dinamalar telegram
Advertisement

பிரதமரின் திட்டத்தில் போலிகள்: பணத்தை மீட்டதில் தமிழகம் முதலிடம்

Share
சென்னை:பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்ட முறைகேடில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, பணத்தை மீட்டு மத்திய அரசிடம் வழங்கியதில், தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.

பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தை 2018 டிசம்பர் முதல், மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தலா 2,000 ரூபாய், விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

உதவித்தொகை



இத்திட்டத்தில், விவசாயி அல்லாதவர்கள் சேர்க்கப்பட்டு 3,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்து உள்ளது. அசாம், பஞ்சாப், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், குஜராத் மற்றும் தமிழகத்தில், அதிகளவில் போலியாக பலரும் சேர்க்கப்பட்டு உள்ளனர். இது குறித்த தகவலை, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், சமீபத்தில் லோக்சபாவில் தெரிவித்தார். அதேநேரத்தில், போலியாக சேர்ந்தவர்களை கண்டறிந்து, தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால், இதுவரை 181 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்ட வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது.

போலி பயனாளிகளிடம் பணத்தை மீட்ட தில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. மற்ற மாநிலங்கள், பணத்தை மீட்க முடியாமல் திணறி வருகின்றன.இது குறித்து வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கொரோனா முதல் அலை ஊரடங்கு காலத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார், சேலம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தர்மபுரி மாவட்டங்களில் 6.40 லட்சம் பேர், இத்திட்டத்தில் முறைகேடாக சேர்ந்து உள்ளனர். அப்போதைய வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, இயக்குனர் தட்சிணாமூர்த்திக்கு தகவல் கிடைத்ததும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வாயிலாக நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

பணிநீக்கம்



இடைத்தரகர்களும், தனி நபர்களும், தனியார் பொது சேவை நிறுவனங்களும் 'ஆன்லைன்' வாயிலாக முறைகேடில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக, ஏழு அரசு அலுவலர்கள், 36 ஒப்பந்த ஊழியர்கள், 15 தனியார் பொது சேவை மைய உரிமையாளர்கள், 65 இடைத்தரகர்கள் என மொத்தம் 123 பேர் கைது செய்யப்பட்டனர். பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட மூன்று வேளாண் உதவி இயக்குனர்கள், ஒரு துணை வேளாண் அலுவலர், 10 உதவி வேளாண் அலுவலர் என மொத்தம் 14 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இத்திட்டத்தில் போலியாக சேர்ந்த 6.40 லட்சம் பேரிடம் இருந்து 163 கோடி ரூபாய் திரும்ப வசூலிக்கப்பட்டு, பிரதமரின் உதவித்தொகை திட்ட வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. வருமான வரி செலுத்துபவர்கள், இத்திட்டத்தில் சேர முடியாது. வருமான வரி செலுத்தும் பயனாளிகள் விபரங்களை ஒப்பிட்டு, மத்திய அரசு எடுத்த நேரடி நடவடிக்கையால், மேலும் 82 ஆயிரம் பேர் போலியாக சேர்ந்தது கண்டறியப்பட்டுஉள்ளது.

பறிமுதல்



இவர்களிடம் இருந்து இதுவரை 18 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழகத்தில் மொத்தமாக, 181 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. முறைகேடாக சேர்ந்தவர்களிடம் பணத்தை பறிமுதல் செய்ததில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. அதேநேரத்தில், உண்மையான விவசாயிகள் 38.24 லட்சம் பேருக்கு, தொடர்ந்து திட்ட பயன் கிடைக்கவும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement