dinamalar telegram
Advertisement

25,961 மனுக்கள்: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் குவிந்தது...விரைந்து தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை

Share
Tamil News
விழுப்புரம் மாவட்டத்தில் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்திற்கு வரப்பெற்ற, 25 ஆயிரத்து 961 மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண அதிகாரிகள் சுறுசுறுப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின், சட்டசபை தேர்தலின்போது பிரசாரத்தில், ஒரு பெட்டியில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். பெறப்பட்ட மனுக்கள் மீது முதல்வரானதும் தனியாக துறை உருவாக்கி 100 நாட்களில் தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தார்.அதன்படி, முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற துறையை உருவாக்கி, அதிகாரிகளை நியமித்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 961 மனுக்கள் பெறப்பட்டு, இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதில், வீட்டுமனைப் பட்டா, பட்டா மாற்றம் உள்ளிட்ட வருவாய்த் துறை தொடர்பாக 4,578, சமூக பாதுகாப்பு திட்டத்தில் முதியோர் உதவித் தொகை, ஈமச்சடங்கு உதவித் தொகை கேட்டு 4,799, ஊரக வளர்ச்சித் துறையில் சாலை வசதி, மின்சார வசதி, தண்ணீர் வசதி கேட்டு 2,332 மனுக்கள் வந்துள்ளன.இதேபோன்று, , வேளாண் துறை, பொதுப்பணித் துறை, காவல் துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட பிற துறைகளுக்கும் மனுக்கள் வந்துள்ளன. இந்த மனுக்கள் மீது அதிகாரிகள் பரிசீலனையில் ஈடுபட்டுள்ளனர்.இதில், 329 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

நிலுவையில் உள்ள 25 ஆயிரத்து 632 மனுக்களுக்கு ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்.இதற்கான பணியை, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 'இ' பிரிவு அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.பெறப்பட்ட மனுக்கள் முழுமை பெறாமல், பெயர், கிராமத்தின் பெயர், தொலைபேசி எண் மற்றும் கோரிக்கை மட்டுமே கூறியிருந்தால் நிராகரிக்காமல், மனுதாரரின் இருப்பிடத்திற்குச் சென்று முழுமையாக விசாரித்து தேவையான ஆவணங்களைப் பெற்று மனுவின் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும், இணைய தளத்தில் ஏற்பு, தள்ளுபடி மற்றும் காத்திருப்போர் பட்டியல் என்ற மூன்று பிரிவுகளில் தள்ளுபடி செய்யும் மனுக்களை பதியாமல் இருக்கவும், ஏற்கும் மனுக்களின் மீதான உத்தரவு நகலை இணைத்து பதிவேற்றம் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஏற்கப்படும் மனுக்கள் மீது முதல்வர் அலுவலகத்திலிருந்து தொலைபேசி மூலமாக மனுதாரரிடம் விசாரிக்கப்படும்.

வேலைவாய்ப்பு இனங்களில் மனுதாரர்களுக்கு முடிந்த அளவில் வேலை வழங்க வேண்டும். ஒரே மனுவில் பல கோரிக்கைகள் இருந்தால் துறை தொடர்பான கோரிக்கையை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மனுவுக்கான பதிலை தங்களது அலுவலக தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

உள்கட்டமைப்பு தொடர்பான குடிநீர் வசதி, சாலை வசதி கோரிக்கையாக இருந்தால் உரிய அலுவலர் அப்பகுதியை நேரில் பார்வையிட்டு உண்மைத் தன்மையை ஆராய்ந்து தீர்வு காண வேண்டும்.அலுவலர்கள் தங்கள் அலுவலகத்திற்கு தவறுதலாக ஒதுக்கப்படும் மனுக்களை தங்கள் துறையை சார்ந்தது அல்ல என குறிப்பிட்டு நிராகரிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.இதனால், பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண மாவட்ட அதிகாரிகள் பணியில் சுறுசுறுப்பாக உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • sahayadhas - chennai,பஹ்ரைன்

    சாலை மேம்படுத்துதலில் என் வீடு ஒரு அடி பள்ளமாக உள்ளது வீட்ட 1 அடி உயர்த்தி தர முடியுமா? என் கணவர் வேலைக்கு போக அடம் பிடிக்கிறார், எனவே மாதம் 10 ரூ தர முடியுமா?

Advertisement