dinamalar telegram
Advertisement

உத்தரவு! இயந்திரகதியில் உத்தரவுகள் பிறப்பிக்காதீங்க! மாஜிஸ்திரேட்டுகளுக்கு ஐகோர்ட் அறிவுரை

Share
Tamil News
சென்னை;'இயந்திரகதியாக உத்தரவுகள் பிறப்பிக்கக் கூடாது' என, மாஜிஸ்திரேட்டுகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் ஆர்த்தி. அதிக வட்டி கேட்பதாகவும், சொத்து அபகரிப்பு செய்வதாகவும், பாலசுப்ரமணியன் என்பவருக்கு எதிராக, ஆர்த்தியின் தந்தை, திருவண்ணாமலை எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், திருவண்ணாமலை, முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், புகார் மனு தாக்கல் செய்தார்.விசாரணையை துரிதப்படுத்தவும், குற்றத்துக்கான முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், புகாரை முடித்து வைத்தால், அதன் அறிக்கையை மனுதாரருக்கு அளிக்கவும், இன்ஸ்பெக்டருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இதற்கிடையில், தந்தை இறந்து விடவே, அவர் அளித்த புகார் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் ஆர்த்தி மனு தாக்கல் செய்தார்.இம்மனுவை விசாரித்த, நீதிபதி நிர்மல்குமார், 'திருவண்ணாமலை முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவு, அச்சிடப்பட்ட படிவமாக உள்ளது. இதுகுறித்து, திருவண்ணாமலை தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டார்.இதையடுத்து, தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், இதுபோன்ற பல உத்தரவுகள் பிறப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டும் ஆஜராகி, பணி அழுத்தம் காரணமாக, உத்தரவு பிறப்பித்ததாகவும், உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் கூறினார்.அதைத்தொடர்ந்து, நீதிபதி நிர்மல்குமார் பிறப்பித்த உத்தரவு:குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, புலன் விசாரணைக்கு உத்தரவிடும் போது, ஆவணங்களை பரிசீலித்து, புகார்தாரர் தரப்பை கேட்க வேண்டும் எனவும், எதனால் புலன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது என்பதும், மாஜிஸ்திரேட் உத்தரவில் பிரதிபலிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மாஜிஸ்திரேட்டுகள் பலர், குற்றவியல் நடைமுறை சட்டத்தை தெரிந்து கொள்ளாமல், உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர். உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவு பிறப்பித்தும், மாஜிஸ்திரேட் பிறப்பிக்கும் உத்தரவுகளை பார்ப்பதற்கு வருத்தமாக உள்ளது.குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழான அதிகாரங்களை செயல்படுத்தும் போது, மாஜிஸ்திரேட்டுகள் விழிப்புடன், கவனமுடன் இருக்க வேண்டும். எதிர்காலத்தில், இயந்திரகதியான உத்தரவுகளை, மாஜிஸ்திரேட்டுகள் பிறப்பிக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.கடந்த, மே 24ம் தேதி, மனுதாரர் அளித்த புகாரை, திருவண்ணாமலை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பரிசீலிக்கும்படி உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • அப்புசாமி -

    ஒருவகையில் இயந்திரத் தனமான தீர்ப்புகளே மேல். இயந்திரங்கள் விருப்பு வெறுப்பு இல்லாம செயல்படும். சாதி, மதம்னா அதுக்கு என்னன்னு தெரியாது. வீட்டுல பொண்டாட்டியோட சண்டை போட்டுட்டு நீதிமன்றத்துக்கு வந்து ஏடா கூடமா தீர்ப்பு சொல்லாது. பேப்பர் படிச்சுட்டு தீர்ப்பு சொல்லாது. ஊடகங்களைப் பாத்துட்டு சரமாறியா கேள்வி கேடு விசாரணை யை தள்ளி வெக்காது.

Advertisement