dinamalar telegram
Advertisement

நீட் தேர்வு ரத்து நடவடிக்கை: பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Share
சென்னை:'தி.மு.க., அரசு, மத்திய அரசுக்கு தேவையான அழுத்தம் கொடுத்து, 'நீட் தேர்வு ரத்து' என்று அறிவிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:'ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என,தி.மு.க., தலைவர் மேடைக்கு மேடை முழங்கினார். அதை நம்பித்தான், தி.மு.க.,விற்கு மக்கள் ஓட்டளித்தனர். இன்று ஆட்சிக்கு வந்ததும், அ.தி.மு.க., என்ன வழியை பின்பற்றியதோ, அதே வழியை தி.மு.க.,வும் பின்பற்றுகிறது. வெறும் சம்பிரதாயத்திற்காக, இந்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு உள்ளது என்று மக்கள் கருதுகின்றனர்.

அடுத்தபடியாக, கல்வியை மாநில பட்டியலுக்கு திரும்பக் கொண்டு வர தி.மு.க., நடவடிக்கை எடுக்கும் என, முதல்வர் கூறி உள்ளார். மத்திய அமைச்சரவையில், 17 ஆண்டுகள் அங்கம் வகித்த தி.மு.க., அப்போதெல்லாம் இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.இப்போது, மத்திய அரசில் அங்கம் வகிக்காத சூழ்நிலையில், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்பது, தும்பை விட்டு வாலை பிடிப்பதற்கு சமம்.

தற்போது, தி.மு.க., கூட்டணிக்கு 38 லோக்சபா எம்.பி.,க்கள் உள்ளனர். அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் வர உள்ளது.இந்நிலையில், மத்திய அரசுக்கு தேவையான அழுத்தம் கொடுத்து, 'நீட் தேர்வு ரத்து' என்று அறிவிக்க வைக்கவும், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை அமையவும், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

'தி.மு.க.,வினர் அடாவடி'பன்னீர்செல்வத்தின் மற்றொரு அறிக்கை:தஞ்சாவூர், சூரக்கோட்டையை சேர்ந்த ஆனந்தன், மன்னார்குடி- பட்டுக்கோட்டை பிரிவு சாலையில், டீக்கடை நடத்தி வருகிறார். இந்தக் கடைக்கு, மன்னார்குடி நகர தி.மு.க., இளைஞர் அணி செயலர் சுதாகர் உள்ளிட்ட எட்டு பேர் சென்று, தகராறில் ஈடுபட்டுள்ளனர். தட்டிக்கேட்ட கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களை கடுமையாக தாக்கி உள்ளனர்.

கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். இதையறிந்த கிராம மக்கள், தி.மு.க.,வினரை பிடித்து, போலீசில் ஒப்படைத்துள்ளனர்.இருவர் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சம்பந்தப்பட்டோர் ஆளும் கட்சியில் உள்ளதால், வழக்கை நீர்த்து போகச் செய்து, மீண்டும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவரோ என்ற அச்சம், அப்பகுதி மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இதில், முதல்வர் தலையிட்டு, அப்பகுதியில் நிலவும் பதற்றத்தை போக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    எது நல்லது என்று அறியாத தமிழ் மக்கள்...ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள்

  • Aarkay - Pondy,இந்தியா

    +2 தேர்வு முடிவுகளுக்கு பின்னரும், மாணவக்கண்மணிகளின் தற்கொலை மரணங்கள் தொடர்கின்றன. எனவே, +2 தேர்வுகளையும் ரத்து செய்துவிடலாம்

  • suresh kumar - Salmiyah,குவைத்

    உண்மையை சொன்னால் ஒட்டு கிடைக்காது என்று பயம் 'தீர்மானம்' என்ற போர்வைக்குள் ஒளிந்துகொள்ளும் கழகங்கள் அந்த 'தீர்மானம்' நாக்கு வழிக்கக்கூட உபயோகப்படாது என்று அறியாத மூட பொதுஜனம் (மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள்.). நல்ல விடியல்

Advertisement