dinamalar telegram
Advertisement

நாளை துவக்கம்: கொரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணி...மாவட்டத்தில் 4.7 லட்சம் கார்டுகளுக்கு வழங்கல்

Share
Tamil News
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 256 ஸ்மார்ட் கார்டுகளுக்கு கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.

சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கொரோனா நிவாரணத் தொகையாக ஸ்மார்ட் கார்டுதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என அறிவித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்றதும் முதற்கட்டமாக நடப்பு மாதத்திலேயே 2 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.தற்போது கொரோனா பரவலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டத்தை தவிர்க்க டோக்கன் முறையில் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.

இதையொட்டி ரேஷன் ஊழியர்கள் அனைவரும் தங்களது பகுதிக்குட்பட்ட கிராமங்களில் வீடு, வீடாக சென்று, டோக்கன் வழங்கி வருகின்றனர்.டோக்கனில், தேதி, நேரம், கடை எண் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி (சனிக்கிழமை) முதல் கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, 200 ஸ்மார்ட் கார்டுகளுக்கு மட்டும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 6 தாலுக்காக்களில் பகுதி மற்றும் முழு நேரம் என 766 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இதில், 4 லட்சத்து 7 ஆயிரத்து 256 ஸ்மார்ட் கார்டுதாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கடை செயல்பட வேண்டும், மக்கள் 1 மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும், 2 ஆயிரம் ரூபாய் அல்லது 500 ரூபாய் நோட்டுகளாக மட்டுமே நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.தொகையினை கவரில் வழங்கக் கூடாது, ஸ்மார்ட் கார்டு மூலமாகவே வழங்கவேண்டும்,

ஸ்மார்ட் கார்டு இல்லையெனில் உரிய படிவத்தில் பதிவிட்டு, பி.ஓ.எஸ்., கருவி மூலம் வழங்கலாம், தொகை வழங்கியதும் ஸ்மார்ட் கார்டுதாரர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.எவ்வித இடையூறுமின்றி நிவாரணத் தொகை வழங்குவதை உறுதி செய்ய, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 6 தாலுக்காக்களுக்கும் சப்-கலெக்டர், டி.ஆர்.ஓ., பொறுப்புகளில் உள்ள 6 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர கள்ளக்குறிச்சி10, சங்கராபுரம் 11, கல்வராயன்மலை 2, சின்னசேலம் 9, உளுந்துார்பேட்டை 13, திருக்கோவிலுார் 12 என மொத்தம் 57 நடமாடும் கண்காணிப்பு அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.நடமாடும் கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட ரேஷன் கடைகளின் நிலவரத்தை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்காணிப்பு அலுவலரிடம் தெரிவிக்குமாறு உத்தரவிடப் பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement