dinamalar telegram
Advertisement

ஒலிம்பிக்கில் வென்ற தமிழன் சுகுமார்

Share
சென்னை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை புகைப்படம் எடுக்க இந்தியாவில் இருந்து அனுமதிக்கப்பட்ட மூன்று போட்டோகிராபர்களில் ஒருவரான எஸ்.சுகுமார், தனது படங்களால் பதினைந்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ளார்.பிரபல ஸ்போர்ட்ஸ் போட்டோகிராபரான சென்னையைச் சேர்ந்த சுகுமார், இதுவரை நான்கு ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை படமெடுத்துள்ளார். இவரது கேமிராவில் பதிவாகாத விளையாட்டு பிரபலங்களே கிடையாது. சச்சின் தனது சுயசரிதைக்கான அட்டைப்படமாக இவர் எடுத்த புகைப்படத்தைத்தான் உபயோகித்துள்ளார் என்பதே இவரது திறமைக்கு சான்று.

ஒலிம்பிக் அனுபவம் குறித்து சுகுமார் கூறியது:ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் அனுபவம் வித்தியாசமானது. அரங்கு கொள்ளாத பார்வையாளர்களின் கரகோஷத்துடன் நடைபெறும் போட்டிகளையே பார்த்து படமெடுத்து பழகிய நான் முதல் முறையாக பார்வையாளர்கள் இல்லாமல் படமெடுத்தேன். காரணம்... கொரோனா.


டோக்கியோ செல்வதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்பிருந்தே கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்ளச் சொல்லி உத்தரவு வந்தது. அதன்படி சீரான இடைவெளியில் டெஸ்ட் எடுத்து அனுப்பினேன். டோக்கியோ விமான நிலையத்தில் மட்டும் என்னை அரை நாள் சோதித்து பின்னரே அனுமதித்தனர் அவர்கள் சொன்ன ஒட்டலில்தான் தங்கவேண்டும் என்றனர். வீரர்கள் போட்டோகிராபர்கள் உட்பட ஒலிம்பிக் சம்பந்தம் உள்ளவர்கள் எங்கு இருந்தாலும் பாதுகாக்கப்பட்ட பஸ் நிலையத்திற்கு வந்துவிட வேண்டும். அங்கு இருந்து புறப்படும் பஸ்சில் ஏறித்தான் மைதானத்திற்கு செல்ல வேண்டும். பல்வேறு எதிர்மறை கருத்துக்கள் பரப்பப்பட்டாலும் போட்டிகளை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று ஜப்பான் அரசு அக்கறை எடுத்து செயல்பட்டது.

விளையாட்டு வீரர்களின் ஆக் ஷன் படங்களுடன் அவர்களது முகபாவங்களை படமெடுப்பது என்பதும் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். குத்துச் சண்டை போட்டியில் முன்பெல்லாம் வெற்றி பெற்றவர்களின் கைகளை பிடித்து நடுவர் துாக்கி காண்பித்து வெற்றி பெற்றதை அறிவிப்பார். கொரோனா காரணமாக இப்போது நடுவர்கள் யார் கையையும் தொடுவதில்லை கட்டைவிரலை மட்டும் காண்பிப்பார்.

ஆனால் அது தெரியாமல் இந்திய வீராங்கனை மேரிகோம் தான் வெற்றி பெற்றதாக சந்தோஷத்தில் குதித்து பின் தோல்வி என்பதை அறிந்து துவண்டு போனார். பளுதுாக்கும் வீராங்கனை மீராபாய் குறிப்பிட்ட பளுவை துாக்கியதுமே தனக்கு பதக்கம் உறுதி என்பதை உணர்ந்து கம்பீரமாக பளுவை துாக்கி போடுவார். சிந்து வெற்றி பெற்ற அடுத்த கணமே புகைப்படக்கலைஞர்களை பார்த்து தனது சந்தோஷத்தை பதிவு செய்வார். இப்படி நமது வீரர்களை வித்தியாசமாக படமெடுத்தேன். வில்வித்தை வீராங்கனை தீபிகாவிடம் இருந்து அம்பு பறப்பதை ஒரு சேலஞ்சாக எடுத்து பதிவு செய்தேன்.

நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பில் ஈட்டி எறிதலைப் பார்த்ததுமே அவருக்கு பதக்கம் உறுதி என்பதை தெரிந்து கொண்டு நிறைய படங்கள் எடுத்தேன். அவரும் தங்கம் வென்று நாட்டை பெருமைப்படுத்தினார். அவர் தங்கியிருந்த இடத்திற்கு மறுநாள் சென்று அவர் சம்பந்தப்பட்ட படங்களை காண்பித்த போது அவருக்கு அவ்வளவு சந்தோஷம். என்னிடம் இருந்த கேமிராவை வாங்கி அவரும் சில கோணங்கள் பார்த்து மகிழ்ந்தார்.நீரஜ் சோப்ரா சம்பந்தப்பட்ட எனது படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு இதுவரை பதினைந்து லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் கூடும். கிரிக்கெட் வீரர கோஹ்லி பகிர்ந்து கொண்ட படத்தை ஐந்து லட்சம் பேர் பார்த்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது. ஆனால் இப்போது மூன்று மடங்கு அதிகமாகியுள்ளது.

பல ஆயிரக்கணக்கான படங்கள் எடுத்திருந்தாலும் அதில் தேர்ந்து எடுத்த படங்களைத்தான் இங்குள்ள ஏஜன்சி பயன்படுத்திக் கொண்டது. மக்கள் பார்க்காத பார்க்க வேண்டிய படங்கள் நிறைய இருக்கிறது அவைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு இருக்கிறேன் இந்த வேலை முடிந்ததும் நல்ல ஸ்பான்சர் கிடைத்தால் கண்காட்சி நடத்தவும் திட்டமிட்டுள்ளேன். எனது டோக்கியோ பயணத்திற்கு என்எல்சி இண்டியா, ஏர் இந்தியா என பல தரப்பிலும் உதவி கிடைத்தது. அவர்களுக்கு என் நன்றி.இவ்வாறு சுகுமார் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Sampath Kumar - chennai,இந்தியா

    தங்கம் வென்ற தமிழன்??? ஏன் இந்தியன் என்று போடவில்லை இதே தமிழக மீனவர்கள் சுடப்பட்டனர் என்று செய்தி போடும் நீங்கள் இந்தியா மீனவர்கள் சுட பட்டனர் என்று போடுவது இல்லை இதே குஜராத்தி மீனவன் என்றால் அவன் இண்டையாவின் மீனவன் ஆகும் நீங்கள் கோல்ட் மெடல் என்றவுடன் தமிழன் ஆகி விட்டர்கள் அட அட என்ன ஒரு யுக்தி

  • ம்சாதிக், சென்னை -

    வாழ்த்துகள்.. வாழ்த்துகள்.

Advertisement