dinamalar telegram
Advertisement

போர் அடிக்கிறதா உதயநிதி?

Share

'போர்' அடிக்கிறதா உதயநிதி?-ரவி சர்வோத்தமன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சேப்பாக்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதியால், சட்டசபையில் ரொம்ப நேரம் உட்கார முடியவில்லையாம். எதிர்க்கட்சியினர் யாரும், ஆளும் அரசினை எந்த கேள்வியும் கேட்பதில்லை; மாறாக, பாராட்டு தெரிவிக்கின்றனர்... அதனால், 'போர்' அடிக்கிறதாம் உதயநிதிக்கு!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன், இந்நாள் முதல்வர் ஸ்டாலினின் மகன் என்ற தகுதியை தவிர, வேறொன்றும் இல்லாமல், சட்டசபைக்குள் எளிதாக நுழைந்திருக்கும் உதயநிதிக்கு, போர் அடிக்கத் தான் செய்யும்.வாரிசு அடிப்படையில், எந்தவித உழைப்பும், கஷ்டமும் இல்லாமல், கட்சி மற்றும் ஆட்சி பொறுப்புகள் தேடி வருவதால், மக்கள் பிரதிநிதி என்ற அங்கீகாரம் பயனற்ற ஒன்றாகத் தான் தெரியும்.சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினுக்கு நேர் பின்புறம் இருக்கை வழங்கி, எப்போதும் கேமராவில் படும்படி அமர வைக்கப்பட்டுள்ளதால், உதயநிதி நொந்து கொள்வதில் ஆச்சரியமில்லை.ஒரு காலத்தில் கண்ணியமிக்கதாக சட்டசபை இருந்தது; அதை நாகரிகமற்ற பேச்சால், செயலால் மாற்றியது யார் என்பது உதயநிதிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சட்டசபை உறுப்பினர் பணியை பயனுள்ள வகையில் எவ்வாறு செய்வது என யோசித்து, தேவையற்ற பேச்சுகளை தவிர்த்து, உருப்படியான விஷயங்களில் கவனம் செலுத்தி செயல்பட்டால், உதயநிதிக்கு, போர் அடிக்காது.முயற்சி செய்யுங்களேன் முதல்வர் ஸ்டாலினின் செல்லப் பிள்ளையான உதயநிதி அவர்களே!

சரியானதை உடனே செய்யணும்!எஸ்.மணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ- மெயில்' கடிதம்: 'செய்திகளுக்கு மதச் சாயம் பூசுவது, நாட்டுக்கு அவப் பெயரை ஏற்படுத்துகிறது' என, உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.நாட்டின் மிக உயர்ந்த அதிகாரம் உடைய அமைப்பாக உச்ச நீதிமன்றம் கருதப்படுகிறது.உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மட்டுமல்ல, மத்திய - மாநில அரசுகள் இயற்றும் சட்டத்தைக் கூட திருத்தவும், தடை செய்யவும் உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என, மக்கள்
நம்புகின்றனர்.அத்தகைய உச்சபட்ச அதிகாரம் உடைய அமைப்பு, தம் பார்வைக்கு அநியாயமாக தோன்றும் ஒரு விஷயத்திற்கு, தானே முன்வந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுக்காமல், வெறுமனே வேதனை தெரிவித்திருப்பது சரியானது அல்ல.
பல்வேறு சந்தர்ப்பங்களில் பத்திரிகைகளில் வெளிவரும் செய்தியையே, 'ரிட்' மனுவாக ஏற்று உச்ச, உயர் நீதிமன்றங்கள் தகுந்த உத்தரவுகளை பிறப்பித்து இருக்கின்றன.'டுவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து பொய் செய்திகள் பரவி வருகின்றன. நாட்டில் எது நடந்தாலும் அதற்கு மதச் சாயம் பூசப்படுகிறது. இதை உடனடியாக தடுத்தே ஆக வேண்டும்.இதற்கு காரணம், பல சமூக ஊடகங்களின் உரிமையாளர்கள் இந்தியர்கள் அல்ல; வெளிநாட்டினர் என்பது தான்.இதற்கு முன் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, சகட்டு மேனிக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளோ, நிபந்தனைகளோ இல்லாமல் சமூக ஊடகங்களுக்கு அனுமதி அளித்து
விட்டது.பொய் செய்திகளை பரப்பும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவே, காங்., - கம்யூ., கட்சிகள் இப்போதும் 'வெண்சாமரம்' வீசுகின்றன.'உள்ளங்கை நெல்லிக்கனி'யாக, பொய் செய்தி பரப்பும் ஊடகங்கள் குறித்து தெரிந்திருக்கும் போது, அதை உடனடியாக தடை செய்யாமல், எதற்காக வேதனை மட்டும் தெரிவிக்க வேண்டும்.மலையளவு அதிகாரம் உடைய உச்ச நீதிமன்றம் சரியானதை செய்வதற்கு காத்திருக்கக் கூடாது!

