dinamalar telegram
Advertisement

விரைவில் ஓலா மின்சார பைக்: கிருஷ்ணகிரியில் தயாராகுது

Share
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தயாராகி, உலகம் முழுதும், மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய, 'ஓலா' நிறுவனம் தயாராகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், 500 ஏக்கரில், 2,354 கோடி ரூபாய் மதிப்பில், உலகிலேயே மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகன ஆலையை, ஓலா நிறுவனம் அமைத்து வருகிறது. இதன் வாயிலாக, 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். வாகன வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகளில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும், 3,000 'ரோபோக்கள்' பயன்படுத்தப்பட உள்ளன. இந்தியாவின் உள்ளூர் சந்தையை மட்டுமின்றி, ஐரோப்பா, ஆசியா, லத்தீன், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் சர்வதேச சந்தைகளின் தேவையையும், ஓலா நிறுவனம் பூர்த்தி செய்யும் என, அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மவுசு அதிகரித்துள்ளது. அதனால், ஓலா நிறுவனம், தன் முதல் யூனிட் உற்பத்தியை துவங்க தேவையான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. கூடிய விரைவில் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனைக்கு வரும். முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், இணையதளம் வாயிலாக, 'டிபாசிட்' 499 ரூபாய்க்கு முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை நிறுவனம் துவங்கியுள்ளது. போச்சம்பள்ளி ஆலையில், முதற்கட்டமாக இரு வினாடிக்கு ஒரு பைக் என, ஆண்டுக்கு, ஒரு கோடி மின்சார இருசக்கர வாகனங்களை தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

என்னென்ன சிறப்பம்சங்கள்? மிகவும் சிறப்பான, எல்.இ.டி., ஹெட்லைட் இருக்கும். அத்துடன், ஓலா ஆப்பை டவுன்லோடு செய்து, ஸ்கூட்டருடன் இணைத்து கொண்டால், அதன் வாயிலாக சாவியே இல்லாமல் ஸ்கூட்டரை ஆன் செய்து கொள்ளும் வசதி. வாகனத்தின் முன்பகுதியில் தொடுதிரை வசதி இருக்கும் என்பதால், மொபைல்போன் அழைப்புகள், குறுஞ்செய்தி ஆகியவற்றை பார்க்க முடியும். அத்துடன், புளுடூத், ப்ளைட்மோடு போன்ற வசதிகளும் இருக்க வாய்ப்புள்ளது. நான்கு வினாடிக்குள், 40 கி.மீ., வேகத்தை எட்டி விடும் வகையில் வடிவமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. 400 நகரங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக 'ஹைப்பர் சார்ஜர்' பாயிண்டுகளை அமைக்க, நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 75 கி.மீ., கிடைக்கும். புளு, பிங்க், கறுப்பு என மூன்று வண்ணங்களில் வாகனங்கள் விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இதன் விலை இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும், 1 லட்சம் ரூபாய்க்கு குறைவில்லாமல் இருக்கும் என கூறப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement