனைகள், சட்ட விரோத ஆவணங்களை தயாரிப்போருக்கு எதிராக, அறநிலையத் துறை சட்டம், குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.


வழக்கின் தன்மைக்கு ஏற்ப, குண்டர் தடுப்புச் சட்டத்தையும் பிரயோகிக்கலாம்.எனவே, கோவில் நிலங்களை அபகரிப்போர், ஆக்கிரமிப்போர், சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பிரயோகிக்க, அரசு தயக்கம் காட்டக் கூடாது.சஸ்பெண்ட் உத்தரவுக்கு நான்கு அறங்காவலர்கள் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

அதனால், மனுதாரரைப் பொறுத்தவரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த, இணை கமிஷனர் அந்தஸ்துக்கு குறையாத விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும்.சுதந்திரமான, நியாயமான விசாரணை நடத்துவதற்காக, சம்பந்தப்பட்ட ஆவணங்களை அரசு வசம் எடுக்க வேண்டும்.


விசாரணையை விரைந்து முடிக்க ஏதுவாக, அறங்காவலர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சட்டப்படி நடவடிக்கைதமிழகம் முழுதும் உள்ள கோவில் சொத்துக்களின் ஆக்கிரமிப்பாளர்கள், சட்ட விரோதமாக வைத்திருப்போர், அவற்றை ஒப்படைக்கும்படி பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். ஒப்படைக்கத் தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப் பட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.


கோவில் சொத்துக்கள், ஆபரணங்களை மீட்கும் நடவடிக்கையை கண்காணிக்க, சிறப்பு பிரிவை அரசு ஏற்படுத்த வேண்டும்.சிறப்பு பிரிவை தொடர்பு கொள்ள தொலைபேசி, மொபைல் போன் எண்களை, கோவில்கள் மற்றும் அறநிலையத் துறை அலுவலகங்கள் முன் வெளியிட வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement