dinamalar telegram
Advertisement

இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Share
தமிழக நிகழ்வுகள்
1. பெண் போலீஸ் உட்பட இருவரிடம் நகை பறிப்பு
கோவை : பெண் போலீஸ் மற்றும் பேராசிரியையிடம், நகை பறித்து தப்பிய, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரியநாயக்கன்பாளையம், ஸ்ரீராமபுரத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா, 23. கோவை மாநகர ஆயுதப்படை, 4வது பட்டாலியனில் போலீசாக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து சகோதரியுடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.ஏ.டி.டி., காலனி ரோட்டில் சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த நபர், பெண் போலீஸ் கழுத்திலிருந்த, 2 பவுன் நகையை பறித்து தப்பினார். அதிர்ச்சியடைந்தவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
இதேபோன்று, கே.கே., புதுார், ராமலிங்க நகரை சேர்ந்தவர் சாந்தி, 46. தனியார் கல்லுாரி பேராசிரியரான இவர், நேற்று முன்தினம் வீடு திரும்பி கொண்டிருந்தார். பஸ்சில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்ற போது, பின்தொடர்ந்து பைக்கில் வந்த நபர், அவரது கழுத்திலிருந்த, 5 பவுன் நகையை பறித்து தப்பினார். இதுகுறித்து, சாய்பாபாகாலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

2. 12.5 டன் ரேஷன் அரிசி பதுக்கல் பறக்கும் படையினர் பறிமுதல்
திருப்பூர் : திருப்பூரில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 12.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர், முருகம்பாளையம் பகுதியில், ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்கப்படுவதாக புகார் வந்தது. உடனே, மாவட்ட குடிமைப்பொருள் பறக்கும்படை தாசில்தார் சுந்தரம் தலைமையிலான குழுவினர், குறிப்பிட்ட பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது, பூட்டியிருந்த ஒரு வீட்டை திறந்து பார்த்தபோது, வீடு முழுவதும் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சாக்குடன் வாங்கி வரும் ரேஷன் அரிசியை, வேறு 50 கிலோ பையில், 'பேக்கிங்' செய்து வைக்கப்பட்டிருந்தது.

பறக்கும் படை அதிகாரிகள் கூறுகையில், 'தலா, 50 கிலோ என்ற அளவில், 250 மூட்டைகள் (12.5 டன்) பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை முழுமையாக கணக்கிட்டு, நுகர்பொருள் வாணிப கழகத்திடம் ஒப்படைக்கப்படும். ரேஷன் அரிசியை கடத்தி, பதுக்கிய நபர்கள் மீது, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பர்' என்றனர்.

3. டாக்டரிடம் ரூ.2.85 கோடி மோசடி கைதான இருவரை விசாரிக்க 'கஸ்டடி'
கோவை : கோவை டாக்டரிடம், ரூ.2.85 கோடி மோசடி செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரணை நடத்த, மூன்று நாட்கள் கஸ்டடி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை ராயல்கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஷ்வரன் மருத்துவமனையை, விரிவாக்கம் செய்ய திட்டமிட்டார். இதற்கு கடன் ஏற்பாடு செய்து தருவதாக, 2020 அக்., மாதம் புதுக்கோட்டை, ஆலங்குடியை சேர்ந்த பன்னீர்செல்வம், 55 உள்ளிட்ட, 4 நபர்கள் தொடர்பு கொண்டு பேசினர்.அப்போது கமிஷன் தொகையாக, 2.85 கோடி ரூபாய் பெற்றவர்கள் மோசடி செய்தனர். இது குறித்து, மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்துவிசாரித்தனர்.

இந்நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த பன்னீர்செல்வம், 55 மற்றும் செல்வகுமார், 54 ஆகியோரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கடந்த, 15ம் தேதி கைது செய்தனர்.இவர்களிடம் விசாரணை நடத்த, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கஸ்டடி கேட்டு, கோவை ஜே.எம்., 7 நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இருவரிடமும் மூன்று நாட்கள் விசாரணை நடத்த, அனுமதி வழங்கப்பட்டது.

4. 4 உலோக சிலைகள் பறிமுதல் : 6 பேர் கைது
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் ராதாமகேஷ் தலைமையிலான போலீசார் தனிச்சியம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்றவர்களை விசாரித்ததில் குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் ஜூன் 8ம் தேதி 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நான்கு உலோக சிலைகளை திருடி கண்மாய்க்குள் புதைத்து வைத்தது தெரிந்தது. சேதப்படுத்திய 3 மற்றும் 1 அடி நடராஜர் சிலைகள், 2.5 அடி சிவகாமி, 1 அடி மாணிக்கவாசகர் சிலைகள் மீட்கப்பட்டன. 19 - 29 வயதுள்ள ஆறு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
5. பூஜை செய்வதாக கூறி 11 சவரன் கொள்ளை
கள்ளக்குறிச்சி:கால் வலிக்கு பூஜை செய்வதாகக் கூறி, மூதாட்டியிடம் 11 சவரன் நகைகளை பறித்து சென்ற ஆசாமியை போலீசார் தேடுகின்றனர்.

கள்ளக்குறிச்சி, காந்தி ரோட்டைச் சேர்ந்தவர் சீத்தாபதி மனைவி ராஜலட்சுமி, 63; சீத்தாபதி மெடிக்கல் ஸ்டோரில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் காலை, சீத்தாபதி வேலைக்கு சென்று விட்டார்.வீட்டில் ராஜலட்சுமியும், வயது முதிர்ந்த தாய் தேசம்மாளும் இருந்தனர். காலை 11:00 மணியளவில், அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் வந்து, ராஜலட்சுமியின் கால் வலிக்கு பூஜை செய்ய, சீத்தாபதி அனுப்பியதாக கூறியுள்ளார்.
பூஜையில் தங்க நகைகளை வைக்க வேண்டும் என அந்த நபர் கூறியதால், 11 சவரன் செயின்களை ராஜலட்சுமி கொடுத்துள்ளார்.கை, கால்களை கழுவி வருமாறு அந்த நபர் கூறியதால், குளியல் அறைக்குள் சென்றபோது அந்த நபர், கதவை மூடி, வெளியே தாழ்ப்பாள் போட்டு நகைகளுடன் தப்பிச் சென்றார். கள்ளக்குறிச்சி போலீசார், மர்ம நபரை தேடி வருகின்றனர்.


இந்தியாவில் குற்றம் :
கொலை முயற்சி வழக்கில் மாமியார்
குவாலியர்: மத்திய பிரதேசத்தின் குவாலியரில், ஏப்., மாதம் திருமணம் முடிந்த, 22 வயது இளம்பெண்ணை, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய மாமியார், வற்புறுத்தி அவரை 'ஆசிட்' குடிக்க வைத்துள்ளார். இதுகுறித்து, டில்லியில் சிசிச்சை பெறும் மருமகள், மகளிர் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தார். அவர்களது கடிதத்தின் பேரில், முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் உத்தரவால், மாமியார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவாகி உள்ளது.
உலக நடப்பு
கொட்டித் தீர்த்த கன மழை: சீனாவில் 25 பேர் பலி
பீஜிங்: சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில், 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்ததில் இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.அண்டை நாடான சீனாவின், மத்திய ஹெனான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் ஒரே நாளில் 46 செ.மீ., மழை பொழிந்தது. இதில், மத்திய ஹெனான் மாகாணம் மற்றும் அதன் தலைநகர் ஸெங்சோ ஆகியவை வெள்ளத்தில் மூழ்கின. ஸெங்சோ நகரில் உள்ள சுரங்க ரயில் நிலையங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது.

ரயில் பயணியர் பலரும் சுரங்கத்தை விட்டு வெளியேற முடியாமல் கழுத்தளவு தண்ணீரில் உள்ளே சிக்கினர். இவர்களில் 12 பேர் இறந்தனர். மாகாணம் முழுவதும் பஸ், ரயில், விமான போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.ஹெனான் மாகாணத்தின், இச்சுவான் என்ற இடத்தில் உள்ள அணையில், 20 மீட்டர் துாரத்திற்கு பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அணை எந்த நேரத்திலும் உடைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்காக, ஹெர்னான் மாகாணத்துக்கு, சீன ராணுவத்தை அந்நாட்டு அதிபர் ஷீ ஜிங்பிங் அனுப்பி வைத்துள்ளார்.சீனாவில், 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவில், பெரும் மழை கொட்டி தீர்த்ததாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement