dinamalar telegram
Advertisement

மக்களுக்கு வேட்டு வைக்குது பூட்டு! திறக்கப்படாத அம்மா மினி கிளினிக்குகள்

Share
Tamil News
அன்னுார்;அன்னுார் ஒன்றியத்தில், 'அம்மா மினி கிளினிக்'குகள் மூடப்பட்டதால், கிராம மக்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மருத்துவ சிகிச்சைக்கு, நீண்ட துாரம் செல்ல வேண்டியுள்ளது.ஆறு மாதங்களுக்கு முன், அன்னுார் ஒன்றியத்தில், குப்பேபாளையம், அல்லப்பாளையம், அக்கரைசெங்கப்பள்ளி, கணுவக்கரை ஆகிய நான்கு ஊராட்சிகளில், 'அம்மா மினி கிளினிக்'கள் திறக்கப்பட்டன.கிளினிக்குகளில், ஒரு டாக்டர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருத்துவ உதவியாளர் பணியில் இருந்தனர். அன்னுார் ஒன்றியத்தில், பொகலுார் ஊராட்சி, வடக்கலுார் ஊராட்சியில் உள்ள மூக்கனுார், மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள செம்மாணி செட்டிபாளையம் ஆகியவற்றில் மட்டுமே ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மற்ற, 18 ஊராட்சிகளை சேர்ந்த 180 கிராம மக்கள், மருத்துவ சிகிச்சை பெற நீண்ட துாரம் செல்ல வேண்டி இருந்தது. இந்நிலையில், அரசு துவக்கிய இந்த மினி கிளினிக்குகள் பெரிதும் உதவின. இதன் வாயிலாக, அருகேயுள்ள ஊராட்சி மக்கள் பயன்பெற்று வந்தனர்.கடந்த ஏப்ரலில், கொரோனா அதிகரித்ததை அடுத்து, மினி கிளினிக்கில் பணிபுரிந்து வந்த டாக்டர், செவிலியர்கள், கொரோனா சிகிச்சை மையங்களுக்கு மாற்றுப் பணியில் அனுப்பப்பட்டனர். இதையடுத்து, மூன்று மாதங்களாக, இந்த கிளினிக்குகள் மூடிக் கிடக்கின்றன. இதனால் மருத்துவ சிகிச்சை பெற, கிராம மக்கள், மறுபடியும் நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அன்னுார் ஒன்றியத்தில், தினமும் பாதிப்போர் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் மட்டுமே உள்ளது.அன்னுார் அரசு மருத்துவமனையில் இருந்த கொரோனா சிகிச்சை மையம் மூடப்பட்டு விட்டது. கோவை மாவட்டத்தில் பெரும்பாலான சிகிச்சை மையங்களிலும், நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து விட்டது. அங்கு மாற்றுப் பணி மேற்கொண்டு வந்த டாக்டர்கள், மீண்டும் அன்னுார் வந்துள்ளனர். எனினும், 'அம்மா மினி கிளினிக்'குகள் இதுவரை திறக்கப்படவில்லை. 'விரைவில், செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்' என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement