dinamalar telegram
Advertisement

தலிபான் தலைவர்கள் இடையே மோதல் குழப்பத்தில் அதிபர் மாளிகை

Share
காபூல்:ஆப்கானிஸ்தான் அமைச்சரவையில் பொறுப்பு வகிக்கும் தலிபான் தலைவர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளதை அடுத்து, அதிபர் மாளிகையில் குழப்பமான சூழல் நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் அதிரடியாக நாட்டை கைப்பற்றினர். அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து, தலிபான்கள் தலைமையில் இடைக்கால அரசு அறிவிக்கப்பட்டது.

இதில், தலிபான்கள் அரசியல் பிரிவு தலைவரும், அமெரிக்க படைகளுடனான பேச்சில் முக்கிய பங்கு வகித்த முல்லா அப்துல் கனி பராதருக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கப் பட்டது.பாகிஸ்தானுக்கு மிகவும் நெருக்கமான ஹக்கானி அமைப்பின் மூத்த தலைவர் கலில் உர் ரஹ்மானுக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், புதிய அரசு குறித்து, ஹக்கானி குழுவினருக்கும், தலிபான்களுக்கும் இடையே காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் சமீபத்தில் பேச்சு நடந்தது. அப்போது, தாங்கள் அதிரடியாக போர் புரிந்ததால் தான் ஆப்கனில் ஆட்சி கைக்கு வந்தது என, ஹக்கானி குழுவினர் தெரிவித்தாக கூறப்படுகிறது.இதை முல்லா பராதர் கடுமையாக மறுத்ததாக தெரிகிறது.

'அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு சுமுகமாக முடிந்ததை அடுத்தே, ஆப்கன் போர் முடிவுக்கு வந்தது' என, முல்லா பராதர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து, ஹக்கானி குழுவினருக்கும், முல்லா பராதர் ஆதரவாளர்களுக்கு பயங்கர சண்டை மூண்டதாகவும், இந்த சண்டையில் முல்லா பராதர் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதை தலிபான்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

'தான் கொலை செய்யப்பட்டதாக உலவும் செய்தி தவறானது' என, முல்லா பராதரின் குரலில், 'ஆடியோ' வெளியாகி உள்ளது.இந்நிலையில், 'அதிபர் மாளிகையில் சண்டை எதுவும் நடைபெறவில்லை. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என, முல்லா பராதர் நேரில் தோன்றி அறிவித்தால் மட்டுமே இந்த குழப்பம் முடிவுக்கு வரும்' என, பி.பி.சி., செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய தொழிலதிபர் கடத்தல்!



ஆப்கானிஸ்தானில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 வயது தொழிலதிபர், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்.இது குறித்து அகாலி தள தலைவரும், டில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை கமிட்டியின் தலைவருமான மன்ஜிந்தர் சிர்சா, 'வீடியோ' பதிவு ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் பன்சுரி லால், 50, நேற்று முன் தினம் இரவு கடத்தப்பட்டுள்ளார். ஐந்து பேர் துப்பாக்கி முனையில் அவரை காரில் கடத்தி சென்றுள்ளனர். அவருக்கு என்ன ஆனது என்பது தெரியாததால் அவரது சகோதரரும், நண்பர்களும் கவலையில் உள்ளனர். மத்திய அரசு தலையிட்டு அவரை மீட்க உதவி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த பதிவில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தையும் அவர் இணைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருவதாக, வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement