dinamalar telegram
Advertisement

மீளவும் வாழவும் இதோ வழி! கொரோனாவில் இருந்து தொழிலாளர்கள்.. நிறுவனங்களே தடுப்பூசி வழங்க வேண்டும்

Share
Tamil News
கொரோனா தொற்றிலிருந்தும், தொழில் பாதிப்புகளிலிருந்தும் மீள்வதற்கு,அந்தந்தநிறுவனங்களேதங்கள் தொழிலாளர்களுக்குதடுப்பூசி செலுத்துவதற்கு,ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதன் வாயிலாக, தொழில் நிறுவனங்களை விரைவில் திறக்க முடியும். மூன்றாவது அலையில், அதிக பாதிப்பு ஏற்படாமல் கோவையை பாதுகாக்க முடியும்.கொரோனா தொற்று பாதிப்பு, நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், தமிழகத்திலேயே கோவைதான் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. பிற மாவட்டங்களை விட, இங்கு தொற்று அதிகமாக இருப்பதற்கு, அரசுக்குத் தெரியாமல் தொழில் நிறுவனங்கள் இயங்கியதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்துத் தெரிவித்திருந்தார்.
தற்போது முழு ஊரடங்கு நீடித்து வரும் நிலையில், அடுத்த வாரத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கு, அரசு அனுமதிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்நிலையில், தொழில் துறையினர், தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கான முயற்சிகளில், தொழில் அமைப்புகள் இறங்கியுள்ளன.
கோவை இந்திய தொழில் வர்த்தக சபை, கொடிசியா, சீமா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகள் மற்றும் சில நிறுவனங்கள் இணைந்து, கோவை சுகுணா கல்யாண மண்டபத்தில், சிறப்பு தடுப்பூசி முகாமை நேற்று முன் தினம் நடத்தின. அதில், தொழிலாளர்கள், நிறுவனங்களின் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் என, மூவாயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இந்த முகாமுக்காக, இருபது லட்ச ரூபாய் மதிப்புள்ள தடுப்பூசிகள், தொழில் அமைப்புகளுக்கு நேரடியாக இலவசமாக, மாவட்ட நிர்வாகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.இது நல்ல முயற்சி என்றாலும், இதே அளவில் தடுப்பூசிகள் போடப்பட்டால், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அரசிடமிருந்து தடுப்பூசி வாங்கிப் போடுவதற்கு, ஓராண்டுக்கும் மேலாகிவிடும். இதனால் தொழில், வர்த்தக நிறுவனங்களை இயக்கும்போது, தொற்று பரவுவதைத் தடுக்கவே முடியாது. கோவையின், 30 லட்சம் மக்கள் தொகையில், இதுவரை நான்கு சதவீதம் பேர் அதாவது, ஒன்றரை லட்சம் பேர் மட்டுமே, இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டுள்ளதாக, 'கோ வின்' தகவல் கூறுகிறது.
ஏழு லட்சம் பேர், முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். அனைவருக்கும் இரண்டு தடுப்பூசிகள் போடுவதற்கு, 60 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படும். இதுவரை போடப்பட்டுள்ள எட்டரை லட்சம் டோஸ்கள் தவிர்த்து, இன்னும் 52 லட்சம் டோஸ் தடுப்பூசிகள், கோவைக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இதற்கு எவ்வளவு காலம் ஆகுமென்று தெரியவில்லை. இப்போது தனியார் மருத்துவமனைகள், நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால், கோவையிலுள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி எளிதில் கிடைக்கிறது.
தொழில், வர்த்தகம் மற்றும் சேவை நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளில் மொத்தமாகப் பேசி, தங்கள் தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யலாம்.ஒரு ஊழியருக்கு இரண்டு டோஸ்களுக்கு, 1500 ரூபாய் செலவானால், அதில் 500 ரூபாயை ஊழியரின் ஊதியத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம்.ஆயிரம் ரூபாயை நிறுவனமே ஏற்றுக் கொள்ளலாம். அல்லது மூன்றில் ஒரு பங்கை அரசு ஏற்கலாம். சி.எஸ்.ஆர். எனப்படும் சமூகப் பொறுப்புணர்வு நிதியை, இதற்குச் செலவிட அனுமதிக்கலாம்.
கொரோனா பரவலால், மாதக்கணக்கில் தொழில், வர்த்தக நிறுவனங்கள் மூடிக்கிடப்பதை விட, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தடுப்பூசிகளைச் செலுத்தியிருப்பதைக் காரணம் காட்டியே, அவற்றைத் திறப்பதற்கு, அரசிடம் கோரிக்கை வைக்கலாம்.வேலையின்றி, ஊதியமின்றி வீட்டில் முடங்கிக் கிடக்கும் அனைவரும் வேலையும், ஊதியமும் கிடைப்பதால் 500 ரூபாய் செலவிடவும் தாராளமாக முன் வருவர்.தொழில், வர்த்தக அமைப்புகள், இவ்வாறு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளும்பட்சத்தில், அரசு மருத்துவமனைகளில் இன்னும் கூடுதல் மக்களுக்கு இலவச தடுப்பூசிகள் போடலாம்.
இதனால் மிக விரைவாக, அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தி, அடுத்த அலையிலாவது பெரிய பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாக்க முடியும். ஊர் கூடி தேர் இழுப்பது கொண்டாட்டம்; இது ஊர் கூடி கரை கட்டும் முயற்சி. உடனே செய்வது நல்லது!தொழில், வர்த்தகம் மற்றும் சேவை நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளில் மொத்தமாகப் பேசி, தங்கள் தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யலாம். ஒரு ஊழியருக்கு இரண்டு டோஸ்களுக்கு, 1500 ரூபாய் செலவானால், அதில் 500 ரூபாயை ஊழியரின் ஊதியத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம். *நமது நிருபர்-
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement