dinamalar telegram
Advertisement

தொழில்துறையினரின் அர்ப்பணிப்புக்கும்... தலைவணங்குவோம்!

Share
Tamil News
திருப்பூர்;திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் இன்று இரவு முதல் 24ம் தேதி வரை இயக்கத்தை நிறுத்துகின்றன. தொழிலாளரின் அயராத உழைப்பு, தொழில்துறையினரின் அர்ப்பணிப்பு உணர்வு பாராட்டுக்குரியதாக உள்ளது.-முழு ஊரடங்கில், திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை மற்றும் சார் நிறுவனங்கள் விலக்கு பெற்று, தொடர்ந்து செயல்பட்டு வந்தன. திருப்பூரில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததையடுத்து, வரும் 14ம் தேதி மாலை முதல் இயக்கத்தை நிறுத்த உள்ளன.

திருப்பூரில் உள்நாட்டு ஆடை தயாரிப்பு மற்றும் சார் நிறுவனங்கள், முழு ஊரடங்கில் இயங்கவில்லை. ஏற்றுமதி நிறுவனங்கள், அதிகளவு தொழிலாளரை கொண்டு இயங்குபவை; நிறுவனங்கள் அளிக்கும் அடையாள அட்டையை காட்டித்தான், தொழிலாளர்கள் தங்கள் வாகனங்கள் மூலம், நிறுவனங்களுக்கு வர வேண்டிய நிலைமை இருந்தது.தொழிலாளர்கள் இவ்வாறு வருவதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, ஊரடங்கை கடைபிடிக்க வேண்டிய பொதுமக்களும், சாலைகளில், வாகனங்களில் 'பறக்க' துவங்கினர்.
ஓரிருவர் என்றால், போலீசார், போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது எளிதாகும். ஆனால், பலரும், வாகனங்களில் பறப்பதால், கட்டுப்படுத்துவது கடினமானது.பின்னலாடை உற்பத்தி என்பது சங்கிலித்தொடர் போன்றது; பருத்தி, பஞ்சு, நுால் என துவங்கி, மதிப்புக்கூட்டப்பட்ட ஆடை உற்பத்தி என பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாக உள்ளது. ஒரு துறை முடங்கினாலும், அடுத்த கட்டத்துக்கு ஆடை உற்பத்தி செல்ல இயலாது.

தொழிலாளர் சிரமம்பொது போக்குவரத்து இல்லாத நிலையில், தொழிலாளர் பலர், நிறுவனத்திற்கு வருவது சிரமமானதாக இருந்தது. தொற்று பரவும் வேகம், தொழிலாளர் மற்றும் குடும்பத்தினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. பலர், தொற்று பரவல் கட்டுக்குள் வந்தால்தான், நிறுவனத்திற்கு செல்வது என்ற முடிவில் இருந்தனர். இருப்பினும் கூட, உற்பத்தி முடங்காமல், தங்கள் கடமையில் இருந்து தொழிலாளர்கள் தவறவில்லை.
ஒரு ராயல் 'சல்யூட்'
பனியன் தொழிற்சங்கத்தினர் உட்பட பல்வேறு தரப்புகளில் இருந்து வந்த கோரிக்கை, மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோள் ஆகியவற்றை ஏற்று, ஏற்றுமதி நிறுவனங்கள், இன்று மாலை முதல், முழு ஊரடங்கு காலம் வரை, இயக்கத்தை நிறுத்தி கொள்ள முன் வந்துள்ளன.திருப்பூர் தொழிற்சாலைகள், இரவு - பகல் என்று பார்க்காமல் இயங்குபவை; அதேசமயம், தொழிற்சாலை நிர்வாகத்தினர், தொழிலாளர் மற்றும் சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள். இதற்காக, திருப்பூர் தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கும், உழைக்கும் தேனீக்களான தொழிலாளர்களுக்கும் ஒரு ராயல் 'சல்யூட்' அடிக்கலாம்.
இனி தான்,'நிஜ' ஊரடங்கு!
திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனங்கள் இயக்கத்தை நிறுத்துவதால், இன்று இரவு முதல், 'நிஜ' ஊரடங்கு அமலுக்கு வந்துவிடும்; கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர, மாவட்ட நிர்வாகமும் முனைப்பு காட்டுகிறது. பொதுமக்கள் ஒத்துழைத்தால், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையை குறைக்க முடியும்.திருப்பூரில், கொரோனா இரண்டாவது அலை, தினமும், 700க்கும் மேற்பட்டோரை, தொற்றுக்கு ஆளாக்கி வருகிறது. பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், தொழிற்சங்கத்தினர், மாவட்ட நிர்வாகத்தினர் கோரிக்கைகளை ஏற்று, ஏற்றுமதி நிறுவனங்கள், இன்று இரவு முதல், தங்கள் இயக்கத்தை வரும் 24ம் தேதி வரை நிறுத்துகின்றன.

இதனால், சாலைகளில், தேவையில்லாமல், வாகனங்களில், சுற்றுவோரை கட்டுப்படுத்துவதும், தொற்றை தடுப்பதும் எளிதாகும் என்று மாவட்ட நிர்வாகத்தினர் கருதுகின்றனர். மாநகரை பொறுத்தவரை, இன்று இரவு முதல்தான், 'நிஜ' ஊரடங்கு அமலாவதாக கருத முடியும்.வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்!திருப்பூரை பொறுத்தவரை 1980 - 90 களில் தொழிலாளியாக இருந்தவர்கள் தங்களது கடுமையான உழைப்பின் மூலம் உயர்ந்த இடத்துக்கு சென்றுள்ளனர். வெளி மாநிலம், வெளி மாவட்டத்திலிருந்து வந்த, வரும் மக்களை அன்போடு அரவணைத்து வாழ வைத்து கொண்டுள்ளது திருப்பூர்.உழைப்பாளிகளின் நகரம், 'டாலர் சிட்டி' என்ற பெயர் பெற்ற, திருப்பூருக்கு, தம்மால் முடிந்ததை திருப்பி செய்ய தொழில் துறையினர், சேவை அமைப்பினர், அறக்கட்டளையினர் தாராளமாக முன் வரவேண்டும். அதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம் வாய்த்துள்ளது.
ஆம்... தற்போது கொரோனா அரக்கனின் பிடியில் சிக்கித்தவிக்கும் நோயாளிகளுக்கு எந்த வகையில் உதவலாம் என்ற சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள, தொழில் துறையினர் முன்வர வேண்டும். இதுகுறித்து தொழில்துறையினர் ஒருங்கிணைந்து உடனே முடிவு எடுத்து செயல்பட வேண்டியது அவசியம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • kalaiselvam - tiruppur,இந்தியா

    சொந்த ஊர் செல்ல விரும்பும் தொழிலாளிகளுக்கு வழிவகை செய்ய வேண்டும். மேலும் நிறுவனங்களின் நிர்பந்தத்தின் பேரிலேயே இந்த அளவு தொழிலாளிகளின் நடமாட்டம் உள்ளது. தெளிவில்லாத ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் தொழிலாளிகளுக்கு மட்டும் நான் தலை வணங்குகிறேன்

Advertisement