dinamalar telegram
Advertisement

வாங்க... ஏமாறத் தயாராகுவோம்!

Share
எண்ணி இன்னும் 36 நாளில் ஓட்டு பதிவு நடைபெற இருக்கிறது. யார் யாருடன் கூட்டணி, யாருக்கு எந்த தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் யார், அவரது வெற்றி வாய்ப்பு எப்படி என்பதையெல்லாம் அசை போடுவதற்கோ, அலசுவதற்கோ கூட நேரமிருக்காது போலிருக்கிறது. 'திருவிழா போல ரொம்ப அலட்டிக்காதீங்க; அடக்கி வாசிங்க!' என்று அரசியல்வாதிகளுக்கு சொல்லும் வகையில், தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நடத்த உள்ளது.

'வாக்காளர்களின் வாக்கை விட, அவர்களின் பாதுகாப்பு தான், மிக முக்கியம். ஆகவே, 'கொரோனா' காலத்தில் அவர்களை கும்பல் கும்பலாக போய் சந்தித்து ஓட்டு கேட்பதை தவிருங்கள்; தவிர்க்க முடியாவிட்டால், அதிகபட்சமாக நான்கு பேர் போகலாம். அதே போல, வேட்பு மனு தாக்கல் செய்ய, இரண்டு பேர் போதும். கூட்டம் கூடி விடக் கூடாது' என்பதில் கறராக இருக்கின்றனர்.

'ஓட்டுச்சாவடிக்கோ, ஓட்டு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதியில்லை. ஜாதி, மத, மொழி, இன ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பரப்புரை செய்யக்கூடாது. வழிபாட்டுத் தலங்களில், தேர்தல் பரப்புரை செய்யக் கூடாது. மாற்று கட்சியின் கொள்கை, செயல் திட்டங்கள், ஆட்சியை விமர்சிக்கலாம். மாற்று கட்சியின் தனி நபர்களின் சொந்த வாழ்க்கையை விமர்சிக்க கூடாது' என்று, ஏகப்பட்ட கூடாதுகள் பற்றி சொல்லியிருக்கின்றனர். அரசியல்வாதிகள், காதில் வாங்கிக் கொள்வரா?
'ஒரு வேட்பாளர், தமிழகத்தில் முப்பது லட்ச ரூபாய் வரை தான் செலவு செய்யலாம்' என்று இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சொல்வதை, தொலைக்காட்சியில் கேட்டுக் கொண்டு இருந்த தமிழக வாக்காளர்கள், வாய்விட்டுச் சிரித்தனர். இந்தியாவில் எத்தனையோ தேர்தல்கள் நடந்துள்ளன; எத்தனையோ தொகுதிகள் உள்ளன; இருந்தும், தேர்தல் ஆணையர், பணப் புழக்கத்திற்கு உதாரணமாக, வேலுார் லோக்சபா தேர்தலையும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையும் சுட்டிக்காட்டிய போது, தமிழக வாக்காளர்கள் வெட்கித் தலைக்குனிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

எப்போது தேதி அறிவித்தாலும், அதற்கு தயாராக இருந்தவர் முதல்வர் இ.பி.எஸ்., மட்டுமே. கடந்த சில நாளாக, அவரே முதல்வராக, அவரே கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக, அவரே பேச்சாளராக என, 'அனைத்தும் நானே' ஆகி விட்டார். அவருடைய ஓட்டம், பொங்கல் பரிசு என, 2,500 ரூபாயில் ஆரம்பித்து, தேர்தல் தேதி அறிவிப்பு நாளான, நேற்று முன்தினம் வரை நீடித்தது.

பிரேமலதா, தம்பி சுதீஷ், மகன்
விஜயகாந்த் உடல் நலத்துடன் இருந்த வரை, தே.மு.தி.க.,வின் பலமே தனியாக இருந்தது. இப்போது பிரேமலதா தான் எல்லாம் என்றான பின், அக்கட்சியில் விருப்ப மனு வாங்கக் கூட ஆள் இல்லை. வாங்கிய விருப்ப மனுவும், பிரேமலதா, தம்பி சுதீஷ், மகன் விஜயபிரபாகரன் பெயரில் தான் வாங்கப்பட்டிருக்கிறது. 'இதெல்லாம் வேலை க்கு ஆகாது; கொடுக்கிறதை கொடுங்க' என்று சமாதானமாகப் போக வேண்டிய நிலை ஏற்பட்டாலும் பரவாயில்லை. இரண்டு பேர் அ.தி.மு.க.,வுடன் பேச, இரண்டு பேர் தி.மு.க.,வுடன் பேச என, கடந்த லோக்சபா தேர்தலைப் போலச் சென்றால், அதிக, 'மீம்ஸ்'களை வாங்கும் ஒரே கட்சி என்ற பெயரை தக்க வைத்துள்ள, தி.மு.க.,வை மிஞ்சி விடுவீர்கள்; பார்த்துக்குங்க!

இப்படி, அ.தி.மு.க., - பா.ஜ.க., - பா.ம.க., - தே.மு.தி.க., என ஒரு அணி, கிட்டத்தட்ட தயராகி விட்டது. ஆனால், தி.மு.க.,வில் போட்டியிட விருப்ப மனு வாங்க, சென்னை அண்ணாசாலையில் குவிந்த கூட்டம், அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சியினரிடமும், ஒரு மலைப்பையும், வியப்பையும், திகைப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலின் நடத்திய பரப்புரையைப் பற்றி அதிகப்படியாக கிண்டலடித்து வந்த செய்திகள் எல்லாம், அவருக்கு ஆதரவாகவே திரும்பி விட்டதோ என, எண்ணத் தோன்றுகிறது.

மறைந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதி, யார் எதைச் சொன்னாலும், சொன்னவர்களுக்கு சூடாக உடனுக்குடன் பதில் கொடுப்பார்; ஆனால், ஸ்டாலின் அதற்கு நேர்மாறாக எதற்குமே பதில் தருவதில்லை. துண்டுச் சீட்டில் என்ன உள்ளதோ, அதை மட்டும் சொல்லிச் செல்கிறார். இது, அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்தினாலும், 'பதில் வராத ஆளிடம் பேசி என்ன பயன்' என்று, அவர் மீதும், கட்சி மீதும் குற்றம் சுமத்துவது குறைந்து போகிறது.

தி.மு.க., - காங்., - கம்யூ., - வி.சி.க.,
ஒவ்வொரு தேர்தலிலும் கடைசி நேரத்தில் தப்புத் தப்பாய் முடிவெடுக்கும் ம.தி.மு.க., வைகோ, இந்த தேர்தலில் சரியாகவே முடிவெடுப்பார் என்று நம்புலாம். இரண்டு தரப்பு கம்யூனிஸ்டுகளுக்கும், ஆளாளுக்கு சரிசமமாய், 'சீட்'கள் கொடுத்து விட்டால், வாய் மூடி ஒதுங்கி விடுவர். ஆக... தி.மு.க., - காங்., - கம்யூ., - வி.சி.க., என்ற வழக்கமான கூட்டணியில் பெரிதாக பிரச்னை எழாது. 'ஐபேக் டீம்' தன் பங்குக்கு, இளைஞர்களுக்கு, பெண்களுக்கு, புதியவர்களுக்கு அதிக வாய்ப்பு என்று குட்டையைக் குழப்பினால், ஏதாவது பிரச்னை ஏற்படலாம்.

நேற்று புதிதாக ஒரு கூட்டணி உருவாகி இருக்கிறது. கமல் - சரத்குமார் - பாரிவேந்தர் கூட்டணி. இதில் இன்னும் யார் யார் சேரப் போகின்றனர் என்பது விரைவில் தெரிந்து விடும். மூன்றாம் மெகா கூட்டணியாக இது அமையலாம். இதையெல்லாம் தாண்டி, பெரும்பாலான வாக்காளர்களின் எதிர்பார்ப்பு, பணமாக மட்டுமே இருக்கப்போகிறது. ஒரு கையில் கரும்புக் கட்டையும், இன்னோரு கையில், 2,500 ரூபாயையும் வைத்துக் கொண்டு, டாஸ்மாக் கடையில் நின்றவர்களை பார்த்தவர்கள் நாம்.

அந்த அளவிற்கு, ஓட்டு போடும் மக்களிடம் பணப்பசி; கொரோனாவால் அதிகரித்து விட்டது. அவர்களின் பசியை, வேலை வாய்ப்புகளும், தொழில் துறைகளும் ஏற்படுத்தித் தீர்ப்பதை விட, தேர்தல் நேரத்து இனாம்களும், இருபது ரூபாய் நோட்டுகளும் கொடுத்து தற்காலிகமாக தீர்த்து விடலாம் என்று நினைப்பதால், அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள், ஜனநாயகத்தை விட பணநாயகத்தை நம்புகின்றனர். இதை உணர்ந்த அமைச்சர்கள், தம் தொகுதியில் உள்ள வாக்காளப் பெருமக்களுக்கு, பொங்கல் பரிசாக கம்ப்யூட்டர், சைக்கிள், மாடு, கன்று, ரொக்கம் என்று, ஏற்கனவே ஒரு ரவுண்டு கொடுத்து முடித்துள்ளனர்.

கடந்த, 2018, ஏப்ரல் 13ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் ஏழு, அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் 24, அங்கீகரிக்கப்படாத பிராந்திய அரசியல் கட்சிகள் 2,044 உள்ளன. இந்த பிராந்திய கட்சியினர் தொல்லை தான் தாங்க முடியாது. ஜாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் உலா வருவர். 'எங்களிடம் தான் தமிழ்நாட்டு வாக்காளர்களில் பாதி பேர் உள்ளனர்' என்று, கூசாமல் பொய் சொல்வர்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொள்ள வேண்டிய தலைவிதி நம்முடையது.கருணாநிதி, ஜெயலலிதா என்ற பெரிய தலைகள் இல்லாமல் நடைபெறும் சட்டசபை தேர்தல் என்பதால், இப்போதுள்ள தலைவர்களை எடை போடக் கிடைத்த வாய்ப்பு தான் இது என்று கருதுவதைத் தவிர, வேட்பாளர்களின் வாக்குறுதிகளை நம்பி, நாம் என்ன புதிதாகவா ஏமாறப் போகிறோம்!
எல்.முருகராஜ்.
murugaraj@dinamalar.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (34)

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  தமிழர்கள் ப்படி ஒன்றும் ஏமாந்து கேட்டதாக தெரியவில்லை - பொருளாதார புள்ளிவிவரங்களை பார்க்கும்போது இன்றும் GDP எனப்படும் பொருளாதார வளர்ச்சியின் அடிகோலில் தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாம் நிலையில் உள்ளது. அதுவே தனிநபர் GDP என பார்க்கும் போது இந்தியாவிலேயே முதலிடம் ஆகவே, ஆளும்கட்சிகளின் ஊழல்களோ தேர்தல் தில்லுமுல்லுகளோ, மக்களின் முட்டாள்தனங்களோ தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையோ அல்லது அதன் வளர்ச்சியையே பாதிக்கவில்லை. ஒருவேளை இவை காமராஜர் காலத்தில் ஏற்படுத்திய கட்டமைப்புகளின் விளைவா அல்லது, தமிழனின் மரபணுவில் இருக்கும் உந்துதலால் ஏற்பட்ட விஷயமா? உதாரணத்திற்கு, காணும் இடமெல்லாம் தென்னைமரகுவியல்களாக காணப்படும் கேரளாவைவிட தமிழ்நாட்டில் தேங்காய் விளைச்சல் அதிகம் என்று அறிந்தபோது என்னால் நம்பமுடியவில்லை இத்தனைக்கும் போதிய மழை இல்லாமல், தண்ணீருக்கு அல்லாடும் நிலங்களை வைத்துக்கொண்டு எப்படி இந்த சாதனை சாத்தியமாயிற்று? ஒருபக்கம் வியக்ககும் ஆற்றல்களை கொண்ட ஒரு சமுதாயம், இன்னொருபக்கம், சிறிய சலுகைகளுக்காக நாட்டை ஊழல்வாதிகளிடம் தாரைவார்க்கிறதா? அல்லது, எங்கள் வாழ்வமைப்பிற்கும் இந்த அரசியல்வாதிகளுக்கும் சம்பந்தமே இல்லை என நினைக்கிறார்களா? நல்ல ஆட்சியாளர்கள் இருந்தால், தமிழ்நாடு மஹாராஷ்டிரத்தை விட பலமடங்கு வளர்ந்திருக்குமா? ஹ்ம்ம்.. விடையில்லாத கேள்விகள்

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  தி.மு.க.,வில் போட்டியிட விருப்ப மனு வாங்க, சென்னை அண்ணாசாலையில் குவிந்த கூட்டம்... மக்கள் பணத்தை சுரண்ட எவ்வளவு கூட்டம்

 • bal - chennai,இந்தியா

  குவாட்டர், பிரியாணி மற்றும் துட்டு கொரோனாவைவிட பலம் வாய்ந்தது..

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  வாங்க... ஏமாறத் தயாராகுவோம்???அவசியமில்லை எனது டாஸ்மாக்கினாடு வம்சம் 1967லிருந்து ஏமாந்து இன்று 54 வருடமாக அதாவது அல்மோஸ்ட் மூன்று தலைமுறைகளா ஏமாளிகளாகத்தானிருக்கின்றோம்

  • Aarkay - Pondy,இந்தியா

   ரூபாய்க்கு மூணு படி அரிசி என்ற வாக்குறுதியில் ஏமாறியதையா சொல்கிறீர்கள்? அது சொந்தக்காசில், நமக்கு நாமே வைத்துக்கொண்ட சூனியம்

 • K.ANBARASAN - muscat,ஓமன்

  எந்த மாநிலத்திலும் பண விநியோகத்தை கட்டுப்படுத்தி விடலாம். ஆனால் தமிழ்நாட்டு திருட்டு திராவிட அரசியல்வாதிகளை கட்டுப்படுத்த முடியவே முடியாது - அப்படி அந்த அதிசயம் நடந்தால் தமிழக அரசியலே வேறு விதமாக மாறி போகும். எல்லாம் வெறும் 500 1000 2000 ரூபாய்க்காக தாம் சீரழிவது மட்டுமல்லாமல் தங்கள் சந்ததிகளின் எதிர்காலத்தையும் சூனியமாக்கி விடுகிறார்கள். வேறு எந்த மாநில தேர்தல் முடிவுகளும் பல அதிசயங்களை ஏற்படுத்தும்.ஆனால் தமிழ்நாட்டில் பெரிய அதிசயம் ஏதும் நிகழ்ந்து விட போவதில்லை. ஒன்னு திமுக இல்லை அதிமுக இது தான் இங்கே எப்போதும் நடக்க போவது. நேர்மையான பணப்புழக்கம் அல்லாத தேர்தல் நடந்தால் மட்டுமே தமிழகத்தில் உண்மையான அரசியல் மாற்றம் ஏற்படும்.

Advertisement