dinamalar telegram
Advertisement

அதிமுக., உடனான தொகுதி பங்கீடு பேச்சில் முந்துகிறது பாமக.,!

Share
Tamil News
அ.தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சில், பா.ம.க., முந்துகிறது. சென்னையில், நேற்று அமைச்சர் தங்கமணி வீட்டில் நடந்த சந்திப்பில், இரு கட்சி பிரமுகர்களும், தேர்தல் உடன்பாடு குறித்து, இரண்டரை மணி நேரம் ஆலோசித்தனர். அதைத் தொடர்ந்து, அடுத்த வாரம், பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர்களுடன், அ.தி.மு.க., தரப்பில் பேச்சு நடத்தப்பட உள்ளது. கூட்டணி பேச்சு துவங்கி விட்டதால், தே.மு.தி.க., உள்ளிட்டகட்சிகளும், ஆளும் கட்சியின் அழைப்புக்காக காத்திருக்கின்றன.

தமிழகத்தில், 2019 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., - புதிய நீதிக் கட்சி இடம் பெற்றன. இதே கூட்டணி, சட்டசபை தேர்தலிலும் தொடரும் என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் அறிவித்துள்ளனர்.

சட்டசபை தேர்தலுக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சை துவங்காமல், அ.தி.மு.க., காலம் கடத்தி வந்தது. பா.ஜ., தரப்பில், அதிக தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுக்கப்பட்டதே அதற்கு காரணம். இதற்கிடையில், வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, பா.ம.க.,வும் கொடி துாக்கியது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, பா.ம.க., சார்பில், தொடர் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

நிபந்தனை



இக்கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே, கூட்டணி பேச்சு என, பா.ம.க., தரப்பில் நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, ஜனவரி 11ம் தேதி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர், திண்டிவனம் அருகே, தைலாபுரத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசினர். அப்போது, 'வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வாய்ப்பில்லை' என, அமைச்சர்கள் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, பா.ம.க., தரப்பில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிறப்படுத்தப் பட்டோருக்கான ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும்படி தெரிவிக்கப்பட்டது.கடந்த மாதம் இறுதியில், மீண்டும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகியோர், ராமதாசை அவரது வீட்டில் சந்தித்து பேசினர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே, உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை, 11:15 மணிக்கு, சென்னை, பசுமை வழி சாலையில் அமைந்துள்ள, அமைச்சர் தங்கமணி வீட்டில், அ.தி.மு.க., - பா.ம.க., இடையிலான பேச்சு துவங்கியது. அ.தி.மு.க., தரப்பில், துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர். பா.ம.க., தரப்பில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, வேலு, வழக்கறிஞர் பாலு, தீரன், பு.தா.அருள்மொழி ஆகியோர் பங்கேற்றனர்.

இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சு, பகல், 1:45 மணிக்கு நிறைவடைந்தது. பா.ம.க.,வினர் சென்ற பின், முதல்வரை சந்தித்து, பேச்சு விபரங்களை அமைச்சர்கள் தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சில், இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டதுடன், தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்பட்டுள்ளது.பா.ம.க., தரப்பில் குறைந்தது, 35 தொகுதிகள் வழங்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

முடிவு



அதற்கு, அ.தி.மு.க., ஒப்புக் கொள்ளவில்லை. எனினும், அடுத்த கட்ட பேச்சில், தொகுதி எண்ணிக்கை முடிவாகும் என, தகவல் வெளியாகி உள்ளது. பா.ம.க.,வுடன் தொகுதி பங்கீடு பேச்சு துவங்கிய நிலையில், அடுத்த வாரம், அ.தி.மு.க., - பா.ஜ., இடையே பேச்சு நடக்க உள்ளது. இதற்காக, பா.ஜ.,வின் தமிழக தேர்தல் பொறுப்பாளரான, அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை இணை அமைச்சருமான கிஷன் ரெட்டியும், துணை தேர்தல் பொறுப்பாளரான மத்திய சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர், வி.கே.சிங்கும், டில்லியில் இருந்து அடுத்த வாரம் சென்னை வருகின்றனர்.

அவர்கள் இருவரும், அ.தி.மு.க., தலைவர்களுடன், தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தி, இறுதி செய்ய உள்ளனர்.இதற்கிடையில், தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளும், அ.தி.மு.க.,வின் அழைப்புக்காக காத்திருக்கின்றன. அடுத்தடுத்து, கூட்டணி கட்சிகளுடன் பேச்சை முடித்து, தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.

- நமது நிருபர் -

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (44)

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    மரம் வெட்டி சாலையை அடைப்பது, பால் கேனை கவிழ்ப்பது என்று மக்களுக்கு துரோகம் செய்யும் சாதிக்கட்சியை ஒதுக்கவேண்டும் . பாராளுமன்ற தேர்தலின் போது அரிசனங்களைத் தாக்கிய ரௌடிகள் நிறைந்த பாமக வைக் கூட்டணியில் சேர்க்கும் கட்சிகளைப் புறக்கணிப்போம்

  • Elamugil - Ariyalur,இந்தியா

    பாட்டாளி மக்கள் கட்சி என்பது 108 ஜாதிக்கும் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தக்கட்சி. ஆட்சியில் இருந்தாலும் MLA இருந்தாலும் MP இருந்தாலும் இல்லாவிட்டாலும் 1980 களிலிருந்து பொது மக்களுக்களின் நலனுக்காக போரடும் தமிழின போராளி அய்யா ராமதாசுவின் கட்சி. எப்போதும் நிலைத்து நிற்கக்கூடிய கட்சி. 108 ஆம்புலன் பயனை மக்கள் மனதில் விதைத்து அறுவடை செய்து வரும் கட்சி. அண்ணன் அண்புமணி மூலம் கொரானா போன்ற நோய்களிலிந்து எச்சரிக்கை மூலம் தமிழக மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிகோலியகட்சி. சினிமா நடிகர்கள் முதல் சிகிரெட் பாக்கெட் வரை உயிர்பயத்தை வெளிப்படுத்தியகட்சி...

  • INDIAN Kumar - chennai,இந்தியா

    வோட்டுக்கு காசு கொடுக்கும் வேட்பாளரை புறக்கணியுங்கள் நல்ல மக்கள் சேவகர்களை தேர்ந்து எடுங்கள் யாரும் இல்லை என்று நினைத்தால் நோட்டாவை தேர்ந்து எடுங்கள்.

  • INDIAN Kumar - chennai,இந்தியா

    ஊழல் கலகங்களை ஒதுக்கி வைத்து விட்டு மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். மாற்றம் தான் என்றும் மாறாதது.

  • சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா

    மாங்காவுக்கு வேறு வழியில்லை ..நிர்பந்தத்தை திமுக திணித்து விட்டது .

Advertisement