dinamalar telegram
Advertisement

ஏறி குதிச்சு ஓடுறாங்க! ஆபத்துகள் நிறைந்த நான்கு வழிச்சாலை:ரோட்டை கடக்க தடுமாறும் பொதுமக்கள்

Share
Tamil News
கிணத்துக்கடவு:பொள்ளாச்சி - கோவையை இணைக்கும் நான்கு வழிச்சாலையில், கிராமங்கள், முக்கிய சந்திப்புகளில் ரோட்டை கடந்து செல்ல மக்கள் அவதிப்படுகின்றனர். தடுப்புகள் மீது ஏறிக் குதித்து, ஓட்டமும், நடையுமாக ரோட்டை கடந்து செல்கின்றனர். இதனால், விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, முக்கிய சந்திப்புகளில் நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
பொள்ளாச்சி - கோவை நான்கு வழிச்சாலை திட்டப்பணிகள், 2016ல் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தில், பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் இருந்து, ஈச்சனாரி வரையிலும் நான்கு வழிப்பாதையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.இதில், முள்ளுப்பாடியில் ரயில்பாதையை கடக்க, அரை வட்ட வடிவில் இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, கிணத்துக்கடவில், 1.5 கி.மீ., தொலைவுக்கு நான்கு வழிப்பாதை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.அதையடுத்து, ஒத்தக்கால்மண்டபம், ஈச்சனாரி ஆகிய இடங்களில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலை முழுவதும் கான்கிரீட் பாதை அமைக்கப்பட்டு, முக்கிய சந்திப்புகளில், ஒளிரும் பட்டைகள் பொருத்தப்பட்டு, சிக்னலும் அமைக்கப்பட்டுள்ளது.மேம்பாலம், முக்கிய சந்திப்பு பகுதிகளில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆச்சிபட்டி, கோவில்பாளையம், தாமரைக்குளம், கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம், மலுமிச்சம்பட்டி, ஈச்சனாரி பகுதிகளில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து வசதிகள் மேம்பட்டுள்ளன.
அதே நேரத்தில், கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனங்கள் அதிவேகமாக 'பறந்து' செல்வதால், விபத்துகளும் அதிகரிக்க துவங்கியுள்ளது. நான்கு வழிச்சாலையில் மையத்தடுப்பு அமைத்ததால், ரோட்டின் இருபகுதிக்கான மக்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, கிராமங்கள், முக்கிய சந்திப்புகளில் ரோட்டை கடந்து செல்ல மக்கள் அவதிப்படுகின்றனர். ஆச்சிபட்டி, கோவில்பாளையம், தாமரைக்குளம், கிணத்துக்கடவு, பிரிமியர் மில்ஸ், மலுமிச்சம்பட்டி போன்ற பகுதிகளில் நான்கு வழிச்சாலையை, மக்கள் கடந்து செல்வதை தடுக்க சிமென்ட் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.
இரு பகுதியில் இருக்கும் மக்களும், தடுப்புகள் மீது ஏறிக் குதித்து, ஓட்டமும், நடையுமாக ரோட்டை கடந்து செல்கின்றனர். வாகனங்கள் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும், 'யுடேர்ன்' வழியாக சுற்றி செல்கின்றனர். ஆனால், நடந்து செல்லும் பொதுமக்கள் திக்திக் மனநிலையில் ரோட்டை கடக்கின்றனர்.இதில், வயதானவர்கள் ரோட்டில் உள்ள தடுப்புகளை தாண்ட முடியாமலும், அதி வேகமாக வாகனங்கள் வரும் போது, ரோட்டில் தடுமாறுகின்றனர். அத்தியாவசிய தேவைக்காக கடந்து செல்ல வேண்டுமானால், ஆட்டோ பிடித்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
மேலும், தாமரைக்குளத்தில், கிட்ஸ்பார்க் மேல்நிலைப்பள்ளி, ஏலுார் பிரிவில் உள்ள விவேக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. இப்பகுதியில், பள்ளி நேரங்களில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் நான்கு வழிச்சாலையை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.இப்பிரச்னையை தீர்க்க, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நான்கு வழிச்சாலையை கடக்க, தேவையான இடங்களில், நடைபாதை இரும்பு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement