dinamalar telegram
Advertisement

வேளச்சேரி இரண்டடுக்கு மேம்பாலம் ஒரு வழிப்பாதை அடுத்த மாதம் திறப்பு

Share
Tamil News
சென்னை--வேளச்சேரி இரண்டடுக்கு மேம்பாலத்தில், ஒரு வழித்தடத்தை, முதல்வர் ஸ்டாலின் திறக்கும் வகையில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.வேளச்சேரியில் ஏற்படும் கடுமையான நெரிசலுக்கு தீர்வு காண, 108 கோடி ரூபாயில், இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட முடிவு செய்து, 2016 பிப்ரவரியில் பணி துவங்கியது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பணியை துவக்கி வைத்தார்.சென்னையில், முதன்முறையாக கட்டப்படும் இரண்டடுக்கு மேம்பாலம் இது தான். தரமணி சாலையில் இருந்து விரைவு சாலை வரை, 36 துாண்கள் அமைத்து பாலம் கட்டப்படுகிறது. இதன், மைய பகுதி, 50 அடி உயரம் உடையது.அதேபோல், விரைவு சாலையில் இருந்து, தாம்பரம் சாலை வரை, 17 துாண்கள் அமைத்து பாலம் கட்டப்படுகிறது. இதன் மைய பகுதி, 25 அடி உயரம் உடையது.இரண்டு ஆண்டில், அனைத்து பணிகளும் முடிய வேண்டியது. நிலஆர்ஜிதம், குழாய் மாற்றி அமைப்பது போன்ற பணிகளால், மேம்பாலம் கட்டும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.மேம்பாலத்தின் மை பகுதியை ஒட்டி, நில ஆர்ஜிதம் செய்ய வேண்டி இருந்தது. இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில், 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.உயர் அதிகாரிகள், நில உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தியும் பலனளிக்காததால், காலதாமதம் ஏற்பட்டது. பின், நீதிமன்ற உத்தரவில், கடந்த ஆண்டு, ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், இரண்டு கட்டமாக, 11 ஆயிரத்து, 997 சதுர அடி பரப்பளவு இடம் கையகப்படுத்தப்பட்டது.சட்டசபை தேர்தலுக்கு முன், தரமணியில் இருந்து, விரைவு சாலை வழித்தடத்தை திறக்க முடிவு செய்து, பணிகள் வேகமெடுத்தன.இடையில், புயல், பருவ மழை, கொரோனா காரணமாக பணி முடியவில்லை. இந்நிலையில், ஒரு வழித்தடத்தை அடுத்த மாதம் திறக்க, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.நில ஆர்ஜிதம், வழக்கு, குழாய் மாற்றி அமைப்பது, புயல், கொரோனா போன்ற பல்வேறு காரணங்களால், மேம்பாலம் பணியை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. தரமணி - விரைவு சாலை வழித்தட பணி, இம்மாத இறுதிக்குள் முடியும். இது குறித்த தகவலை, தலைமை செயலக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். ஜூலையில், ஒரு வழித்தட மேம்பாலத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார்.-நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Manian - Chennai,ஈரான்

    அம்மாடி, ஏய் 213, ஒனக்கு மட்டும் சென்னைவேளச்சேரி இரண்டடுக்கு மேம்பாலத்தில் போக்கு வரத்து டூட்டி கெடைச்சுது? முத்துக்குமாரு அண்ணே, மேலே ஐயாவூட்டு மாமனாரு மருதமுத்து வளவன் கிட்டே ராவிலே மாமூல் 42%ம் தரணும்னு ஒப்பந்தம் ஆயிடுச்சு

Advertisement