dinamalar telegram
Advertisement

கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் உடல் கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம்

Share
அண்ணா நகர்: கொரோனா தொற்றால் உயிரிழந்த டாக்டர் சைமனின் உடல், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வேலங்காடு மயானத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் டாக்டர் சைமன் ஹெர்குலிஸ், 55. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த ஆண்டு ஏப்ரலில் உயிரிழந்தார். தொற்று பயம் காரணமாக அவரது உடலை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் புதைக்க, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வேலங்காடு மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சைமனின் உடலை தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்யக்கோரி, டாக்டரின் மனைவி ஆனந்தி, மாநகராட்சியில் மனு அளித்தார். இந்த மனுவை, மாநகராட்சி நிராகரித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆனந்தி மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்துாஸ், வேலங்காடு மயானத்தில் புதைக்கப்பட்ட சைமனில் உடலை தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய, மாநகராட்சிக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை மாநகராட்சி மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், மஞ்சுளா அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தது.
இவ்வழக்கு, டிவிஷன் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதாக, மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
அதை தொடர்ந்து வேலங்காடு மயானத்தில் இருந்து சைமனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், கீழ்ப்பாக்கம் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, அவரது மனைவி மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில், சைமனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement