dinamalar telegram
Advertisement

மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிப்பது அவசியம்!

Share
ஒவ்வொரு முறை சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படும் போதும், அதில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் பற்றிய கேள்விகள் எழும். தேர்தல் முடிந்த பின், அது பற்றி எந்த அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பேசுவதில்லை.

தேர்தல் நேரங்களில், வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக, பெண்களின் ஓட்டுகள் இருக்கின்றன என்பதை, எந்த கட்சியும் மறுப்பதில்லை. அதனால் தான், தங்களின் தேர்தல் அறிக்கைகளில், பெண்களை கவரும் வகையிலான, பல அறிவிப்புகளை வெளியிடுகின்றன. அவர்களுக்கான இடஒதுக்கீடு குறித்தும் பேசுகின்றன. ஆனால், தேர்தலில் சீட் வழங்கும் போது மட்டும், பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீட்டை, முதலில் கருணாநிதி தான் அமல்படுத்தினார். பின் அதை, 50 சதவீதமாக ஜெயலலிதா உயர்த்தினார். அதேபோல, அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு, 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டமும், 1989ல், தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. மேலும், சொத்தில் பெண்களுக்கு பங்கு உட்பட, பல சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.

ஆனாலும், லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத் திருத்தம், பார்லிமென்டில் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.உலக அளவில், வளர்ந்து வரும் நாடுகளில், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றி பார்த்தால், 193 நாடுகளில், இந்தியா, 143வது இடத்தில் இருப்பதாக, சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதிலிருந்தே, பெண்களுக்கு நாம் இன்னும் அதிக முக்கியத்துவம் தர வேண்டியதன் அவசியத்தை உணரலாம்.தமிழகத்தில் இதுவரை நடந்த சட்டசபை தேர்தல்களில், 2016ல், 320 பெண்கள் தேர்தல் களத்தில் நின்றனர். அந்த சாதனையை முறியடித்து, தற்போதைய தேர்தலில், 411 பெண்கள் களத்தில் நிற்கின்றனர் என்றாலும், அதில், சீமானின் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே, 117 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க., போட்டியிடும், 176 தொகுதிகளில், 14 இடங்கள் மட்டுமே பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இவை, மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கையில், 7.9 சதவீதம். அ.தி.மு.க., கூட்டணியில், 20 இடங்களைப் பெற்றுள்ள, பா.ஜ., மூன்று தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.அதேபோல, தி.மு.க.,வின், 173 வேட்பாளர்களில், 12 பேர் மட்டுமே பெண்கள். இந்தக் கூட்டணியில், 25 தொகுதிகளைப் பெற்றுள்ள காங்கிரஸ், விளவங்கோடு தொகுதியில் மட்டுமே, பெண் வேட்பாளரை நிறுத்தியுள்ளது.அரசியலில் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை, பெண்கள் மிகத்திறமையாக கையாள்கின்றனர். நாடு முழுதும் உள்ளாட்சி அமைப்புகளில், ௧௩ லட்சம் பெண்கள் பொறுப்பில் உள்ளனர். அவர்கள், தங்கள் கடமையை சரி வர செய்து வருகின்றனர்.

மேலும், இந்திரா, ஜெயலலிதா, மம்தா உட்பட பல தலைவர்கள், அரசியலில் குதித்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாக, பெரிய அளவில் சாதனை படைத்துள்ளனர். அதனால், அரசியலில் பெண்கள் பங்கேற்பது நமக்கு புதிதல்ல. என்றாலும், அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில், ஆணாதிக்கமே தொடர்கிறது.தமிழகத்தில் ஏராளமான தொகுதிகளில், வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தும், அவர்களுக்கான பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பது கவலை அளிக்கிறது.


எனவே, பெண்களை கவர, ஒவ்வொரு தேர்தலிலும், கவர்ச்சி வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள், பெண்களுக்கு குறிப்பிட்ட அளவு பிரதிநிதித்துவம் தருவதையும் உறுதி செய்ய வேண்டும். அப்படி செய்தால், அரசியல் வரும் காலத்தில் ஊழல் இல்லாத நிலைக்கு மாற வாய்ப்பு உண்டு.உலக அளவில், பார்லிமென்ட்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து, சர்வதேச அமைப்பு ஒன்று ஆய்வு நடத்தியது. அதில், 1995ல், 11.3 சதவீதமாக இருந்த பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை, 2020ம் ஆண்டில், 24.9 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது நல்ல முன்னேற்றம் என்றாலும், மேலும் அதிகரித்து, 50 சதவீதத்தை எட்ட வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாகும்.

அரசியல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தால் தான், சட்டசபை மற்றும் பார்லிமென்டில், பெண்கள் அதிக பிரதிநிதித்துவம் பெற நேரிடும். ஆரம்பத்தில் நீண்ட காலமாக அரசியலில் கோலோச்சும், தலைவர்களின் மனைவி அல்லது குடும்பத்தினர் பிரதிநிதித்துவம் பெற்றாலும், அடுத்தடுத்து வரும் காலங்களில் படிப்படியாக மாற்றங்கள் நிகழலாம். அப்போது, பல்வேறு பிரிவு பெண்களும் பிரதிநிதித்துவம் பெறுவர்.உள்ளாட்சித் தேர்தலில், பெண்களின் பங்களிப்பு அதிகமாகியுள்ளதால், மாற்றம் ஏற்பட்டுள்ளதை நாம் பார்க்கிறோம். அதுபோன்ற மாற்றங்கள், இதிலும் நிகழும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கான முயற்சியை, கட்சிகள் முன்னெடுத்தால் நல்லது. அதற்கு மகளிர் அமைப்புகளும் தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement