தற்போதைய தொழில்நுட்பங்கள், எழுத்திலிருந்து விலக்குவதாக உள்ளதா?
நான் அப்படி நினைக்கவில்லை.மொபைல் போன்களில் குரல் பதிவு, காட்சிப் பதிவு என, பல்வேறு வசதிகள் வந்தாலும் கூட, குறுஞ்செய்தியாக அனுப்பும் வழக்கம் தான் அதிகம். எனவே, தொழில்நுட்ப வளர்ச்சியிலும் கூட, எழுத்துக்கு, முன்பை விட அதிக முக்கியத்துவம் உள்ளதாகவே நான் உணர்கிறேன்.
இளைஞர்கள், தமிழோ, ஆங்கிலமோ பிழையின்றி எழுதுவதில்லை என்ற குற்றச்சாட்டு பற்றி?
அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுப்பதில்லை; அவர்கள், வலிய சென்று பயிற்சி எடுப்பதில்லை என்பதும் தான் காரணம்.
தமிழில் பிழையில்லாமல் எழுதுவது குறித்து இயங்குகிறீர்கள். வரவேற்பு எப்படி உள்ளது?
எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு உள்ளது. இலக்கணம் குறித்தோ, எழுத்து குறித்தோ சூத்திரங்களைச் சொல்வதில்லை. மாறாக, சுலபமாக நினைவில் வைக்கும் வகையில், எதார்த்தமாகச் சொல்கிறேன். இப்படி, எளிமையாக சொல்லக் கூடாது என, பல தமிழாசிரியர்கள். எதிர்ப்பு தெரிவித்தது தான் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
பிறமொழிச் சொற்கள் கலக்காமல் பேசுவதும் எழுதுவதும் சாத்தியமா?
நாம் பயன்படுத்தும், ஆங்கிலம், சமஸ்கிருத சொற்களை நீக்கிவிட்டால், தனித்தமிழில் பேசவோ, எழுதவோ முடியும். என்றாலும், சமஸ்கிருத சொற்கள் தான் என்பதை அறியாமல், பல சொற்களை பயன்படுத்துகிறோம்.
அதாவது, தமிழில் ஒரு சொல்லுக்கு எதிர்ச்சொல் வேறொன்றாக இருக்கும். அது தான் தமிழின் வளம். ஆனால், ஒரு சொல்லுக்கு முன், அ, துர், நிர் போன்ற ஒட்டுச் சொற்களைச் சேர்த்து, எதிர்ச்சொல்லாக மாறினால், அது சமஸ்கிருதச் சொல். அதேபோல, ஒரு குறிலில் துவங்கும் பொருளுக்குப் பின், 'ர்' என்ற எழுத்து இருந்தால், அதுவும் தமிழ்ச் சொல்லாக இருக்காது.
நீங்கள் இதுவரை, எத்தனை துாய தமிழ் சொற்களை உருவாக்கி இருப்பீர்கள்?
ஆயிரத்துக்கும் மேற்பட்ட துாய தமிழ் சொற்களை உருவாக்கியுள்ளேன். அவற்றை, ஒரு புத்தகமாக வெளியிட உள்ளேன்.
இலக்கணத்தை, இளைஞர்கள், மாணவர்களிடம் எப்படிச் சேர்க்கிறீர்கள்?
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழில், தமிழ் இலக்கணத்தை எளிமையாக கற்பது குறித்து, நான் விளக்கம் அளித்து வருகிறேன்.அப்பகுதியை, பல தமிழாசிரியர்கள், அறிவிப்பு பலகையில், ஒட்டி வைத்துள்ளனர். மாணவர்களுக்காக, தமிழில் வெளிவரும் மிகச்சிறந்த இதழாகவே அதைப் பார்க்கிறேன். அதேபோல், சில மின் ஊடகங்களின் வழியாகவும் கடத்துகிறேன்.
உங்களின் புதிய நுால்கள் பற்றி?
ஊரடங்கு காலத்தில், நிறைய எழுதினேன்.தற்போது, இலக்கணத் தெளிவு, மொழிவளப் பேழை, சொல்லேர் உழவு, மாச்செருநன், சுற்றுலா ஆற்றுப்படை, தமிழ் அறிவோம் போன்றவற்றை, தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவற்றில், காதல் பற்றிய கவிதைகள், தமிழ் இலக்கணம், துாய தமிழ் பற்றியது என, எல்லாமும் உண்டு.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!