dinamalar telegram
Advertisement

தி.மு.க., அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார்: பன்னீர்செல்வம்., - பழனிசாமி., அறிவிப்பு

Share
சென்னை:''தி.மு.க., அரசின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, அ.தி.மு.க., தயாராக உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மேற்கொள்வதை தி.மு.க., அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்,'' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோர் தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் , கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள்மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். பின், பன்னீர்செல்வம்., அளித்த பேட்டி:

அரசியல் ரீதியாக எங்களை சந்திக்க முடியாத தி.மு.க., அச்சுறுத்தும் வகையில் எங்களை எதிர்கொள்ள முடியாது. எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் வந்தாலும், அதை எதிர்கொள்ள அ.தி.மு.க., தயாராக உள்ளது.அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மேற்கொள்வதை, தி.மு.க., அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். சட்டப்பூர்வமான நடவடிக்கை எதுவாக இருந்தாலும், அதை எதிர்கொள்ள அ.தி.மு.க., தயாராக உள்ளது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது. எந்த புதிய அரசும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கும்போது, அது மிகப்பெரிய அபாயகரமான சூழலை, அரசியல் ரீதியில் உருவாக்க அடித்தளமாக அமையும்.சோதனை நடத்தப்படுவதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராக உள்ளோம். எந்தவித முகாந்திரமும் இல்லாமல், எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நுழைந்துள்ளனர். இதற்கு பரிகாரம், நீதிமன்றம் வழியே பெறப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பழனிசாமி., கூறியதாவது:விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்ட மக்கள் உயர் கல்வி படிப்பதற்காக, ஜெயலலிதா பெயரில் பல்கலை அமைக்கப்படும் என, அறிவித்து நடைமுறைப்படுத்தினோம். தற்போது, உயர் கல்வித் துறை அமைச்சர், ஜெ., பல்கலை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கப்படும் என, அறிவித்துள்ளார். அவர், அந்த மாவட்டத்தை சேர்ந்தவர். அந்த மாவட்ட மக்களுக்கு நன்மை செய்வதற்கு பதிலாக, ஜெ., பெயரில் பல்கலை இயங்கக் கூடாது என்பதற்காக, கல்லுாரிகளை அண்ணாமலை பல்கலையில் இணைக்க முயற்சிக்கிறார்.

நிதி நெருக்கடியை அமைச்சர், காரணமாகக் கூறுகிறார். நிதி இல்லாத நிலையில், மதுரையில் கருணாநிதி பெயரில் 200 கோடி ரூபாயில் நுாலகம் அமைக்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். நாங்கள் எதிர்க்கவில்லை. அதற்கு மட்டும் எப்படி நிதி வருகிறது? இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க., அரசுக்கு கண்டனம்! பன்னீர்செல்வம்., - பழனிசாமி., ஆகியோர் அறிக்கை:தேர்தலில் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து, ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள தி.மு.க., அரசு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் கவனம் செலுத்தவில்லை. தமிழக வளர்ச்சி திட்டப் பணிகளில் கவனம் செலுத்தவில்லை. எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டு வருகிறது.

அ.தி.மு.க.,வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், காவல் துறையை முடுக்கி விட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. அமைச்சர்கள் பலர் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கை எதிர்நோக்கியுள்ளனர். அதை திசை திருப்ப, வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியால், பொய்யான குற்றச்சாட்டுகளை புனையும் நடவடிக்கைகளில் தி.மு.க., அரசு ஈடுபட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே, மக்களுடைய அதிருப்தியை பெற்றிருக்கிற தி.மு.க., அரசு, மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இல்லத்தில், சோதனை என்ற பெயரில் அச்சுறுத்த நினைக்கும் தி.மு.க., அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கட்சி உறுதுணையாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

    ஜெ பல்லைக்கு நிதி இல்லை - கருணாநிதி பெயரில் அமைக்க நிதி உளதோ ? நியாயமான கேள்விதானே ? உருப்படியா ஏதாவது செய்யுங்க சார். வழக்கமாப் போடற வழக்கையெல்லாம் பழக்கமா வைச்சுக்காதீங்க சார்.

Advertisement