dinamalar telegram
Advertisement

உள்ளாட்சித் தேர்தல் பணிகள் துவங்கியது! இன்று வேட்பு மனு தாக்கல்

Share
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி இன்று துவங்குகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் போலீசார் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். எஸ்.பி., ஜியாவுல்ஹக், டி.ஆர்.ஓ., மாலதி, கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) தேவநாதன், திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது:மாவட்டத்தில் 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 180 ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 412 ஊராட்சித் தலைவர்கள், 3162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு ஓட்டுப்பதிவுகள் நடக்கிறது. 1,889 ஓட்டுச் சாவடிகளில் 2 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.முதல் கட்டமாக அக்டோபர் 6ம் தேதி திருக்கோவிலுார், திருநாவலுார், உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய ஒன்றியங்களுக்கும்; இரண்டாம் கட்டமாக கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன்மலை ஒன்றியங்களுக்கு 9ம் தேதியும் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இரண்டு கட்டங்களிலும் மொத்தம் 9 லட்சத்து 61 ஆயிரத்து 914 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.தேர்தலில் 21 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 549 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்து 384 ஓட்டுப்பதிவு அலுவலர்கள் பணி நியமனம் செய்திட விபரப்பட்டியல் இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது.இரண்டு கட்ட தேர்தலுக்குப்பின், பதிவான ஓட்டுகள் அக்டோபர் 12ம் தேதி எண்ணும் பணி நடக்கிறது.

இதற்காக ஒவ்வொரு ஒன்றியத்திற்கும், ஒரு ஓட்டும் எண்ணும் மையம் என்ற விகிதத்தில் 9 ஒன்றியங்களுக்கு 9 ஓட்டு எண்ணும் மையங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.மாநில தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாதிரி நன்னடத்தை விதிகளை பின்பற்றி 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் 15 துணை தாசில்தார்கள், 45 காவல்துறை அலுவலர்கள் பணியாற்றுவார்கள்.மேலும் தேர்தல் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளவும், புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்.1800 425 8510 அறிமுகப்படுத்தப்படுகிறது. இது கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.

தொடர்ந்து, சின்னசேலம் பகுதிகளுக்குட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஓட்டு எண்ணும் மையங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.ஆய்வில், ஓட்டுப்பெட்டிகளை வைப்பது, அங்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதேபோல், சின்னசேலம் அடுத்த இந்திலி தனியார் பொறியியல் கல்லுாரியில் வைக்கப்படும் ஓட்டுப்பெட்டி மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களையும் பார்வையிட்டார்.எஸ்.பி., ஜியாவுல்ஹக், பி.டி.ஓக்கள்., துரைசாமி, சுமதி, திட்ட இயக்குனர் மணி, செயற்பொறியாளர் செல்வகுமரன் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement