dinamalar telegram
Advertisement

கொரோனா தொற்றால் இறந்த உடல்களுக்கு உரிய மரியாதையுடன் நல்லடக்கம்

Share
Tamil News
கொரோனா தொற்றால் இறந்தவரை அடக்கம் செய்ய உறவினர்களே தயக்கம் காட்டும் நிலையில், காஞ்சியைச் சேர்ந்த 'பசுமை புரட்சியில் எங்கள் முயற்சி' அமைப்பினர், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்களது சொந்த செலவில் இறந்தவர்களின் உடலுக்கு உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வருகின்றனர்.

கொரோனா தொற்றால் இறந்தவர்களை நெருங்கிய உறவினர்கள் கூட கட்டியணைத்து கதறி அழவும், இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்யவும் அஞ்சுகின்றனர். தொற்றால் இறந்தோரை அடக்கம் செய்ய, கூலியாட்கள் கூட வர தயங்குகின்றனர்.இந்நிலையில் காஞ்சியில் பசுமை புரட்சியை உருவாக்க ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நடவு செய்தும், இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வரும் பசுமை புரட்சியில் எங்கள் முயற்சி என்ற தன்னார்வ அமைப்பினர், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் உடல்களை, தங்களது சொந்த செலவில் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வருகின்றனர்.

இது குறித்து, அமைப்பின் நிறுவன தலைவர் மகேந்திரன் கூறியதாவது:மூன்றாண்டுகளாக, ஆதரவற்றோரின் உடல்களை எங்கள் சொந்த செலவில் அடக்கம் செய்து வருகிறோம். கடந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்தோர் உடலை அடக்க செய்ய, உறவினர்களே தயக்கம் காட்டினர்.இதனால் கொரோனாவால் இறந்த ஆதரவற்றவர்களையும், உறவினர் இருந்தும் அடக்கம் செய்ய முடியாத உடல்களுக்கும், முற்றிலும் இலவசமாக, நல்லடக்கம் செய்து வருகிறோம்.எங்கள் அமைப்பில் உள்ள துணை செயலர் அல்தாப், செயலர் ஜெகன்நாதன், சக்தி டெய்லர், வரதராஜ் ஆகியோரின் உதவியுடன், இதுவரை கொரோனா தொற்றால் இறந்த 30 உடலை அடக்கம் செய்துள்ளோம்.

சாதாரணமாக இறந்தவர்களை 10க்கும் மேற்பட்டோர் சுமந்து செல்வர். ஆனால் கொரோனாவால் இறந்தவர்களை, எவ்வளவு துாரம் என்றாலும் நான்கு பேர் மட்டுமே சுமந்து செல்வோம். அடக்கம் செய்யும் பள்ளத்தையும், அந்த நான்கு பேரும் சேர்ந்து, மிகவும் ஆழமாக தோண்டுவோம்.கொரோனாவால் இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யும் போதே, எங்களுக்கு கொரோனாவின் மீதுள்ள பயமும் மரண பயமும் போய்விட்டது. இறந்தவர் மத வழக்கப்படி, முறையான இறுதிச்சடங்குகளை உரிய மரியாதையுடன் செய்து, இறந்த ஆத்மா சாந்தியடையும் வகையில் நல்லடக்கம் செய்து வருகிறோம்.

இப்பணியை தொடர்ந்து செய்ய எங்கள் அமைப்பினரும் முக்கிய காரணம்.ஆதரவற்றோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் உடல்களை இலவசமாக நல்லடக்கம் செய்ய விரும்புவோர், 95009 19121, 99432 95505, 99440 92532 ஆகிய மொபைல் போன் எண்களில் எங்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
-- நமது நிருபர் -
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement