dinamalar telegram
Advertisement

கோட்டை செல்வாக்கில் தப்பிய பெண் அதிகாரி!

Share
Tamil News
கோட்டை செல்வாக்கில் தப்பிய பெண் அதிகாரி!


@@பெஞ்சில் ஆஜரான பெரியவர்கள், பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். குப்பண்ணா தந்த நெய் வழியும் பொங்கலை ருசித்தபடியே, ''பச்சை துண்டை பார்த்தாலே கடுப்பானா, விவசாயிகள் என்ன பா
பண்ணுவாங்க...'' என, விஷயத்திற்கு வந்தார், அன்வர்பாய்.

''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தஞ்சை கலெக்டர் ஆபீஸ்ல நடக்குற, குறைதீர் கூட்டத்துக்கு வர்ற பொதுமக்களின் பைகளை நல்லா சோதனை பண்ணி தான், போலீசார் அனுமதிக்கிறாங்க...
ஆனா, யாராவது பச்சை துண்டு அணிந்து வந்துட்டா மட்டும், அவங்களை பயங்கரவாதிகள் மாதிரி பார்த்து, இஞ்ச் இஞ்ச்சா சோதனை பண்ணிதான் அனுப்புறாங்க பா...

''சிலர், விவசாயிகள் போர்வையில வந்து, போராட்டத்துல இறங்கிடுறதால தான், இப்படி பண்றாங்க... இதனால, நிஜமான விவசாயிகள் தான்
பாதிக்கப்படுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''அமைச்சர் நிகழ்ச்சியை புறக்கணிச்சிடுறாங்க ஓய்...'' என, வேறு விஷயத்திற்கு மாறினார், குப்பண்ணா.

''விளக்கமா சொல்லும் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''கரூர் தொகுதியில, வளர்ச்சி பணிகள் துவக்கம், இலவச சைக்கிள் வழங்கறது, முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்டம்னு அரசு நிகழ்ச்சிகள் அடிக்கடி நடந்துண்டே இருக்கும்... தொகுதி எம்.எல்.ஏ.,வான
போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துப்பார் ஓய்...

''பெரும்பாலும், மாவட்டங்கள்ல அமைச்சர்கள் நடத்தற அரசு நிகழ்ச்சிகள்ல, கலெக்டர்கள் கலந்துப்பா... ஆனா, கரூர் கலெக்டர் மலர்விழி, பெரும்பாலும், அமைச்சர் நிகழ்ச்சிகளை தவிர்த்துடறாங்க...

''அதை கூர்ந்து கவனிக்கறவா, 'முதல்வர் சிறப்பு குறைதீர் கூட்டம் உட்பட முக்கியமான நிகழ்ச்சிகள்ல கலெக்டர் கலந்துண்டா தானே, மக்கள் தர்ற மனுக்கள் மேல உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முடியும்'னு, ஆளுங்கட்சியினர் புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''மேலிட செல்வாக்குல கலக்குறாங்க பா...'' என, கடைசி தகவலை ஆரம்பித்த அன்வர்பாயே தொடர்ந்தார்...

''நில மோசடிக்கு துணை போனதா, சென்னை சைதாப்பேட்டை பெண் சார் பதிவாளர், 2018ல் கைது செய்யப்பட்டாங்க... அவங்க மேல, வேறு சில வழக்குகளும், துறை ரீதியான விசாரணையும் இருந்தது பா...

''இதனால, அவங்களை சஸ்பெண்டும் செய்தாங்க... அவங்க மீண்டும் பணியில் சேர, பதிவுத் துறை உயர் அதிகாரிகள் ஒத்துழைக்கலை பா...

''ஆனா, கோட்டையில இருக்கிற முதல்வர் அலுவலக அதிகாரியின் பரிபூரண ஆசி, அவங்களுக்கு கிடைச்சிருக்கு... இதை பயன்படுத்தி, தன் மீதான வழக்குகளை எல்லாம் முடிச்சிட்டாங்க பா...

''இப்ப, சென்னையை ஒட்டியிருக்கிற மாவட்டத்துல, பதிவாளர் இடத்தை பிடிக்க, தீவிர முயற்சியில இறங்கிட்டாங்க... 'மேலிட செல்வாக்குல இப்படி ஆட்டம் போட்டா, துறை நிர்வாகத்துக்கு என்ன மதிப்பு இருக்குது'ன்னு பதிவுத் துறை அதிகாரிகள் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.அரட்டை முடியவும், எதிரில் வந்தவரை நிறுத்திய குப்பண்ணா,

''உம்ம பொண்ணு சிவபிரியாவுக்கு பொங்கல்படி கொடுத்துட்டீரா ஓய்...'' எனக் கேட்க, அவர் தலையை அசைத்தபடி சென்றார்.

''எல்லாரும் மதியம் பொங்கல் விருந்துக்கு வந்துருங்க... நாயரே நீரும் தான்...'' என, அழைப்பு விடுத்தபடியே அண்ணாச்சி கிளம்ப, அனைவரும் எழுந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    நிர்வாகத்தில் அரசியல் கட்சிகள் நுழைந்து, அவர்களின் விதிமுறைகள், சுதந்திரத்தைப் பறித்தால், இவ்வாறு மேலிட சிபாரிஸுடன் குற்றம் செய்பவர்களிடம் உயர் அதிகாரிகள் கூட கைகட்டி நிற்கும் அவலமும், எல்லா வித ஊழலும்தான் மிகுதியாகும்

Advertisement