dinamalar telegram
Advertisement

வாங்க... படகில் ஜாலியா ரைடு போகலாம்! பணிகள் முடியாமலேயே ஸ்மார்ட் சிட்டி குளங்கள் திறந்தாச்சு

Share
Tamil News
கோவை:தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவையில் புனரமைக்கப்பட்ட, உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், செல்வ சிந்தாமணி குளம், குமாரசாமி குளங்களின் ஒரு பகுதி, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு நேற்று, அவசரம் அவசரமாக திறக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஒன்பது குளங்கள், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மேம்படுத்தப்படுகின்றன. உக்கடம் பெரிய குளம், ரூ.62.17 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது. நடைபாதை, சைக்கிள் பாதை, இருக்கைகள், நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
திறந்தவெளி அரங்கம், விளையாட்டு திடல், உணவுக்கூடங்கள், கழிப்பறைகள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள், படகுத்துறை, மிதவை உணவகம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள், எல்.இ.டி., விளக்குகள், பறவைகளை பார்வையிட கோபுரம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.குளத்துக்குள் கழிவுநீருக்கு தடைகுளத்துக்குள் கழிவு நீர் வருவதை தடுக்க, தென்கரையில் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படுகிறது.
உபரி நீர் வடிந்து செல்ல, களிங்கு கட்டப்பட்டுள்ளது. இக்குளத்தின் கரையில், 5.5 கி.மீ., துாரத்துக்கு சைக்கிள் பாதை உருவாக்கப்பட்டுள்ளது, சிறப்பம்சம்.வாலாங்குளம் ரூ.24.31 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது. சிறுவர் விளையாட்டு திடல், பார்வையாளர் மேடை, நீரூற்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாலத்தின் கீழ்ப்பகுதி, ரூ.67.86 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.செல்வசிந்தாமணி குளக்கரையில் நடைப்பயிற்சி பாதை, சைக்கிள் பாதை, சூரிய சக்தி மேற்கூரையுடன் நிழல்இருக்கைகள், சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இத்திட்டத்தை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி, தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தலைமையில், இன்று (27ம் தேதி) மாலை, 6:00 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது.இதற்காக, நகர் முழுவதும் வீடு, வீடாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. மொபைல் போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் நேற்று மாலை, 4:30 மணிக்கு அறிவிக்க இருப்பதாக, தகவல் வெளியானதும், அவசர அவசரமாக, மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி முன்னிலையில், கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேற்று மதியம், 3:00 மணியளவில் துவக்கி வைத்தார்.உக்கடம் பெரிய குளத்தில், மாநகராட்சி அதிகாரிகள், 'லைப் ஜாக்கெட்' அணியாமல், 'தில்'லாக, படகில் ஜாலி 'ரைடு' சென்றனர். 'ஸ்மார்ட் சிட்டி' தலைமை செயல் அலுவலர் ராஜ்குமார், நகர பொறியாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.குளக்கரையில் இரட்டை இலை!உக்கடம் பெரிய குளக்கரையில், 'ஸ்மார்ட் சிட்டி' பெயருடன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
அதில், 'வெற்றிநடை போடும் தமிழகம்' என்கிற பிளக்ஸ் பேனர் ஒட்டப்பட்டுள்ளது; தமிழக முதல்வர் பழனிசாமி, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி படங்களுடன், இரட்டை இலை சின்னமும் இடம் பெற்றுள்ளது. மத்திய - மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செய்துள்ள திட்டத்தில், ஆளுங்கட்சியின் சின்னம் இடம் பெற்றிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பணிகள் எல்லாம் அரைகுறை!உக்கடம் பெரிய குளம் தெற்குப்பகுதி, வாலாங்குளம் சுங்கம் பகுதி, செல்வ சிந்தாமணி, முத்தண்ணன் குளத்தில் பணிகள், இன்னும் முழுமையாக முடியவில்லை. தேர்தல் அறிவிப்பு காரணமாக, நேற்று திறக்கப்பட்டது. நரசாம்பதி மற்றும் சிங்காநல்லுார் குளத்தில் இன்னும் வேலை துவங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரத்யேக இணையதளம்!'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கென, பிரத்யேகமாக, www.coimbatoresmartcity.org என்ற இணைய தளத்தை, கமிஷனர் துவக்கி வைத்தார். இத்தளத்தில், ஸ்மார்ட் சிட்டி பணிகள் பற்றிய, அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் பார்வையிடலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement