dinamalar telegram
Advertisement

2000 ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிப்பு

Share
Tamil News
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே குளத்துாரில் பண்ணை குட்டை தோண்டிய போது 2000 ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்- நயினார்கோயில் ரோட்டிலுள்ள குளத்துார் காலனியின் கிழக்கே காரான்கோட்டையில் பண்ணைக்குட்டை தோண்டப் பட்டது. அப்போது பழங்கால பானை ஓடுகள் வெளிவந்தன.இவற்றை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர்ராஜகுரு, குளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பால்துரை, தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் சு.காவ்யா, மு.பர்ஜித், பா.தனபால்,கு.ரஞ்சித் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ராஜகுரு கூறியதாவது: கருப்பு, சிவப்பு நிறத்திலான சுடுமண் தட்டுகளின் உடைந்த பகுதிகள், சிவப்பு நிற பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக் கழிவுகள், தானியங்கள் வைக்க பயன்படுத்தப்பட்ட குடுவையின் தடித்த ஓடுகள், உடைந்த பானைத்தாங்கி, பானை மூடிகள், மான் கொம்புகள், குறியீடுகளுள்ள 3 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. மூன்று கோடுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும் திரிசூலம் போன்ற குறியீடு கீழடியிலும், மரியராயபுரத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் 'த' எனும் தமிழி எழுத்து, சூலம் ஆகிய குறியீடுகளும் கிடைத்துள்ளன.இரும்புக் கழிவுகளுடன் சிறிய பகுதியும் கிடைத்துள்ளதால் இரும்பு உருக்காலை இருந்திருக்கலாம். இப்பொருட்களைக் கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முன்பு இரும்புக்காலத்தில் காரான் கோட்டை என்ற பெயரில் ஒரு சிற்றுார் இங்கு இருந்ததை அறிய முடிகிறது. காரான் என்ற ஒரு பாரம்பரிய நெல்லின் பெயரில் இப்பகுதி அழைக்கப்படுகிறது. இதேபெயரில் ரெகுநாதபுரம் அருகில் ஒரு ஊர் உள்ளது,' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement