dinamalar telegram
Advertisement

இரக்கமற்ற இரண்டாம் அலையை வெல்வோம்!

Share
Tamil News
ஒரே சொந்தமான தாயையும் கொரோனாவில் பறிகொடுத்து, அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை அறியாமல் தவித்து நிற்கும் 6 வயது சிறுமி. அவருக்கு உதவ, இணையத்தில் கையேந்தும் சமூக ஆர்வலர்கள்.

கணவனை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்று, இருக்கும் அத்தனை பொருளையும் மருத்துவத்திற்காக செலவழித்து, இப்போது கணவன் இல்லாமல், கடனோடு மட்டும் நிற்கும் குடும்பத்தலைவி. மலையென நினைத்திருந்த மகன், கொரோனாவால் கண் முன்னே பலியானதை நம்ப முடியாமல், பிரம்மை பிடித்த நிலையில் இருக்கும் பெற்றோர் என, வீட்டிற்கு ஒரு கொரோனா சோகம், இப்போது தாக்கிக் கொண்டு இருக்கிறது. இரண்டாம் அலையை தாங்க முடியாமல், நாடும், வீடும் தகித்துக் கொண்டு இருக்கிறது.

'இந்தியர்களே எங்கள் நாட்டிற்கு வராதீர்கள்' என்று அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் மட்டுமல்ல, பக்கத்து நாடுகளான இலங்கை, வங்கதேசமும் கூட நம்மைத் தனித்து வைத்து பார்க்கும் கொடுமை, முதல் முறையாக ஏற்பட்டுள்ளது. 'இந்தியாவிலிருந்து வந்து, நாட்டின் எல்லையில் கால் வைத்தால் சிறைவாசம்' என, தன் குடிமக்களையே மிரட்டுகின்றன பல நாடுகள். அந்த அளவுக்கு, கொரோனா மீதான பயத்தில், நட்பு நாடான இந்தியாவையே அன்னிய நாடாக பார்க்கின்றன, உலக நாடுகள் பல.

திடீரென லட்சக்கணக்கான மக்கள் தொற்றால் பாதிக்கப்படும் போது, எத்தனை மருத்துவ வசதிகள் இருந்தாலும், எல்லாருக்கும் அவை கிடைக்க சாத்தியமில்லை. அதைத் தான் டில்லியிலும், லக்னோவிலும், ராய்ப்பூரிலும், பெங்களூரிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஐந்து நிமிடங்களுக்கு ஒரு ஆம்புலன்ஸ் 'சைரன்' சத்தம், இதுவரை நாம் கேட்டறியாதது. 'எங்கிருந்தாவது பிராண வாயுவை எங்களுக்கு அனுப்புங்கள்' என்று கதறுகிறார், டில்லி முதல்வர் கெஜ்ரிவால்.

இது, நாம் கண்டறியாதது. தொடர்ந்து சடலங்களை எரியூட்டியதால் உருகிப்போனது எரியூட்டு மேடை என்பதெல்லாம், நாம் கேள்விப்படாத ஒன்று.ஏன் இந்த இரண்டாம் அலை; ஏன் இப்படி வெறிகொண்டு தாக்குகிறது?கொரோனா, 'ப்ளூ' நோய்களை உண்டாக்கும் வைரஸ் வகையைச் சேர்ந்தது.

இது போன்ற வைரஸ், ஒரு இடத்தைத் தாக்கி, மக்களின் எதிர்ப்பு சக்தி குறையும் போது மீண்டும் வந்து தாக்கக் கூடியவை.கொரோனா போன்ற வைரஸ், மிருகங்களை உறைவிடமாக கொண்டு, சாதகமான நேரத்தில் மீண்டும் வெளியே வந்து மனிதர்களை தாக்கும் வல்லமை படைத்தவை. மிருகங்களின், பறவைகளின் வாழ்விடங்களை பறித்து, பளபளக்கும் கட்டடங்களை கட்டி வாழும் நம்மை, அந்த மிருகங்களும், பறவைகளும், வைரசுடன் கூட்டு சேர்ந்து, பழி வாங்குகின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கொரோனாவுக்குள்ள மற்றொரு பெரிய பலம், அதனால் உண்டான எதிர்ப்பு சக்தி 3 -- 11 மாதங்கள் மட்டுமே நீடிக்கிறது. அலை பரவ துவங்கும் நேரத்தில், மக்கள் கட்டுப்பாடற்று கூட்டம் கூட்டமாக கூடுவதும், திருவிழாக்கள், தேர்தல் என்று அலட்சியமாக இருப்பதும், நோய் வேகமாக பரவ வழிவகுக்கின்றன. அந்த நேரத்தில், பலமான ஒரு உருமாற்றத்தை அடைந்து அதிவேகமாக பரவ ஆரம்பிக்கிறது.

அறிகுறி இல்லாத கொரோனாபலருக்கும் அறிகுறி இல்லாத கொரோனா வருகிறது. வீட்டிற்கு வெளியே சென்று வருபவர்கள், மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம். தொற்றின் தொடர்வண்டியாக மாறி, பலருக்கு தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. வெளியே சென்று வந்ததும் நம்மை சரியாக சுத்தப்படுத்தி, முடிந்தவரை வீட்டில் உள்ள பொதுவான பொருட்களை தொடாமல், வயதானவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்களுடன் நெருங்கிப் பழகாமல் இருப்பது நல்லது.

கொரோனா தொற்று இருப்பவர்களை சந்தித்திருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற சந்தேகம் இருந்தால், வீட்டிலும் முக கவசம் அணிவது நல்லது.லேசான சளி, காய்ச்சல் வந்தால், பரிசோதனை செய்வதற்கு முன், நம்மை நாமே தனிமைப்படுத்தி மற்றவர்களுக்கு பரவாமல் காத்துக் கொள்ள வேண்டும்.

அனைவருக்கும் அட்மிஷன்?கொரோனா பாதித்த அனைவருமே, மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஏனென்றால், நோயின் தாக்கம் ஒரே மாதிரியான அளவில் அனைவருக்கும் இருப்பதில்லை. அதனால், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனையில், 'பாசிட்டிவ்' என்று வந்துவிட்டால், பதற்றப்படாமல் மருத்துவரின் ஆலோசனைப்படி, நோயின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை கணித்து, அவசியம் என்றால் மட்டுமே மருத்துவமனையில் சேர வேண்டும். இந்த தொற்று வந்தவர்களில் 70 சதவீதம் பேர், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுதலே போதுமானதாக இருக்கும்.

ஆக்சிஜன் தேவைலட்சக்கணக்கானோருக்கு, அதிக அளவு ஆக்சிஜன், குறுகிய காலத்தில் தேவைப்படுவதால் ஆக்சிஜனுக்காக அல்லாடுகிறோம். அரசு பல்வேறு விதங்களிலும், தேவையான அளவு ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு அனுப்ப நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதில் பலர், பயத்தில் தேவையில்லாமல் ஆக்சிஜன் சிலிண்டர்களையும், செறிவூட்டிகளையும் வாங்கி, வீட்டில் சேமித்து வைத்துக் கொள்வது மிகப்பெரிய தவறாகும்.

நம் ஒவ்வொருவரின் நுரையீரலுமே ஆக்சிஜன் செறிவூட்டி தான். நம் மூச்சை, நாம் உற்றுக் கவனித்தால், அதை அறிந்து கொள்ளலாம். நம்மால் முடிந்த அளவு உள்ளிழுக்கும் காற்றை நுரையீரலில் வைத்திருந்தால், அதிகப்படியான ஆக்சிஜன் நம் ரத்தத்தில் கலக்கும். வீட்டுக்குள்ளேயே வளர்க்கக்கூடிய செடிகள் மற்றும் துளசி செடி போன்றவை, அதிக அளவு ஆக்சிஜனை பகல் நேரத்தில் வெளிவிடக் கூடியவை. இவை நம்மை சூழ்ந்துள்ள இடத்தில், ஆக்சிஜனின் அளவை அதிகரிக்க உதவும்.

மருந்துஇன்றுவரை கொரோனாவுக்கு என, இது தான் மருந்து என்று எதுவும் கண்டு பிடிக்கப்பட வில்லை. எந்த நோயானாலும் மருந்து கொடுக்க ஆரம்பித்த உடனேயே நோயின் தீவிரம் குறையும்; அவர் உடலில் உள்ள வைரஸ் அளவு குறையும்; மற்றவருக்கு தொற்றக்கூடிய வாய்ப்பு குறையும். கொரோனா விஷயத்தில் அதை செய்ய முடியாமல் இருப்பதால் தான் தொற்றிடம் தோற்று, தீவிரத்தை கட்டுப்படுத்த முழு முடக்கத்தை நாட வேண்டியிருக்கிறது.

'ரெம்டெசிவிர்' ஊசி மருந்து வேலை செய்கிறது என்றாலும், அது குறிப்பிட்ட 10 சதவீதம் பேருக்கு மட்டுமே உதவியாக இருக்கிறது. எனினும் அதை, உயிர் காக்கும் மருந்து என்று சொல்வதற்கில்லை. நோய்த் தொற்றின் அறிகுறிகளை குறைத்து, நோயாளி மருத்துவ மனையில் இருந்து, இரண்டு, மூன்று நாட்கள் முன்பாகவே நோயிலிருந்து விடுபட்டு செல்வதற்கு அந்த மருந்து உதவுகிறது.

தமிழகம் முழுவதற்கும் கொரோனா நோய்க்கான மருந்துகளை, 'இன்ன அறிகுறிகளின் அடிப்படையில் கொடுக்க வேண்டும்; அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் அதை மட்டுமே பின்பற்ற வேண்டும்' என்ற அறிவுறுத்தலோடு அரசு வெளியிட்டால், ரெம்டெசிவிர் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். ரெம்டெசிவிரை விற்பனை செய்யும் முக்கிய முகவர்கள், மருத்துவமனைகளுக்கு மட்டுமே நேரடியாக அவற்றை வினியோகிக்க வேண்டும்.

தேவைப்படும் தனியார் மருத்துவமனைகள் நேரடியாக முன்பு போல வாங்கிக் கொள்வர். இதனால் மருந்தை பதுக்குவது, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது போன்றவை குறையும். உற்பத்தி அதிகப்படுத்தப்படுவதால், இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் தேவையான அளவு ரெம்டெசிவிர் தாராளமாக சந்தையில் புழங்கும்.

தடுப்பூசிவளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றான நம் இந்தியா, தடுப்பூசி விஷயத்தில் 17 கோடி பேருக்கு கொடுத்து, உலக அளவிலான எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு வருடம் கூட ஆகவில்லை. சொல்லப் போனால் ஆறு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் நாம் 17 கோடி பேருக்கு போட்டு விட்டோம் என்பது மிகப்பெரிய சாதனை.

ஆஸ்திரேலியா போன்ற, சுகாதாரத்திலும், ஆராய்ச்சியிலும் மிகப்பெரிய, நம்மை விட பல படிகள் மேலே நிற்கும் நாடுகள் கூட, தடுப்பூசி கண்டுபிடிக்கும் விஷயத்தில் மண்ணைக் கவ்வி இருக்கின்றன.உலகிலுள்ள எத்தனையோ பணக்கார நாடுகள், தடுப்பூசி கொடுப்பதை ஆரம்பிக்கக் கூட இல்லை. இன்னும் சில பணக்கார நாடுகள், தடுப்பூசி தட்டுப்பாட்டால் ஒரு ஊசி மட்டுமே கொடுத்திருக்கின்றன.

அதனால், தடுப்பூசி தட்டுப்பாட்டை அரசியல் ஆக்காமல், இது தற்காலிகமானது என்பதை உணர்ந்து, பொறுமையாக இருந்தோமென்றால் தகுதியானவர்களுக்கு கட்டாயமாக இந்த வருடத்திற்குள் தடுப்பூசி கிடைத்துவிடும்.இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தி 60 நாட்களாகும் நமக்கு, இந்த நோயிலிருந்து விரைவில் பாதுகாப்பு கிடைக்கத் தான் செய்யும்.

மேலும், அடுத்து வரும் அலைக்கு ஒரு பாதுகாப்பாக, இந்த தடுப்பூசி அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த அலையில் இருந்து தப்புவதற்கு முக கவசம் அணிதலும், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் மட்டுமே ஆயுதங்கள்.

இந்த கொரோனா காலத்தில் மருத்துவமனைகளுக்கும், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் வேலைப்பளு பல மடங்கு அதிகரித்து விட்டது.இருந்தும், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள், சிரித்த முகத்தோடும், தளராத மனதோடும், கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளை செலுத்துதல் என, எல்லாவற்றிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு செய்து கொண்டிருக்கின்றனர்.

மறுக்க முடியாத ஒரு உண்மை உண்டு... அது என்னவென்றால், நம் வீட்டிற்குள் கொரோனாவை கொண்டு வருவது, நாம் தான்; நம் கவனக்குறைவு தான், நம் அலட்சியம் தான், கொரோனாவை வீட்டிற்குள் கொண்டு வருகிறது. பொறுப்பான குடிமக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், இந்த இரண்டாம் அலை இன்னும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் என்கின்றனர்.

