dinamalar telegram
Advertisement

9.23 லட்சம் குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் தடுப்பூசி

Share
Tamil News
சென்னை:''தமிழகத்தில், 5 வயதிற்கு உட்பட்ட, 9.23 லட்சம் குழந்தைகளுக்கு, நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சலை தடுக்கும், 'நியூமோகோக்கல்' தடுப்பூசி செலுத்தப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், 'நியூமோகோக்கல் கான்ஜூகேட்' தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார். பின், மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

பின், அமைச்சர் அளித்த பேட்டி:இந்தியாவில், 5 வயதிற்கு உட்பட்ட, 12 லட்சம் குழந்தைகள், நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களால், பாதிக்கப்பட்டு இறந்து உள்ளன. தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், பல்வேறு மாநிலங்களில், அதற்காக நியூமோகோக்கல் தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழகத்தில், 5 வயதிற்கு உட்பட்ட, 9.23 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த தடுப்பூசியை, இரண்டு ஆண்டிற்கு முன் போட்டு இருக்க வேண்டும். ஆனால், என்ன காரணத்தால், இ.பி.எஸ்., அரசு செய்யவில்லை என்பது தெரியவில்லை.தற்போது, 70 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. முதல் தவணை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

தனியார் மருத்துவமனைகளில், மூன்று தவணையாக தடுப்பூசி போடுவதற்கு, 12 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த, 5 வயது பெண் குழந்தை, 'பிளீச்சிங் பவுடர்' சாப்பிட்டதால், உடல் நலிவுற்று, எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.குடல் சுருங்கி, உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. டாக்டர்களின் தீவிர சிகிச்சையால், குழந்தை தற்போது நலமுடன் உள்ளது.

குழந்தையின் பெற்றோர், எனக்காக ஒதுக்கப்பட்டுள்ள, எம்.எல்.ஏ., விடுதி அறையில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தசைச் சிதைவு நோயால், சென்னையில், 200 பேர் உட்பட, மாநிலம் முழுதும், 2,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு, அரசு மருத்துவமனைகளில் வசதிகள் உள்ளன. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை, முதல்வர் விரைவில் துவக்கி வைக்க உள்ளார். அதற்கான அடிப்படை கட்டமைப்பை, துறை மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement