மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் முடிந்த நிலையில், நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட, கோவை ஜி.சி.டி., கல்லுாரியில் உள்ள ஓட்டு எண்ணும் மையத்தை கமல் பார்வையிட்டார்.
மனமார்ந்த நன்றி
அதன்பின், அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தின், 16வது சட்டசபை தேர்தலில், 72 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் இருந்த, இந்த இக்கட்டான சூழலிலும், 72 சதவீத வாக்காளர்கள், தங்கள் கடமையை ஆற்றியிருப்பது, ஜனநாயகத்தின் மீது, மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. அரசியலாளர்களின் பொறுப்பை கூட்டுகிறது.
இந்தத் தேர்தலில் என்னோடு கைகோர்த்து களம் கண்ட, ம.நீ.ம., உறுப்பினர்கள், தோழமை கட்சிகளின் உறுப்பினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள், சக போட்டியாளர்கள். மேலும், வாக்காளர்கள், தேர்தல் கமிஷன், ஊடக வியலாளர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறையினர், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், என் மனமார்ந்த நன்றி.
கூட்டுக் கனவு
தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது. என்னைப் பொறுத்த வரை, இந்தத் தேர்தல் ஒரு புதிய துவக்கம். என் கட்சியினருக்கும், இது புதிய அனுபவம். நிறைய அனுபவங்களை கற்று முன்னேறி உள்ளோம். 'மக்கள் அன்பை விட மகத்தான பலம் இல்லை' என்பது, அதில் முதன்மையானது. தமிழகத்தை சீரமைப்போம் என்பது, வெறும் தேர்தல் கோஷம் அல்ல. அது ஒரு கூட்டுக் கனவு. அதை நோக்கிய பாதையிலும், பயணத்திலும் சிறிதும் விலகல் இல்லை. மண்ணை, மொழியை, மக்களை காக்க, இன்று போல என்றும் களத்தில் நிற்போம். இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.
கழகத்தை போல் பேச்சு. மண் மொழி மக்கள் சிதிலம் ஆனது இந்த திராவிட ஆட்சிகள் வந்த பின்தான் அரங்கேறின.