dinamalar telegram
Advertisement

யானை பசிக்கு தடுப்பூசி மருந்து ஒதுக்கீடு குறைவு: மக்கள் தொடர்ந்து அலைக்கழிப்பு

Share
Tamil News
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் இன்னும், 88 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில், சில ஆயிரம் தடுப்பூசி மருந்து மட்டுமே வந்துள்ளது.
கடந்த முறை எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திருப்பூர் மாவட்டத்தில் தற்போது ஏறத்தாழ, 25 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களில், கடந்த வாரம் வரை 12 சதவீத பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.ஒரு வார கால இடைவெளிக்கு பின் நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில், மாவட்டத்துக்கு, 9,450 கோவிஷீல்டு மற்றும் 4,380 கோவாக்ஸின் என மொத்தம் 13,830 'டோஸ்' மட்டுமே வழங்கப்பட்டது. கடந்த இரு நாட்களாக இந்த ஒதுக்கீடை கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.இதில் திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, 480, மாநகராட்சி எல்லையில் உள்ள 17 மையங்களுக்கு 6,460 'டோஸ்' வழங்கப்பட்டது. இது தவிர மீதமுள்ள, 6,890 மருந்து மாவட்டத்தின் பிற பகுதி மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மையங்களில் மேட்டுப்பாளையம் மற்றும் குருவாயூரப்பன் நகர் மையங்களுக்கு குறைந்த பட்சமாக, 190 மற்றும் சூசையாபுரம் மையத்துக்கு அதிக பட்சமாக 630 என்ற எண்ணிக்கையில் வழங்கப்பட்டது. மற்ற மையங்களில் அப்பகுதி மக்கள் தொகைக்கு ஏற்ப 300 முதல் 500 மருந்து ஒதுக்கப்பட்டது.
மாவட்டத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் என்றால் கூட குறைந்த பட்சம் 25 ஆயிரம் தடுப்பூசி மருந்து என்றளவில் ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால், அரை சதவீதத்துக்கும் சற்று அதிகமாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'மாநில அளவில் கிடைக்கும் தடுப்பூசி ஒதுக்கீடு பிரித்து வழங்கப்படுகிறது. இதை மாவட்ட அளவில் பெற்று பகுதிவாரியாக வினியோகிக்கின்றனர்.
தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்படுவதில்லை. உடனுக்குடன் பகுதிவாரியாக அனுப்பி, பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது,' என்றனர்.சோளப்பொரி போதுமா?தன்னார்வலர்கள் சிலர் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில், எங்கு, எப்போது தடுப்பூசி முகாம் நடக்கிறது என்பதை முதல் நாளே அறிவிக்க வேண்டும்.
அதேபோல, 'டோஸ்' எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். தற்போது வருபவை, 'யானை பசிக்கு சோளப்பொரி' போல உள்ளது. இந்த விஷயத்தில், மாவட்ட அமைச்சர்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டும்,' என ஆதங்கப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement