dinamalar telegram
Advertisement

தவிப்பு: மருத்துவமனைகளில் இடமின்றி கொரோனா பாதித்தோர்...மாவட்டத்தில் கூடுதல் சிகிச்சை மையங்கள் தேவை

Share
Tamil News
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில்இடமின்றி, தொற்று பாதித்தவர்கள் தவிக்கின்றனர்.

கொரோனா இரண்டாவது அலை பரவல் கடலுார் மாவட்ட மக்களை அச்சுறுத்தும் வகையில் நாளுக்கு நாள் அதிரித்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 35 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 377 பேர் இறந்தனர்.தொற்று பாதித்தோர் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 500க்கும் குறையாமல் அதிகரிப்பதால், அதற்கேற்ப சிகிச்சை வசதிகள், தனிமைப்படுத்தும் மையங்கள் என, சிகிச்சையை மேம்படுத்த வேண்டும்.

கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லுாரி, சிதம்பரம் கோல்டன் ஜூப்ளி விடுதி, சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் கடலுார் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.மாவட்டத்தில் 2000க்கும் குறையாமல் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உள்ள நிலையில், தினமும் அதன் எண்ணிக்கை அதிகரிப்பதால், அரசு மருத்துவமனைகளில் இடமின்றி சேர்க்கை மறுக்கப்படுகிறது.மாவட்டத்தில் 7 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டும் இடவசதி இல்லை. குறிப்பாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் போதுமான அளவில் இல்லை.இதனால், கொரோனாவால் பாதித்து மூச்சு விட முடியாமல் உயிருக்கு போராடும் பலரும், மருத்துவமனைகள் ஒன்று விடாமல் அலைந்து தவியாய் தவித்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், மாவட்ட கொரோனா சிறப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி, கடலுாரில் ஆய்வு செய்த போது, ஆக்சிஜன் சிகிச்சை வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆக்சிஜன் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.எனவே, கடலுார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புக்கு ஏற்ப, கூடுதல் சிகிச்சை மையங்களை ஏற்படுத்துவதுடன், போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை தேவையான அளவில் அமைத்து உயிரிழப்புகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.கொரோனா சிகிச்சைக்கு சிறப்பு மையங்களை தயார்படுத்த மாவட்டத்தில் விஸ்தாரமான தனியார் மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவன இடங்கள் நிறைய உள்ளதால், மாவட்ட நிர்வாகம் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும். தொற்று பாதித்தவர்களை அழைத்துவர கூடுதல் ஆம்புலன்ஸ் இயக்கவும், தனியார் ஆம்புலன்சுகளை பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா பாதித்தோர் 'உலா'கொரோனா பாதித்தோர் தனிமை முகாம்களில் இருந்து அடிக்கடி வெளியே சென்று வருவதாக புகார் எழுந்துள்ளது. கடலுார் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரி முகாமில் இருந்து தொற்று பாதித்தோர் பின்புற வழியாகச் சென்று கடைகளில் பொருட்களை வாங்கி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.நோய் பாதித்தவர்களை சிகிச்சை முகாம்களுக்கு அனுப்ப, ஆம்புலன்ஸ் மூலம் கடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

அவர்களுக்கு பரிசோதனை செய்த பிறகு தனிமை முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். தொற்று பாதித்த அவர்களை பாதுகாப்பாக தங்க வைக்காததால், அவர்களும் மருத்துவமனையை விட்டு வெளியே வருகின்றனர்.இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இந்த விஷயத்திலும் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement