dinamalar telegram
Advertisement

அரசு அலுவலகங்களில் தமிழில் கோப்புகள்

Share
சென்னை:''அரசு அலுவலகங்களில், கோப்புகளை தமிழில் எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தால், ஆங்கிலத்தில் எழுதப்படும் கோப்புகளை, தமிழில் மொழி பெயர்க்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்தார்.

தமிழில் கையெழுத்து



அவர் அளித்த பேட்டி:தமிழ் வளர்ச்சி துறை மாவட்ட அலுவலக நடைமுறைகளில், தமிழ் ஆட்சி மொழியின் செயலாக்கம் இருக்க வேண்டும். அலுவலர்கள் தமிழில் கையெழுத்திடுவது, கோப்புகளை தமிழில் எழுதுவது போன்றவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுஉள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களிலும், தமிழ் ஆட்சிமொழி செயலாக்கம் செய்வதில், அரசு உறுதியாக உள்ளது.

அரசின் கோப்புகள், சில தவிர்க்க முடியாத காரணங்களால், ஆங்கிலத்தில் இருந்தாலும், தமிழில் மொழி பெயர்ப்பு வர வேண்டும் என, தலைமை செயலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். ஆங்கில மொழியில் உள்ள கோப்புகளை, தமிழில் மொழி பெயர்க்க, அலுவலர்களை நியமிக்கவும், தனி அலுவலர் வழியாக, அதை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

செம்மொழி தமிழாராய்ச்சி மத்திய நிறுவனத்தில், கருணாநிதி பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அவரது பிறந்த நாளில், 10 லட்சம் ரூபாய் விருது வழங்க, அவர் சொந்த பணத்தில், 1 கோடி ரூபாய் வழங்கினார்.அந்த விருது, பத்து ஆண்டுகளாக வழங்கப்பட வில்லை.அதை வழங்க, விருதுக்குரியவர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

நடவடிக்கை



தஞ்சை பல்கலையில், கருணாநிதி பெயரில் அமைக்கப்பட்ட, உலக செம்மொழி உயராய்வு மையம் செயல்படாமல் உள்ளது; அது, செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும்.தமிழ் மொழியின் சிறப்புக்களை, வருங்கால தலைமுறையினர் அறிய, தொழில்நுட்ப உதவியோடு நிலைநிறுத்துவதற்கான பணிகளை, தொடர்ந்து செய்வோம். உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்பது, தமிழறிஞர்களின் விருப்பமாக உள்ளது.இதுகுறித்து, முதல்வர் உரிய முடிவெடுப்பார்.

தமிழ் மொழிக்கு தனி அமைச்சகம் உள்ளது. செம்மொழி தமிழாராய்ச்சி மத்திய நிறுவனத்தை, புதிய கட்டடத்திற்கு மாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தமிழர்கள் எங்கெல்லாம் தமிழ் கற்க விரும்புகின்றனரோ, அதற்குரிய வசதி செய்து தரப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

    கமல் சார் உங்கள் கவனத்துக்கு. தமிழ்மொழிக்குத் தனி அமைச்சகம் உள்ளது என அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Advertisement