அதுவரை தாக்குப்பிடிக்க வேண்டுமே என்ன செய்யலாம்?நாம் ஒவ்வொருவரும், நமக்கு கொரோனா வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அது தான் நம் தலையாய கடமை. இரண்டாவது, நம் மூலமாக மற்றவர் எவருக்கும் கொரோனா பரவாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதன் மூலம் மருத்துவமனைகளின் சுமையை குறைக்கலாம்; மருத்துவர்களுக்கு வேலைப்பளுவை குறைக்கலாம்; கொரோனா முடக்கத்திலிருந்து முடிந்தவரை சீக்கிரமாக வெளியே வரலாம்.

அத்தியாவசியமான வேலைகளுக்காக அன்றி, கட்டாயமாக வெளியே செல்லாதீர்கள்.'வீணே வீழ்வோ மென்று நினைத்து விடாதே கொரோனா... வீறு கொண்டு விட்டோம் உன்னை வெல்வதற்கே' என்ற வைராக்கியம் தான் கொரோனாவை வெல்லும்; நம்மை காக்கும். பாதுகாப்பாக இருப்போம்!

தொடர்புக்கு:
டாக்டர்ஜெயஸ்ரீ சர்மா
மொபைல்: 80560 87139
இ - -மெயில்: doctorjsharma@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. - Vilathikulam Pudur,இந்தியா

    சமுதாயத்தில் நிலவும் கையறு நிலையை ஒரு மருத்துவராக வார்த்தைகளில் அற்புதமாக நேரில் பார்க்கின்றது போல எழுதி உள்ள மருத்துவ சகோதரிக்கு வாழ்த்துக்கள் . இரண்டாம் அலையை தாங்க முடியாமல், நாடும், வீடும் பரிதவிக்கும் நிலை . உலக நாடுகள் இந்தியாவை பரிதாபமாக பார்க்கும் நிலையையும், நம்மை தீண்டத்தகாதவர்களாக பாவிக்கும் நிலையையும் மனம் வெதும்பி, இந்தியர்கள் இத்துயரில் இருந்து மீண்டு வர மக்களின் கடமையை எடுத்து சொல்லியது அருமை. மனிதன் சுற்றுப்புற சூழ் நிலையை பாழ் படுத்தி தன்னை மட்டுமே மைய படுத்தி வாழ்ந்து பிற உயிர்களை அழித்து வருவதை மிருகங்களின், பறவைகளின் வாழ்விடங்களை பறித்து, பளபளக்கும் கட்டடங்களை கட்டி வாழும் நம்மை, அந்த மிருகங்களும், பறவைகளும், வைரசுடன் கூட்டு சேர்ந்து, பழி வாங்குகின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று மனக்குமுறலுடன் கூறி உள்ளதை மக்கள் மட்டும் இல்லாமல் அரசுகளும் கவனித்து செயல் பட வேண்டும். லட்ச கணக்கான மக்களுக்கு உயிர் மூச்சான பிராண வாயுவினை மருத்துவ மனைகள் வழங்க படும் கஷ்டங்கள் சொல்லில் அடங்கா. மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்காத நிலையில் மக்கள் கவனமாக மருத்துவரின் அறிவுரைப்படி ரெம்டெசிவிர் எடுத்துக்க வேண்டியது அவசியம். தடுப்பூசிகள் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு கிடைக்க அரசு வழி காண வேண்டும். மக்கள் கொரோனா பற்றிய விழிப்புணர்வின்றி இருப்பதால் கொரோனா பரவுவது மருத்துவ துறையை பாடாய் படுத்துவது கண்கூடான செய்தி . தொடர்ந்து கொரோனா.ஒழிப்பில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ள அனைவருக்கும் ஏற்படும் மன உளைச்சலையும் பாதிப்புகளையும் சரி செய்ய திட்டம் வேண்டும். 'வீணே வீழ்வோ மென்று நினைத்து விடாதே கொரோனா... வீறு கொண்டு விட்டோம் உன்னை வெல்வதற்கே' என்ற வைராக்கியம் தான் கொரோனாவை வெல்லும் நம்மை காக்கும். பாதுகாப்பாக இருப்போம் வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற மஹாகவி பாரதியின் வார்த்தைகள் நம்மை பலப்படுத்தும் . மக்களுக்கு சென்றடையும் வண்ணம் எளிய நடையில் அருமையாக எழுதி உள்ள மருத்துவ சகோதரிக்கு வாழ்த்துக்கள் .

  • S Ramkumar - Tiruvarur,இந்தியா

    நல்ல கட்டுரை

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

    மிகவும் அருமையான கட்டுரை..... மக்களுக்கு தெளிவாக புரியும்படியும் , அதே சமயத்தில் அழுத்தமாகவும் எழுதப்பட்டுள்ளது ...... பாராட்டுக்கள் மிகப் பல .

Advertisement