Load Image
Advertisement

தடை: மாவட்ட கோவில்களில் ஆடி மாத விழா நடத்த...கண்காணிப்பு குழு அமைத்து கலெக்டர் உத்தரவு

  தடை: மாவட்ட கோவில்களில் ஆடி மாத விழா நடத்த...கண்காணிப்பு குழு அமைத்து கலெக்டர் உத்தரவு
ADVERTISEMENT
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, கோவில்களில் சுவாமி தரிசனத்தைத் தவிர்த்து விழாக்கள் நடத்த கலெக்டர் தடை விதித்துள்ளார்.


இதை கண்காணிக்க சிறப்பு குழுவும் அமைக்கவும், உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31ம் தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அனைத்து அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் பெருமளவில் கூடுகின்றனர்.இதனால், கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கூட்டம் கூடுவதைக் கண்காணிக்க வட்ட அளவில் வருவாய்த்துறை, காவல் துறை, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்க கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.இக்குழுவினர் கொரோனா தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைக் கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.இதற்காக, மாவட்டத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை கலெக்டர் அறிவித்துள்ளார்.அதன்படி, மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தரிசனத்திற்கு 10 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர்களை அனுமதிக்கக் கூடாது.பக்தர்கள் கோவில் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொங்கல் வைக்கவோ, மாவிளக்கு, தேங்காய், பூ, பழங்கள் கொண்டு வரவோ, சித்தாங்கு, கபால வேடமிட்டு வரவோ மற்றும் கரகம் எடுத்து வரவோ கோவில் நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது.கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஆடு, கோழி பலியிட, காது குத்துதல் மற்றும் முடி காணிக்கை செய்ய அனுமதிக்கக் கூடாது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்


.கோவில் நிர்வாகத்தினர் தடுப்புக் கட்டைகள் அமைத்து, பெயிண்டால் வட்டங்கள் வரைந்து அதிகம் கூட்டம் கூடுவதைத் தடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும். இரவு நேரங்களில் பக்தர்கள் தங்குவதை அனுமதிக்கக் கூடாது.கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால், கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான கடைகளையும், அனுமதியின்றி உள்ள கடைகளையும் மூட வேண்டும்.பி.டி.ஓ.,க்கள் கோவில் வளாகத்திற்கு வெளிபுறம் துாய்மைப் பணியாளர்களைக் கொண்டு துாய்மைப் பணி மேற்கொண்டு கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.


இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது. பொதுமக்கள் நலன் கருதி மருத்துவக் குழு அமைக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த விதிமுறைகளை பின்பற்றுமாறு, மாவட்டத்தில் உள்ள வருவாய்த் துறை, காவல் துறை, சுகாதார துறை அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


-நமது நிருபர்-


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement