dinamalar telegram
Advertisement

எதிர்பார்ப்பு; எம்.எல்.ஏ., அலுவலகத்தைத் திறக்க பொதுமக்கள்...கட்டப்பட்ட நாள் முதல் பூட்டிக்கிடக்கும் அவலம்

Share
Tamil News
திண்டிவனம்-திண்டிவனத்தில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திண்டிவனத்தில் ராஜாங்குளத்தையொட்டி உள்ள திரவுபதி அம்மன் கோவில் எதிரே, கடந்த 2001ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், பொதுமக்களிடமிருந்து எம்.எல்.ஏ.,க்கள் மனுக்களைப் பெறவும், குறைகளைக் கேட்டறியவும் தமிழகம் முழுதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டப்பட்டது.அப்போது வெற்றி பெற்ற திண்டிவனம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., சேதுநாதன் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு செல்லவில்லை. அதன் பிறகு 2001 மற்றும் 2006 தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சண்முகமும் அலுவலகத்தை உபயோகப்படுத்த முன்வரவில்லை.அதன் பிறகு கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அரிதாசும் எம்.எல்.ஏ., அலுவலகம் பக்கம் தலைகாட்டவில்லை.அதேபோன்று கடந்த 2016ல் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீத்தாபதி சொக்கலிங்கமும், அலுவலகத்தை பயன்படுத்தவில்லை.எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டப்பட்ட நாள் முதல் இதுவரை பயன்பாட்டில் இல்லாத நிலையில், எம்.எல்.ஏ., எங்கே இருப்பார். எங்கே இருக்கிறார் என தெரியாமல் மனுக்களைக் கொடுக்க முடியாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், தற்போது, தி.மு.க., தலைமையிலான ஆட்சி ஏற்பட்டுள்ள நிலையில், திண்டிவனத்தில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க., எம்.எல்.ஏ. அர்ஜூனனும் இதுவரை எம்.எல்.ஏ., அலுவலகத்தை பயன்படுத்த முன்வரவில்லை.அருகில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம் உள்ளிட்ட தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் அலுவலகங்களைத் திறந்து அங்கு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தும், மனுக்களைப் பெற்றும் வருகின்றனர்.ஆனால், திண்டினம் தொகுதி மக்கள் எங்கு, யாரிடம் மனுக்களைக் கொடுப்பது என தெரியாமல் தொடர்ந்து எம்.எல்.ஏ., இருக்கும் இடம் தேடி அலைகின்றனர்.

வெற்றி பெறும் எம்.எல்.ஏ., தினமும் தங்களுக்கான அலுவலகத்தில் ஒரு மணிநேரமாவது அமர்ந்து, மக்களை சந்திக்க வேண்டும். அவர்களின் மனுக்களைப் பெற்று குறைகளைத் தீர்க்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு கட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டப்பட்ட நாள் முதல், இதுவரை எந்த எம்.எல்.ஏ.,வும் திறக்காமல் பயனற்று கிடப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்த முறையாவது தொகுதி எம்.எல்.ஏ., அர்ஜூனன் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து புதுப்பித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement