தமிழகத்தில் அதிமுக அரசு கடந்த 2011ல் பொறுப்பேற்றதில் இருந்து 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி அமைத்தது. அதிமுக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் துவங்கப்பட்டன. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றாலும், தமிழகத்தின் கடன் சுமை ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்தது. தற்போது திமுக ஆட்சியை பொறுப்பேற்ற நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு விட்டு சென்ற கடன்சுமை குறித்த வெள்ளை அறிக்கை, பட்ஜெட் தாக்கலுக்கு முன் வெளியிடப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். அதன்படி, ஆக.,13ல் பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில், இன்று (ஆக.,09) 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை காலை 11:30க்கு நிதியமைச்சர் வெளியிட்டார்.

செய்தியாளர்களிடம் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: இந்த வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு பலரும் உதவி செய்தனர். அறிக்கை தயார் செய்வதற்கு முன் ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வெளியிட்ட வெள்ளை அறிக்கையும், 2001ல் அதிமுக வெளியிட்ட அறிக்கையையும் ஆய்வு செய்தோம். இணையதளத்திலும் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு. தேர்தல் அறிக்கையில் கூறியதை போல வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பதற்காக வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம். வெள்ளிக்கிழமை (ஆக.,13) வெளியிட உள்ள பட்ஜெட்டில் முழுமையான திட்டங்களை வெளியிடுவோம். அதன்பின் தான் திமுக.,வின் புதிய திட்டங்கள் குறித்து தெரியும்.
வருமானம் மிகவும் சரிந்துவிட்டதே முக்கிய பிரச்னையாக உள்ளது. 2006-11 கருணாநிதி ஆட்சி காலத்தில் தமிழக அரசின் வருமானம் உபரியாக இருந்தது. 2011-16ல் அதிமுக ஆட்சியில் வருமான பற்றாக்குறை ஏற்பட்டது. 2016-21 அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.1.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறையே ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்ததால், நிதிப் பற்றாக்குறை அதைவிட பலமடங்கு உயர்ந்துவிட்டது. இந்தியாவில் வேறு எந்தவொரு மாநிலமும் இல்லாத வகையில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு கடன் வாங்கியுள்ளது. மேலும், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழக அரசின் வருவாய் 4ல் ஒரு பங்கு குறைந்துவிட்டது.


தமிழக அரசின் வருவாய் படிப்படியாக குறைந்து வருகிறது. 2008-09 திமுக ஆட்சியின்போது மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் வருவாய் 13.35 சதவீதமாக இருந்தது. 2011 வரை திமுக ஆட்சியில் 11.41 சதவீதமாக இருந்த வருவாய், அதிமுக ஆட்சியில் 3.8 சதவீதமாக சரிந்துள்ளது. உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் பாதி அளவுக்கு கூட வரி வருவாய் இல்லை. 2006-11 திமுக ஆட்சியில் 7.98 சதவீதமாக இருந்த வரி வருவாய் அதிமுக ஆட்சியில் 6.15 சதவீதமாக சரிந்துவிட்டது. அதேபோல், வணிக வரி மூலம் கிடைக்கும் நிதி 4.49 சதவீதத்தில் இருந்து 4.19 சதவீதமாக குறைந்துவிட்டது. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி 33 சதவீதம் குறைந்துள்ளது.

மத்திய அரசு செஸ் வரி என்ற பெயரில் மாநிலங்களுக்கான வரி பங்கீட்டை வெகுவாக குறைத்துவிட்டது. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய வரிப்பங்கு 33 சதவீதம் குறைந்துவிட்டது. பெட்ரோல், டீசல் வரியில் மத்திய அரசுக்கே பெரும்பங்கு போகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது வரியாக விதிக்கப்படும் ரூ.32ல் வெறும் 50 பைசாவை மட்டுமே அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பிரித்து கொடுக்கிறது. மீதமுள்ள ரூ.31.50 மத்திய அரசே எடுத்துக்கொள்கிறது. அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மானியங்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேர்ந்ததா என்பது குறித்து விவரங்கள் இல்லை.
அந்த ஆட்சியில் சொத்து வரி முறையாக வசூலிக்கப்படவும் இல்லை, உயர்த்தப்படவும் இல்லை. இதில் அதிமுக அரசு அலட்சியம் காட்டியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மின்வாரியம், குடிநீர் வாரியத்துக்கு ரூ.1,743 கோடி பாக்கி வைத்துள்ளன. ஒரு யூனிட் மின்சாரம் வாங்கி விநியோகிப்பதில் மின்வாரியத்துக்கு ரூ.2.36 இழப்பு ஏற்படுகிறது. அதேபோல், போக்குவரத்துத்துறை நிர்வாகத்தை உடனடியாக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கி.மீ.,க்கும் அரசு பேருந்துகளை இயக்க ரூ.59 நஷ்டம் ஏற்படுகிறது. மின்சார வாரியம், போக்குவரத்து துறையின் கடன் மட்டும் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. தமிழக அரசு வாங்கிய கடன்களுக்காக ஒரு நாளைக்கு ரூ.87 கோடி வட்டி செலுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பிறகு, செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்: எல்லாருக்கும் எல்லாம் என்ற நிலையை உலகின் எந்த அரசாங்கமும் செய்ய முடியாது. இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகம் வளர்ந்த மாநிலமாகவும், ஏற்றத்தாழ்வாகவும் உள்ளது. தற்போது வெளியிட உள்ள பட்ஜெட் 6 மாதங்களுக்கானது. பல துறைகளில் கடந்த 10 ஆண்டுகளாக வரி உயர்த்தவில்லை என்பது உண்மை தான், அதனை சீரமைக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sir, loan கடன் தளளுபடி செய்யுகள் please.....