முதல்வரே... ஜாதி பார்க்காதீர்!முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணி ஆகியோரின் தமிழ் படைப்புகளின் ஆங்கில மொழியாக்கம், டில்லி பல்கலையில் முதுகலை ஆங்கில பாடத் திட்டத்தில் இடம் பெற்றிருந்தன. அவை இப்போது பல்கலை ஆய்வுக் குழுவால் நீக்கப்பட்டுள்ளன; இது அவர்கள் பிரச்னை!பாமா, சுகிர்தராணி இருவரும் தலித் படைப்பாளிகள்; உண்மையில் அவர்களின் படைப்புகள் உணர்ச்சிப்பூர்வமானவை தான். ஆனால், அந்த படைப்புகளை பாடத் திட்டத்தில் சேர்ப்பதும், நீக்குவதும் பல்கலை ஆய்வுக் குழுவின் பணி; அதில் யாரும் தலையிட முடியாது.பாமா, சுகிர்தராணி படைப்புகளை டில்லி பல்கலை நீக்கியதை கண்டித்து, தமிழகத்தில் முதல்வர் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.அவற்றை மீண்டும் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.டில்லி பல்கலைக்கும், தமிழக அரசுக்கும் என்ன சம்பந்தம்? இந்தியாவின் ஏதோ ஒரு பல்கலையில் நீக்கப்பட்ட பாடத்திற்கு, இங்கிருந்து குரல்
கொடுப்பானேன்?'தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டிய கதையாக', இங்கிருப்போர் கண்டனம் தெரிவிக்க காரணம் என்ன?அவர்கள் தமிழ் படைப்பாளிகள் என்பதற்காக அல்ல; அந்த எழுத்தாளர்கள் தலித் என்பதற்காக மட்டும் தான் என்பதை அறிக.இதுவே தேவாரம், திருப்புகழ் போன்ற நுால்கள் நீக்கப்பட்டிருந்தால், இவர்கள் யாரும் குரல் கொடுத்திருக்க மாட்டார்கள். அதுவும் தமிழ் நுால்கள் தான் என்ற நினைப்பு இவர்களுக்கு வரவே வராது.
மண்டபத்தில் யாரோ எழுதி கொடுத்ததை சட்டசபையில் வாசித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.படைப்புகளை கூட இனம், மொழி, ஜாதி ஆகியவற்றால் வேறுபடுத்தி, அரசியல்வாதிகள் 'குளிர்' காய்வதை, அந்த படைப்பாளிகளே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.ஜாதி சங்குக்குள், படைப்பாளி எனும் கங்கையை அடைக்காதீர்; அவர்கள் ஜீவ நதி.'நுால்களை மதவாத கண்ணாடி அணிந்து பார்ப்பதை கைவிட வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின், டில்லி பல்கலைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதையே தான் நாங்களும்
சொல்கிறோம்.அய்யா முதல்வர் ஸ்டாலின் அவர்களே... உங்கள் குறுகிய திராவிட கண்ணாடி அணிந்து படைப்பாளிகளை பாகுபடுத்தாதீர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • sakthivel - trichy,இந்தியா

    Respected Sir, kallakudi to raja theatre bypass bus stop 4kms highway extension work all bus are send going to through raja theatre by bass kallakudi and dalmiapuram buses are not coming,police station road block no native arrangements kallakudi to by bass auto rickshaw fare rupees 200 மக்கள் ரொம்ப கஷ்டப் படுகிறார்கள் தயவு செய்து உதவி செய்யுங்கள் 🙏மாற்று ஏற்பாடு செய்யுங்கள்🙏 bus way raja theatre, kallakudi, dalmiapuram,transport office road, vadugarpet, pullambadi, lalgudi, trichy please help me🙏

  • Darmavan - Chennai,இந்தியா

    என்னை பொறுத்த வரை பார்லிமென்ட் அதிகாரம் படைத்தது காரணம் அதுதான் மக்கள் அதிகாரம் உள்ளது உச்ச நீதி மன்றம் அல்ல.பார்லியமென்ட் சட்டத்தை திருத்தும் அதிகாரம் நீதிக்கு இருப்பது தவறு.அது பார்லிமென்ட் அவமதிப்பு என்பதே.

Advertisement