dinamalar telegram
Advertisement

தன்னார்வலர்கள், நிறுவனங்களுக்கு மாநகராட்சி... அழைப்பு! ரிசர்வ் சைட்டுகளில் குறுங்காடு உருவாக்க முடிவு

Share
Tamil News
கோவை:கோவை மாநகராட்சி பகுதியில், முதல்கட்டமாக, 100 'ரிசர்வ் சைட்'டுகளில், 'மியாவாக்கி' முறையில், குறுங்காடு உருவாக்கும் திட்டத்தில், மரக்கன்றுகள் நடுவதற்கு, இயற்கை ஆர்வலர்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

கோவை மாநகராட்சி பகுதியில், 1,000 ஏக்கருக்கு மேலாக, பொது ஒதுக்கீடு இடங்கள் (ரிசர்வ் சைட்) இருக்கின்றன. இணைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 'ரிசர்வ் சைட்'டுகளின் பரப்பை சேர்த்தால், இன்னும் பல நுாறு ஏக்கர் கிடைக்கும். இவற்றின் விபரம், மாநகராட்சி பதிவேட்டில் இருந்தாலும், நேரடியாக சென்று பார்த்தால், அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.பல இடங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன; பல இடங்கள் போலி பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்பதற்கான ஆயத்த பணிகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், தற்போது பராமரிப்பில் உள்ள 'ரிசர்வ் சைட்'டுகளை அடையாளம் கண்டு மேம்படுத்த, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் முடிவு செய்துள்ளார்.

முதல்கட்டமாக, 100 சைட்டுகளை தேர்வு செய்து, 'மியாவாக்கி' முறையில் மரக்கன்றுகள் நட்டு, குறுங்காடுகள் உருவாக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளார். இப்பணியை மேற்கொள்ள தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கூறுகையில், ''முதல்கட்டமாக, 100 'ரிசர்வ் சைட்'டுகள் பட்டியல் தயார் செய்துள்ளோம். தன்னார்வலர்கள், நிறுவனத்தினர் தாமாக முன்வந்து, அவர்களது செலவில் மரக்கன்று நட்டு, தொடர்ச்சியாக பராமரிக்க வேண்டும். இதுதொடர்பாக, மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும். சில சைட்டுகள், வேலி வசதிகளுடன் இருக்கின்றன; சிலவற்றில் இல்லை. தண்ணீர் வசதி மாநகராட்சியே செய்து கொடுக்கும். விருப்பமுள்ள நிறுவனத்தினர் மாநகராட்சியை தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.

வரவேற்கத்தக்கது!
'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறியதாவது:அண்ணா பல்கலை வளாகத்தில், 85 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, நன்கு வளர்ந்துள்ளன. மறைந்த முன்னாள் ஜனாதிபதி கலாம் பிறந்த நாளுக்கு முன், ஒரு லட்சம் மரக்கன்று நடுவதற்கு திட்டமிட்டு உள்ளோம்.மாநகராட்சி பகுதியில் உள்ள ரிசர்வ் சைட்டுகள் புதர்மண்டிக் கிடக்கின்றன. சில இடங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. அவ்விடங்களை மீட்டு, மரக்கன்று நட்டு பராமரிக்க வேண்டுமென, பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தோம்.

முதல்கட்டமாக, 100 'ரிசர்வ் சைட்'டுகளில், 'மியாவாக்கி' முறையில் மரக்கன்று நட, மாநகராட்சி முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்றுவோம். பச்சாபாளையத்தில் எஸ்.பி.பி., வனம் உருவாக்கிக் கொடுத்தோம்; அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து, பராமரித்து வருகின்றனர். அதேபோல், அந்தந்த ஏரியாவை சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்கத்தினரிடம் பராமரிக்கும் பொறுப்பை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Ram Pollachi -

    குளம் எல்லாம் தூர்வாரி மூடியாச்சு! அடுத்து ரிசர்வ் சைட்டில் சந்தன மரத்தை வைத்து பாதுகாப்பு போடுங்க! ஒரே கல்லில் இரண்டு தேங்காய்.

Advertisement