dinamalar telegram
Advertisement

சில வரி செய்திகள்...: இந்தியா

Share
Tamil News
முமைத்கானிடம் விசாரணை

ஐதராபாத்: தெலுங்கானாவில் 2017ல் பதிவான போதைப்பொருள் வழக்கில் நடைபெற்ற பண மோசடி தொடர்பாக, தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் புரி ஜெகநாத், நடிகையர் சார்மி கவுர், ரகுல் ப்ரீத் சிங், நடிகர்கள் ராணா டகுபதி, ரவி தேஜா, நவ்தீப் ஆகியோரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். அடுத்ததாக,  ஐதராபாதில் உள்ள அமலாக்கத்துறை இயக்குனர் அலுவலகத்தில், நடிகை முமைத் கான் விசாரணைக்கு ஆஜரானார்.

தீப்பற்றிய கார்: 5 பேர் பலி

ராம்கர்: ஜார்க்கண்டின் ராம்கர் மாவட்டம் முர்பந்தாவில், பஸ் மீது மோதிய கார் தீப்பற்றி எரிந்தது. இதில், காருக்குள் இருந்த, பீஹார் மாநிலம், பாட்னாவை சேர்ந்த இரு பெண்கள் உட்பட ஐந்து பேர் உடல் கருகி பலியாயினர். படுகாயம் அடைந்த பஸ் டிரைவர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

டில்லியில் பட்டாசுக்கு தடை

புதுடில்லி: டில்லியில் காற்று மாசு அதிகரித்து உள்ளது. இதனால் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு மாநில அரசு தடை விதித்து உள்ளது. இதுகுறித்து, சமூக வலைதளத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட பதிவில், 'முழுமையான தடையை கருத்தில் கொண்டு பட்டாசுகளை வியாபாரிகள் பதுக்கி வைக்க வேண்டாம்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறுத்தை அடித்து பெண் பலி

சியோனி: மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டம் மோகான் கிராமத்தை சேர்ந்த பெண்கள் சிலர், நேற்று விறகு சேகரிப்பதற்காக அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு வந்த சிறுத்தையால் பீதியுற்ற அவர்கள் ஓட்டம் பிடித்தனர். அதற்குள் 50 வயது பெண்ணை சிறுத்தை அடித்துக் கொன்றது. உடலை மீட்ட வனத்துறையினர், அவரது குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கினர். மேலும் 3.90 லட்சம் ரூபாய் விரைவில் வழங்கப்படும் என கூறினர்.

மாணவர்களின் படிகார விநாயகர்

சாத்னா: மத்திய பிரதேசத்தின் சாத்னா மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் எட்டு பேர், தங்கள் வேதியியல் ஆசிரியர் உதவியுடன் ஆய்வகத்தில் சுற்றுச் சூழலுக்கு தீங்கற்ற விநாயகர் சிலைகளை உருவாக்கி உள்ளனர். அவர்களின் ஒன்றரை அடி உயர சிலைகள், தண்ணீரை சுத்திகரிக்கும் ரசாயன கலவையான பொட்டாஷியம் படிகாரத்தில் உருவானவை.

குற்றச்சாட்டுகள் பதிவு

புனே: மஹாராஷ்டிராவின் புனேவில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர், 2013ல் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கின் விசாரணை, புனே சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று துவங்கியது. சிறையில் இருக்கும் வீரேந்திர சின் தவ்டே, சச்சின் அந்துரே, ஷரத் கலாஸ்கர் ஆகியோர் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாகவும், வழக்கறிஞர் சஞ்சீவ் புனலேகர், விக்ரம் பாவே ஆகியோர் நேரிலும் ஆஜராயினர். இவர்கள் ஐந்து பேர் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement