dinamalar telegram
Advertisement

கருணாநிதி படம் திறப்பு ஆக., 2ல் ஜனாதிபதி பங்கேற்பு

Share
சென்னை:தமிழக சட்டசபையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்தை, ஆகஸ்ட் 2ம் தேதி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின், 19ம் தேதி டில்லியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அப்போது, சென்னை மாகாண சட்டசபை இயங்க துவங்கி, 100 ஆண்டுகள் ஆனதையொட்டி நடக்க உள்ள, நுாற்றாண்டு விழாவில் பங்கேற்கவும், சட்டசபையில் கருணாநிதி படத்தை திறந்து வைக்கவும் அழைப்பு விடுத்தார்.மேலும், மதுரையில் அமைய உள்ள கருணாநிதி பெயரிலான நுாலகம், சென்னையில் பல்நோக்கு மருத்துவமனை, 75வது சுதந்திர தின விழா நினைவுத்துாண் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டவும் கேட்டுக் கொண்டார்.

அதை ஏற்று, விழாவிற்கு வர, ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், ஆகஸ்ட் 2ம் தேதி சட்ட சபையில் கருணாநிதி படத்தை, ஜனாதிபதி திறந்து வைப்பார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


இது குறித்து, சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி:தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா மற்றும் ஐந்து முறை முதல்வராக இருந்து சிறப்பாக பணியாற்றிய, முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு விழா நிகழ்ச்சி, ஆக., 2 மாலை, 5:00 மணிக்கு, சட்டசபை வளாகத்தில் சிறப்பாக நடக்க உள்ளது. விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கருணாநிதி படத்தை திறந்து வைக்க உள்ளார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் விழாவிற்கு தலைமை வகிக்கவும், முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகிக்கவும் இசைவு தந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.அன்றைய தினமே, 75வது சுதந்திர தின விழா நினைவுத்துாண்; சென்னை, கிண்டியில் அமைய உள்ள பல்நோக்கு மருத்துவமனை; மதுரை யில் அமைக்கப்பட உள்ள கருணாநிதி பெயரிலான நுாலகம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும், ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Ravanan Ramachandran - Chennai,இந்தியா

    ஐயா ஆசிரியரே ...கருணாநிதி படத்தை ஜனாதிபதி சட்டசபையில் திறந்து வைக்கின்றார் என பெரிய எழுத்தில் போடுகிண்றீரரே ...இது தான் பத்திரிக்கை தர்மமா ? முன்னாள் முதல்வர் என பெரிய எழுத்தில் போட உங்களுக்கு மனம் வரவில்லையா?...ஐந்து முறை தமிழ் நாட்டின் முதல்வராக இருந்தவரை இப்படி மொட்டையாக கருணாநிதி என பெயரிட்டு விட்டீர்களே ...

Advertisement