dinamalar telegram
Advertisement

இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Share
தமிழக நிகழ்வுகள்
1. குட்கா வியாபாரி குண்டாசில் கைது
விழுப்புரம் : குட்கா வியாபாரி குண்டாசில் சிறையில் அடைக்கப்பட்டார்.செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 42; குட்கா வியாபாரி. இவர் மீது அனந்தபுரம் போலீசில் பல வழக்ககள் நிலுவையில் உள்ளது. இவரது தொடர் நடவடிக்கையை தடுக்கும் வகையில், எஸ்.பி., ராதாகிருஷ்ணனின் பரிந்துரையை ஏற்று, சுந்தரமூர்த்தியை குண்டர் சட்டத்தி்ல சிறையில் அடைக்க கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.அதன்பேரில், சுந்தரமூர்த்தி குண்டர் சட்டத்தில் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

2. 120 சவரன் கொள்ளை மேலும் மூவர் கைது
திருப்பூர்: திருப்பூரில், 120 சவரன் நகை, 27 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், மேலும் மூவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், கே.செட்டிபாளையம், மும்மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சபியுல்லா, 53; அமெச்சூர் கபடி கழக மாநில பொதுச் செயலர்; பிரின்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.கடந்த மாதம் 4ம் தேதி, குடும்பத்தினருடன் இவர் ஊட்டி சென்றபோது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோக்களில் இருந்த 120 சவரன் நகை, 27 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. வீரபாண்டி போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர்.

மேட்டுப்பாளையம் பரத், 32; சத்தியமங்கலம் அப்துல் ஹக்கீம், 33; காரமடை கணேஷ்குமார், 34, ஆகியோரை கைது செய்து, 10 லட்சம் ரூபாய், 50 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த நாமக்கல்லை சேர்ந்த தீப்சித், 26; கோவை, குனியமுத்துாரைச் சேர்ந்த ராஜேஷ், 36; ராஜேந்திரன், 46, ஆகியோரை கைது செய்து, 30 சவரன் நகையை மீட்டனர். போலீசார் கூறுகையில், 'ராஜேஷும், ராஜேந்திரனும், வார மற்றும் மாத பத்திரிகையில் நிருபர்களாக இருப்பதாக கூறினர். முதலில் கைது செய்யப்பட்ட பரத், அப்துல் ஹக்கீம், கொள்ளையடித்த நகையை, நிருபர்களிடம் கொடுத்து வெளியே விற்றுள்ளனர்' என்றனர்.

3. ரூ.4 லட்சம் மது பாட்டில் பதுக்கி விற்ற மூவர் கைது
புதுக்கோட்டை; புதுக்கோட்டை அருகே, 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மூவர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே உடையாளிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் கலிய பெருமாள், 46; ஆறுமுகம், 55; இவரது மகன் சக்திவேல், 32. மூவரும் சேர்ந்து, மதுபானங்களை முன்கூட்டியே வாங்கி ஊருக்குள் பதுக்கி வைத்து, ஊரடங்கில் சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தனர். தகவல் அறிந்த கீரனுார் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு கலியபெருமாள் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கிருந்த, 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2,700 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்தனர்.

4. டீக்கடைக்கு 'சீல்'
அவிநாசி : அவிநாசி அருகே வஞ்சி பாளையத்தில் ஊரடங்கு விதி மீறி செயல்பட்ட டீக்கடை மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அவிநாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, வஞ்சிபாளையத்தில் ஊரடங்கு விதிமீறி, மதியம், 12:00 மணிக்கு மேல் சில கடைகள் செயல்பட்டு வந்ததாக, வருவாய்த் துறையினருக்கு தகவல் வந்தது.இதையறிந்த வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். அதில், சமூக இடைவெளியின்றி ஊரடங்கு விதி மீறி செயல்பட்டு வந்த ஒரு டீக்கடைக்கு சீல் வைத்து, எச்சரிக்கை விடுத்தனர்.அதிகாரிகள் கூறுகையில், 'தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். மேலும், அபராதமும் விதிக்கப்படும். ஊரடங்கு விதிமீறல் ஆய்வு தொடர்ந்து நடக்கும்,' என்றனர்.

5. ஊரடங்கிலும் சேவல் சண்டை சூதாட்டமாடிய 10 பேர் கைது
தொண்டாமுத்தூர் : கலிக்கநாயக்கன்பாளையத்தில், சட்டவிரோதமாக சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட, 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட, கலிக்கநாயக்கன்பாளையத்தில் சட்டவிரோதமாக, சேவல் சண்டை நடத்துவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சேவல் சண்டை நடத்தியதாக, பிரகாஷ், 31, செந்தில், 46, ரவி, குமார், சதீஷ்குமார், அருண்குமார், பிரதீப், விஸ்வநாதன், கார்த்திக், கெல்வின் ஆகியோர் மீது, வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இவர்களிடமிருந்து, 2 சேவல்கள், 2,270 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தியாவில் குற்றம் :
ம.பி., ஆற்றில் மிதக்கும் உடல்கள்
பன்னா:பீஹார் மற்றும் உத்தர பிரதேசத்தை அடுத்து, மத்திய பிரதேசத்தில் உள்ள ரன்ஜ் ஆற்றில், பலியானோர் உடல்கள் மிதப்பது, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்து உள்ளது. இம்மாநிலத்தில், உத்தர பிரதேசத்தின் எல்லையில் உள்ள பன்னா மாவட்டத்தின்நந்தன்பூர் கிராமத்தின் ரன்ஜ் ஆற்றில், பலியானோர் உடல்கள் வீசப்படுவதாக, அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உலக நடப்பு
ஜெருசலேம் வன்முறை சம்பவம்
நியூயார்க் : இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையிலான வன்முறை சம்பவங்களும், அதைத் தொடர்ந்து சுற்றுப்பகுதி மக்கள் வெளியேறுவதும் கவலை அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

மேற்காசியாவைச் சேர்ந்த இஸ்ரேல், நேற்று முன்தினம், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காசா பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, காசா பகுதியில் இருந்து ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. இரு தரப்பில் நடைபெற்ற இந்த மோதலில் 13 குழந்தைகள் உட்பட, 43 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஐ.நா.,வுக்கான இந்திய துாதர், டி.எஸ்.திருமூர்த்தி பங்கேற்று பேசினார்.
இது குறித்து அவர், 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள செய்தி:இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடைபெற்ற ஏவுகணை தாக்குதல் மற்றும் ஜெருசலேமில், ஹரம்ஹலி ஷரிப் பகுதியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிப்பதாக, ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்தது.மேலும், ஷேக் ஜரா, சில்வான் சுற்றுப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேறுவது குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டது. காசாவில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement