dinamalar telegram
Advertisement

இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Share
தமிழக நிகழ்வுகள்
1. ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டவர் கைது
திண்டுக்கல் : 'ஆன்லைனில்' இருசக்கர வாகனம் விற்பனை செய்வதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த ஆனந்தபாபுவை, திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் தினேஷ். கடந்த மாதம் இணையதளத்தில் ஓ.எல்.எக்ஸ்., செயலியில் குறைந்த விலையில் யமஹா இருசக்கர வாகனம் விற்பனை விளம்பரத்தை பார்த்தார். அதில் இருந்த உரிமையாளர் எண்ணை தொடர்பு கொண்டார்.அந்த நபர், 'தான் மதுரையில் இருப்பதாகவும், முன்பணமாக ரூ.20 ஆயிரத்தை தனது வங்கிக் கணக்கிற்கு செலுத்த வேண்டும்' எனவும் கூறினார்.

இதனை நம்பி பணம் செலுத்தியதும், அந்த எண் 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டு விட்டது. ஏமாற்றப்பட்டதை அறிந்த தினேஷ், திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.ஏ.டி.எஸ்.பி., சந்திரன் அறிவுறுத்தலின்படி இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் எஸ்.ஐ., ரெய்கானா, போலீசார் ராஜசேகர், விக்னேஷ் கொண்ட தனிப் படையினர் விசாரித்தனர். அந்த தொலைபேசி எண், உரையாடல் பற்றி விசாரணை நடந்தது. மோசடி செய்தவர் சென்னை வீராபுரம் ஆனந்தபாபு 25,எனத் தெரிந்தது. அவரை கைது செய்து, திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரிடம் ரூ. 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

2. சிறுமி பலாத்காரம் மாஸ்டருக்கு 20 ஆண்டு சிறை
திருச்சி : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டான்ஸ் மாஸ்டருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி, சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த, 6 வயது சிறுமி, இ.பி., ரோட்டில் உள்ள நடனப் பயற்சி பள்ளி ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார். 2019ம் ஆண்டு மே 30ல் பயிற்சிக்கு சென்று திரும்பிய சிறுமி, டான்ஸ் மாஸ்டர் சரவணகுமார், 22 தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், உடலில் வலி இருப்பதாகவும் கூறி அழுதுள்ளார். சிறுமியின் தாய், கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
'போக்சோ' வழக்கில், சரவணகுமாரை கைது செய்தனர்.வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவத்சன், சரவணகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறுமிக்கு, 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

3. டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறிப்பு
மதுரை : டெய்லரை மிரட்டி 10 லட்சம் ரூபாய் பறித்த பெண் இன்ஸ்பெக்டர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியைச் சேர்ந்தவர் அர்ஷத், 32; டெய்லர். இவர் பேக் தயாரிக்கும் கம்பெனி வைக்க சிலரிடம், 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.கூடுதல் பணத்துக்காக, பாண்டி என்பவருடன், ஜூலை 5ல் நாகமலை புதுக்கோட்டைக்கு வந்தார். அப்போது, அங்கு வந்த இன்ஸ்பெக்டர் வசந்தி, விசாரிக்க வேண்டும் எனக் கூறி அர்ஷத், பாண்டி, அவரது நண்பர் கார்த்திக்கை ஜீப்பில் அழைத்துச் சென்றார். சிறிது துாரம் சென்றதும், 10 லட்சம் ரூபாயை பறித்து, அர்ஷத்தை மட்டும் இறக்கி விட்டார்.
பணத்தை கேட்டதற்கு தங்கம், கஞ்சா கடத்தியதாக கைது செய்து விடுவேன் என மிரட்டினார். எஸ்.பி., பாஸ்கரனிடம் அஷ்ரத் புகார் செய்தார். ஏ.டி.எஸ்.பி., சந்திரமவுலி விசாரித்தார்.வசந்தி, பாண்டி, கார்த்திக் உட்பட ஐந்து பேர் மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் வசந்தி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

போலீசார் கூறியதாவது: பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக சிலர் கூறியதை நம்பி, அர்ஷத் 10 லட்சத்துடன் நாகமலை புதுக்கோட்டைக்கு வந்துள்ளார். இதை பாண்டி, கார்த்திக் உள்ளிட்டோர் மூலம் அறிந்த இன்ஸ்பெக்டர் வசந்தி, விசாரிப்பது போல் அழைத்துச் சென்று மிரட்டி பணம் பறித்துள்ளார்.பணத்தை இரட்டிப்பு செய்வது குற்றம் என்பதால், இவ்விவகாரத்தை வெளியே சொல்ல மாட்டார் என நினைத்துள்ளார். தொடர்ந்து, விசாரணை நடக்கிறது. இவ்வாறு, அவர்கள்கூறினர்.

4. பைனான்ஸ் நிறுவன மோசடி இருவர் கைது
தஞ்சாவூர்: பைனான்ஸ் நிறுவன மோசடி வழக்கில், தொழிலதிபரின் மனைவி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கணேஷ், 50; சுவாமிநாதன், 47. இவர்கள் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தனர். கணேஷ் பா.ஜ., வர்த்தக பிரிவு பொறுப்பில் இருந்து, தற்போது நீக்கப்பட்டுள்ளார்.இந்த பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த, ஜபருல்லா - பைரோஜ்பானு தம்பதி, 15 கோடி ரூபாயை கணேஷ், சுவாமிநாதன் இருவரும் ஏமாற்றி விட்டதாக, தஞ்சாவூர் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தனர்.

மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, கணேஷ், சுவாமிநாதன் வீடுகளில் இருந்து, 12 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். பைனான்ஸ் நிறுவன மேலாளர் உட்பட மூவரை ஏற்கனவே கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள கணேஷ், சுவாமிநாதன் இருவரையும் தேடி வருகின்றனர். இந்நிலையில், பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரான கணேஷ் மனைவி அகிலா, 33, மற்றும் ஏஜன்டாக செயல்பட்ட கும்பகோணத்தைச் சேர்ந்தவெங்கடேசன், 58, ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் இரவு, கும்பகோணத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

5. ஸ்ரீவி.,யில் 2 டன் 'குட்கா' பறிமுதல்: ஒருவர் கைது
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் 150க்கு மேற்பட்ட மூடைகளில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த 2 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராஜபாளையம் ரோட்டில் உள்ள தனியார் அரிசி ஆலை வளாக கோடவுனில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., நமச்சிவாயம் தலைமையில் டவுன் போலீசார் சோதனை நடத்தினர். ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 2 டன் குட்காவை பறிமுதல் செய்தனர். இந்திரா நகரை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் 39, கோடவுனை மாத வாடகைக்கு எடுத்து குட்காவை இருப்பு வைத்து கடை களுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது.
நவநீத கிருஷ்ணனை கைது செய்த போலீசார், ரூ.7 .46 லட்சம், டூவீலரை பறிமுதல் செய்தனர். 2020லும் இதே பிரச்னை தொடர்பாக நவநீத கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவில் குற்றம் :
அசாம் எல்லையில் 'பந்த்'
கவுஹாத்தி: வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா இடையே எல்லை பிரச்னை தொடர்பாக, சமீபத்தில் நிகழ்ந்த வன்முறையில், அசாமில் ஆறு போலீசார் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எல்லையில் பராக் பள்ளத்தாக்கில் உள்ள அசாமின் மூன்று மாவட்டங்களில், நேற்று 12 மணி நேர 'பந்த்' நடந்தது. இதனால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

    yemmaruvaarkal irundal

Advertisement