dinamalar telegram
Advertisement

அப்பவே சொன்னாங்க... கேக்கல...!நீரில் மூழ்குது காந்தையாறு பாலம்:மீண்டும் பரிசல் பயணத்துக்கு ரெடி!

Share
Tamil News
'மேட்டுப்பாளையம்;பவானிசாகர் அணையின் நீர்மட்டம், 96 அடியை எட்டிய நிலையில், சிறுமுகை லிங்காபுரம் அருகே, காந்தையாற்றின் குறுக்கே கட்டியுள்ள உயர்மட்ட பாலம், தண்ணீரில் மூழ்கி வருகிறது. இதனால் காந்தவயல் பகுதி மலைவாழ் மக்கள், மீண்டும் பரிசலில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.சிறுமுகை லிங்காபுரத்துக்கும், காந்தவயலுக்கும் இடையே காந்தையாறு செல்கிறது. மழை காலத்தில், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பவானிசாகர் அணை நிரம்பும் போதும், இந்த ஆற்றில் தண்ணீர் தேங்கி நிற்கும். அப்போது, காந்தவயல், உளியூர், மொக்கை மேடு, மேலூர் ஆகிய மலைவாழ் மக்கள் மற்றும் லிங்காபுரம் பகுதி விவசாயிகள், பரிசல் வாயிலாக, ஆற்றை கடந்து சென்று வருவது வழக்கம். சிரமத்தை தவிர்க்க, ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும்படி, மலைவாழ் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.கடந்த, 2005ல், காந்தையாற்றின் குறுக்கே, ஆற்றின் உயரத்தை மையமாக வைத்து, உயர்மட்ட பாலம் கட்டத் தொடங்கினர். அப்போது லிங்காபுரம் பகுதியை சேர்ந்த சில விவசாயிகள், தற்போது கட்டும் பாலம், பவானிசாகர் அணை நிரம்பும் போது, தண்ணீரில் மூழ்கி விடும். அதனால், தற்போதைய பாலத்தின் உயரத்தில் இருந்து, பத்தடி உயரத்துக்கு கூடுதலாக உயர்த்தி கட்டும்படி கோரிக்கை விடுத்தனர். ஆனால் அப்போது இருந்த அதிகாரிகள் அதை கண்டுகொள்ளாமல், பாலத்தை கட்டி முடித்தனர்.திறப்பு விழாவுக்கு முன்பே, பவானிசாகர் அணை நிரம்பியதால், அணையின் நீர்த்தேக்கத் தண்ணீரில், புதிதாக கட்டிய உயர்மட்ட பாலம் மூழ்கியது. பாலத்தின் மேல்மட்டத்தில் இருந்து, 7 அடி உயரத்துக்கு, தொடர்ந்து ஆறு மாதத்துக்கு மேல் நீர் தேங்கி நின்றதால், பொதுமக்கள் பரிசலில் பயணம் செய்து வந்தனர். கடந்த, 17 ஆண்டுகளில், பத்துக்கும் மேற்பட்ட முறை, பவானிசாகர் அணை நிரம்பியதால், இப்பாலமும் தண்ணீரில் மூழ்கியது. இதுபோன்ற சமயங்களில், பொதுமக்கள், ஆழியாறிலிருந்து கொண்டு வந்த 'ஸ்டீம்' படகில் பயணித்த வந்தனர். கடந்த ஆறு மாதங்களாக ஆற்றில் தண்ணீர் குறைந்ததால், பாலத்தில் வாகனத்திலும் நடந்தும் சென்று வந்தனர். தற்போது தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம், 96.42 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில், சிறுமுகை லிங்காபுரம் காந்தையாற்றின் குறுக்கே கட்டியுள்ள உயர்மட்ட பாலம், தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளது.அணையின் நீர்த்தேக்க நீர், பாலத்தின் மீது ஒன்றரை அடிக்கு தேங்கியுள்ளது. கனமழையின் காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகம் இருக்கும் பட்சத்தில், ஓரிரு நாளில் பாலம் மூழ்கி, 6 அடிக்கு மேல் தேங்கி நிற்கும். இவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாததால், மீண்டும் பரிசல் பயணம் துவங்கப்பட உள்ளது.எங்களை கொஞ்சம் பாருங்க...!சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் மாலா, சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் அதிகாரிகள், காந்தையாறு பாலத்தை ஆய்வு செய்தனர். சாலையின் இரு பக்கமும் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்றும்படி உத்தரவிட்டனர். சாலையோரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அப்போது அங்கு வந்த காந்தவயல் மலைவாழ் மக்கள், அதிகாரிகளிடம், 'பரிசல் பயணத்தில், பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. எனவே, கடந்தாண்டை போலவே நடப்பாண்டும், ஆழியாரில் இருந்து, 'ஸ்டீம்' படகு கொண்டு வந்து, மக்களை ஏற்றிச் செல்ல, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அதிகாரிகளிடம் மலைவாழ் மக்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement