dinamalar telegram
Advertisement

கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு சிறப்பு முகாம் 19ம் தேதிக்கு மாற்றம்

Share
Tamil News
சென்னை:''தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மெகா தடுப்பூசி முகாம், 17ம் தேதி பதிலாக 19ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள '104' மருத்துவ மையத்தில், நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கும் மையத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.பின், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களிடம் உரையாடுவதற்கு, ஆலோசனை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக நீட் தேர்வு எழுதியவர்களின் பட்டியலை பெற்று, அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் கட்டளை அறை வாயிலாக ஆலோசனை வழங்கப்படும். இதற்காக 333 மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 40 மனநல ஆலோசகர்கள் 24 மணி நேரமும் ஆலோசனை வழங்க தயார் நிலையில் உள்ளனர்.


'108 அவசரகால ஆம்புலன்ஸ்' சேவை துவங்கி 13வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இந்த நாளில், இந்த திட்டத்தை துவக்கி வைப்பது மகிழ்ச்சியாக உள்ளது.தமிழகத்தில், வரும் 17ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, இந்த முகாம் வரும் 19ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம் காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை நடைபெறும். இதில் 20 லட்சத்துக்கு மேல் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதுவரை 52 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; 48 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடவில்லை.கர்ப்பிணியருக்கு அதிகம் தடுப்பூசி போட்ட மாநிலம் தமிழகமாக உள்ளது. மேலும் 2,623 ஆதரவற்றோர்; 1,754 மனநலம் பாதிக்கப்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்பட்டுஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement