ரூ.5 கோடியில் கட் அண்ட் கவர் கால்வாய் அமைப்பு
தாம்பரம்- நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, கடப்பேரி ஏரியை சுற்றியும், 'கட் அண்ட் கவர்' கால்வாய் அமைக்க, நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்கி உள்ளன. இது, அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு தாம்பரம், கடப்பேரி பகுதியில், பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி அமைந்துள்ளது. அரசு ஆவணங்களின் படி, பொத்தேரி எனவும், இது அழைக்கப்படுகிறது.வெளியேற்றம்மொத்தம், 65 ஏக்கர் பரப்பளவு உடைய இந்த ஏரி, ஆக்கிரமிப்பில் சிக்கி, 40 ஏக்கராக சுருங்கியது. 30 ஆண்டுகளுக்கும் மேல், கழிவு நீர் மற்றும் பிளாஸ்டிக் குப்பை கலந்து, ஏரி தண்ணீரும், பச்சை நிறமாக மாறிவிட்டது.இதை சீரமைக்க, கடப்பேரி ஏரியை சுற்றி வசிக்கும், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தும், பொதுப் பணித்துறை கண்டுகொள்ளவில்லை.இதற்கிடையில், 'களமிறங்குவோம்... நமக்கு நாமே' திட்டத்தை நம் நாளிதழ் துவங்கியது. இதன் மூலம், 'பொது நலச்சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் இணைந்து நீர்நிலைகளை, சீரமைக்க முன்வர வேண்டும்' என, நம் நாளிதழில், 2019ல் அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து, கடப்பேரி ஏரியை சுற்றியுள்ள நலச்சங்கத்தினர் ஒன்றிணைந்து, 'கடப்பேரி பசுமை பாதுகாப்பு நலச்சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கி, ஏரியில் உள்ள கழிவு நீரை வெளியேற்ற அனுமதி பெற்று, அப்பணிகளை செய்து வந்தனர். பணிகள் துவங்கி நடந்த நிலையில், ஏரியில் இருந்த, பாதி நீர் வெளியேற்றப்பட்டது.துவக்கம்சில நாட்களில், வடகிழக்கு பருவ மழை குறுக்கிட்டதால், ஏரியை தூர்வாரும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. ஏரியில் மீண்டும் மழை நீர் தேங்கியது. ஆனால், தேங்கிய மழைநீருடன், கழிவு நீரும் கலந்து, தண்ணீரின் நிறம், மீண்டும் பச்சையாக மாறி துர்நாற்றம் வீசியது.ஏரியை புனரமைக்க, நகராட்சி நிர்வாகம் சார்பில், நகராட்சி நிர்வாக ஆணையரகத்திற்கு, தயாரித்து அனுப்பப்பட்டிருந்த, திட்ட அறிக்கை தொடர்புடைய கோப்புகளும், நீண்ட நாட்களாக தேங்கி கிடந்தன.இது குறித்து, நம் நாளிதழில் வெளியான தொடர் செய்திகளால், தென் மண்டல பசுமை தீர்ப்பாயமும், புகாரை கையில் எடுத்து, வழக்கு பதிந்து விசாரித்தது.இதனால் தற்போது, ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 5 கோடி ரூபாய் மதிப்பில், ஏரியை சுற்றிலும், 'கட் அண்ட் கவர்' கால்வாய் அமைக்கும் பணிகள், துவங்கி உள்ளன.இது குறித்து, நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:முடிவுதாம்பரம் பஸ் பணிமனை, தாமோதரன் நகர், நகராட்சியின், 3,4,5,6,7,8,9 ஆகிய வார்டுகளின் கழிவு நீர், ஏரிக்குள் உட்புகாத வகையில், இந்த கால்வாய் கட்டப்படுகிறது.மொத்தம், 5,085 அடி நீளத்திற்கு கட்டப்படும் இக்கால்வாய், நீரோட்டத்திற்கான பாதுகாப்பு கருதி, இரண்டு அடுக்காக கட்டப்படுகிறது. உட்புறம், 4 அடி அகலம், 4 அடி உயரத்தில் கால்வாய் அமைய உள்ளது.இதன் மேல், கால்வாயின் வெளிப்புற பகுதி, 5 அடி உயரம், 4 அகலத்தில் அமைய உள்ளது. பருவ மழையின்போது, மழை நீர் தொடர்ந்து செல்லவும், கழிவு நீர் உட்புகாத வகையில் தடுக்கவும், ஐந்து இடங்களில், 'ஷட்டர்'கள் அமைக்கப்பட உள்ளன.ஆறு மாதங்களுக்குள் இப்பணிகளை முடித்து, கால்வாயை, பாதாள சாக்கடை திட்டத்துடன் இணைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!