dinamalar telegram
Advertisement

திருமண நிகழ்வில் 50 சதவீத இருக்கைக்கு கருணை காட்டுங்க! உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மன்றாடல்

Share
Tamil News
கோவை:'கொரோனா' தொற்று இரண்டாவது அலை பரவலால், திருமண நிகழ்வுகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால், மண்டப உரிமையாளர்கள் மற்றும் அதுசார்ந்த தொழிலாளர்கள் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.கோவையில், 200க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. கல்யாணம், சீர் மற்றும் காதணி விழா போன்ற நிகழ்ச்சிகள், திருமண மண்டபங்களிலேயே பெரும்பாலும் நடத்தப்படுகின்றன.
கடந்தாண்டு, கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தியபோது, திருமண நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. அதனால், நிச்சயம் செய்யப்பட்ட திருமண நிகழ்ச்சிகளை திருமண விட்டார் ரத்து செய்தனர். மண்டபங்களுக்கு கொடுத்த, 'அட்வான்ஸ்' தொகையை திரும்ப பெற்றனர். மண்டப உரிமையாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது.அதன்பின், சிலர் எளிமையாக கோவில்களில் திருமணத்தை முடித்துக் கொண்டனர். பல திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டன. கொரோனா தொற்று காலத்தில், வரன் பார்ப்பதை மக்கள் நிறுத்திக் கொண்டனர்.
கடந்த ஓர் ஆண்டில், நடக்க வேண்டிய பல ஆயிரம் திருமணங்கள் நடக்கவில்லை. தொற்று குறைந்து ஊரடங்கு தளர்த்திய பிறகும், பெரிய அளவில் திருமணங்கள் நடக்கவில்லை. இதனால், இதுசார்ந்த அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டன.இப்போது, இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருமண நிகழ்வுகளில், 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என, விதிமுறை விதித்திருப்பதால், மண்டப உரிமையாளர்கள், கேட்டரிங் சர்வீஸ்காரர்கள், திருமண மேடை அலங்காரம் செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கவலையில் உள்ளனர்.தியேட்டர்களில், 50 சதவீத இருக்கைக்கு அனுமதியிருப்பதைபோல், கல்யாண மண்டபங்களிலும், 50 சதவீத இருக்கை போட்டுக்கொள்ள உத்தரவிட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இத்துறை தொழிலாளர்கள் கூறியதாவது:திருமண நிகழ்வுகளுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளால், கோவையில் மட்டும் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். மண்டபங்களை வருவாய் அல்லது சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, 50 சதவீத இருக்கை போடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். விருந்தினர்கள் முக கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல், உடல் வெப்ப நிலையை கண்டறிவதை கட்டாயமாக்கலாம்.மண்டபம் முழுவதும், 4 மணி நேரத்துக்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிப்பது; வேலைக்கு வரும் அனைவரின் உடல் தகுதியை உறுதி செய்வது; வேலையாட்கள் கையுறை, தலையுறை, முக கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல் என்பது உட்பட கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து, எங்களது வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கோவை மாவட்ட திருமண மண்டபங்கள் அசோசியேஷன் தலைவர் சிங்கை முத்து கூறுகையில், ''கோவையை பொறுத்தவரை, திருமண நிச்சயம் முடிந்ததும் மண்டபத்துக்கு 'அட்வான்ஸ்' கொடுப்பது வழக்கம். கடந்தாண்டு, 'புக்'கான பல திருமணங்கள் நடக்கவில்லை. ஊரடங்கை தளர்த்தியதும், குறைந்த அளவில் நிகழ்ச்சிகள் நடந்தன. இரண்டாவது அலை பரவல் காரணமாக, திருமண வீட்டார் மண்டபங்கள் 'புக்' செய்வதை நிறுத்தி விட்டனர். ஊரடங்கு வரும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. கடந்தாண்டை போலவே, இந்த ஆண்டும் எங்கள் தொழில் பாதிக்க ஆரம்பித்திருக்கிறது,'' என்றார்.
கேட்டரிங் தொழிலை நம்பி, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கின்றனர். கடந்தாண்டு எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் போய் விட்டது. கல்யாண விசேஷங்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் தளர்வு அளிக்க வேண்டும்.-நாகராஜ், தலைவர், கோவை மாவட்ட கேட்டரிங் அசோசியேஷன்கொரோனாவால் எங்கள் தொழில் அதிகமாக பாதித்துள்ளது. கல்யாணம் மட்டுமல்ல, கோவில் விசேஷம் மற்றும் பொது நிகழ்ச்சிகள் அனைத்திலும் எங்களுக்கு வேலை இருக்கிறது. தேர்தலில் கூட பெரிய அளவில் வேலை வாய்ப்பு இல்லை. பாதுகாப்பு விதிமுறையை பின்பற்றி, நிகழ்ச்சிகள் நடத்த, அரசு அனுமதிக்க வேண்டும்.-மணிமாறன், மாநில செயலாளர், பந்தல், மேடை அலங்காரம் மற்றும் சவுண்ட் சர்வீஸ் கூட்டமைப்பு
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • Durai - Chennai,இந்தியா

    Please give relaxation for marriage function. Government may consider this with humanity.

  • ஆப்பு -

    ஏதாவது ஜாதி சங்க எலக்‌ஷன்னு சொல்லி பர்மிஷன் வாங்கிருங்க. தேர்தல் பரப்புரைக்கு தடை ஏதும் இல்லை. ஜாதி அரசியலுக்கும் தடையில்லை. முகவசம் தேவையில்லை. பரப்புரை மேடையிலேயே கல்யாணத்தை முடிச்சிருங்க.

Advertisement