dinamalar telegram
Advertisement

லாட்டரி சீட்டை அனுமதிக்க வேண்டாம்: பழனிசாமி

Share
சென்னை: ‛'லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வர, அரசு முயற்சிக்க வேண்டாம். மீண்டும் கொண்டு வந்தால், தமிழக மக்களின் மிகப்பெரிய எதிர்ப்பை, ஸ்டாலின் அரசு சந்திக்க நேரிடும்,'' என, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
ஒரு உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட, லாட்டரி சீட்டு திட்டத்தில், கருணாநிதி முதல்வராக இருந்த போது, தனியாரை நுழைய அனுமதித்து, லாட்டரி சீட்டு திட்டத்தை சீரழித்தார். ஒரு சீட்டின் விலை, 10 ரூபாய்; பரிசு, ஒரு கோடி ரூபாய் என, மக்களிடம் பேராசை துாண்டப்பட்டது. ஒரு ரூபாய்க்கு, 1 லட்சம், மாதம் ஒரு முறை குலுக்கல் என்ற நிலை மாறி, ஒரு நம்பர் லாட்டரி முதல், 50 விதமான லாட்டரி விற்பனை, தமிழகத்தில் நடந்தது. தனியார் லாட்டரி ஏஜன்ட்கள், வெளிமாநில லாட்டரி சீட்டுகளை, கள்ளநோட்டு அச்சடிப்பது போல அச்சிட்டு, மக்களிடம் விற்றனர். உடனடியாக கோடீஸ்வரர்கள் ஆகலாம் என்ற, ஆசை வார்த்தைகளை நம்பிய, அப்பாவி ஏழை மக்கள், லாட்டரி மயக்கத்தில், தங்கள் குடும்பத்தையும், வாழ்வையும் இழந்தனர்.

'விடியா அரசு'



கடந்த, 2003 ஜனவரி மாதம், ஒரே கையெழுத்தில், ஒரே இரவில், லாட்டரி சீட்டை, தமிழகத்தில் ஒழித்த பெருமை, ஜெ.,வை சேரும். இந்த சட்டத்திற்கு எதிராக, லாட்டரி கொள்ளையர்கள், உச்ச நீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்து தோல்வியை சந்தித்தனர். ஜெ., ஆட்சியில் ஏழை மக்கள், பல ஆண்டுகளாக, லாட்டரி அரக்கனின் பிடியில் இருந்து தப்பி, நல்வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்களின் தலையில், மண்ணை வாரிக் கொட்ட, சந்தர்ப்பவசத்தால் தற்போது பதவியில் அமர்ந்துள்ள, தி.மு.க.,வின், 'விடியா அரசு' முடிவு செய்து உள்ளதாக, தகவல்கள் வருகின்றன. எதிர்ப்பு ஆட்சிக்கு வருவதற்கு முன், 'அரசுக்கு வருவாயை பெருக்கும் வழி, எங்களுக்கு தெரியும்' என்று கொக்கரித்தவர்கள், லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வந்து, நாட்டை சுடுகாடாக்க முடிவு செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தனியார் லாட்டரி ஏஜன்ட்கள் கொள்ளை அடிக்கவும், அதன் வழியே, ஆட்சியாளர்கள் பெருத்த ஆதாயம் பெறுவதற்குமான, இந்த அதிகாரப்பூர்வ லாட்டரி சீட்டு திட்டத்தை, தி.மு.க., அரசு கைவிட வேண்டும். அரசின் வருவாயை பெருக்க, வேறு பல நல்ல வழிகளைத் தேட வேண்டும். ஜெ., ஒழித்த லாட்டரி சீட்டை, மீண்டும் அரசு கொண்டு வந்தால், தமிழக மக்களின் மிகப்பெரிய எதிர்ப்பை, ஸ்டாலின் அரசு சந்திக்க நேரிடும். இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement