dinamalar telegram
Advertisement

மூன்று கோட்டைகளை கட்டி இடித்தால்... மருதநாயகம் படத்தை முடித்து விடலாம்

Share
Tamil News
கவிஞர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், திரைக்கதையாளர் என பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளுமை கவிஞர் புவியரசு. 1.13 நூல்களை எழுதி இருக்கும் இவர், தன் கவிதை நூலுக்காகவும், மொழி பெயர்ப்புக்காகவும் இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்று இருக்கிறார். 90 வயதை கடந்த பிறகும், எழுதுவதையும் வாசிப்பதையும் நிறுத்தாமல் தொடரும் கவிஞர் இவர்

இந்த ஊரடங்கு காலத்தை எப்படி எதிர் கொண்டீர்கள்?நான் முதுமையை, பெரிய சிரமமாக கருதுவதில்லை. இந்த கொரோனா பரவல்தான் எல்லோரையும் அச்சுறுத்தி விட்டது. நான் இந்த காலத்தை படிக்கவும், எழுதவும் பயன்படுத்தி கொண்டேன். இந்த எட்டு மாதங்களில், நான்கு நுால்களை எழுதி இருக்கிறேன். சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து, ஒரு திரைக்கதையும் எழுதி இருக்கிறேன். படிக்க வேண்டும் என்று நினைத்து இருந்த, பல புத்தகங்களை இந்த காலத்தில் படித்தேன்.லெபனான் நாட்டு எழுத்தாளர் மிகைல் நைமி 'புக் ஆப் மிர்தாத்' என்ற புகழ் பெற்ற நுாலை, தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறீர்கள்.

அதை பற்றி சொல்லுங்களேன்?இது ஒரு அரிய புத்தகம். எழுதிய மிகைல் நைமி, கலில் ஜிப்ரானின் நண்பர். தத்துவத்தை நாவலாக எழுதி இருக்கிறார். எல்லா மதத்தின் தத்துவ ஞானமும், இந்த நுாலில் உள்ளது. அதை தமிழில் மொழி பெயர்த்ததில் எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த நுாலை பற்றி ஓசோ, உலகின் மிகச்சிறந்த நுால்களில் ஒன்று என, வியந்து குறிப்பிட்டுள்ளார்.இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த நுாலை எழுதியவர் இந்து வல்ல. ஆனால் இந்த நுாலை படித்த ஆன்மிக ஈடுபாடு கொண்ட இந்து மடாதிபதிகள் பலர், இந்த நுாலை கொண்டாடுகின்றனர்.

இதன் பிரதி உங்களுக்கு எப்படி கிடைத்தது?ஆங்கிலத்தில் வந்த ஒரு சில பிரதிகள் மட்டும்தான், இந்தியாவில் இருப்பதாக சொல்கின்றனர். அந்த சில பிரதிகளில் ஒன்றுதான், எனக்கு ஒரு மடத்தில் இருந்து கிடைத்தது. அதைதான் நான் தமிழில், 'மிர்தாத்தின் புத்தகம்' என்ற பெயரில் மொழிபெயர்த்து இருக்கிறேன். வேறு இந்திய மொழிகளில் இந்நுால் இன்னும் வரவில்லை. இது தமிழுக்கு கிடைத்திருக்கும் பொக்கிஷம்.

கமலஹாசனுடன் இணைந்து, மருதநாயகம் படத்துக்கு கதை வசனம் எழுதினீர்கள். படம் ஏன் பாதியில் நின்று விட்டது?நான், கேரளா ஸ்டேட்ஸ் பிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷனின் அதிகாரியாக இருந்த போது, 20 தமிழ் படங்களுக்கு மேல், கேரளாவில் எடுக்கப்பட்டன. அப்போதுதான் கமல் மருதநாயகம் படம் எடுப்பது பற்றி பேசினார்.அப்போது கமலுடன் நானும் இணைந்து, மருதநாயகம் படத்தில் சேர்ந்து வேலை செய்தேன். மருதநாயகம் இந்துவாக இருந்து, இஸ்லாமியராக மாற்றப்பட்டவர். வெள்ளையர்கள் காலத்தில் தென்னிந்தியாவில் கமாண்டராக நியமிக்கப்பட்டவர்.இந்த திரைக்கதையை நான், எழுத்தாளர் சுஜாதா, கமல் மூன்று பேரும் சேர்ந்து எழுதினோம். 12 'ஸ்கிரிப்ட்' எழுதப்பட்டு, அதில் ஒன்றை கமல் தேர்ந்து எடுத்தார். இடையில் சுஜாதா விலகி கொண்டார்.

படத்தை கமல் மீண்டும் எடுப்பாரா?

50 நிமிடங்கள் படம் எடுக்கப்பட்டுள்ளது. இவை போர்க்களம் மற்றும் கோட்டைகள் இல்லாத காட்சிகள். டிரைலர் எடுக்க மட்டும் ரூ.1.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.படத்தை முடிக்க வேண்டும் என்றால், மூன்று கோட்டைகளை கட்டி, இடிக்க வேண்டும், 500க்கும் மேற்பட்ட குதிரைகள், யானைகள் வேண்டும். போர்க்கள காட்சிகள் எடுத்தால்தான் படம் முடியும். இந்த படம் கமலின் கனவு படம். அதனால் மீண்டும் எடுப்பார்.

கமலின் அரசியல் கட்சியில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா?அதில் எனக்கு ஈடுபாடு இல்லை. கமல் விரும்பி, மக்கள் நீதி மையத்தை துவங்கி இருக்கிறார். தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என, அவர் விரும்புகிறார். அதை அவர் விருப்பம் போல் செய்யட்டும்.

வானம்பாடி கவிதை அமைப்பில், முக்கியமானவர் நீங்கள். அந்த காலம் பற்றி சொல்லுங்களேன்?கவிதையில் சங்க பாடல்கள் முதல் கட்டம். பாரதியின் கவிதைகள் இரண்டாம் கட்டம். வானம்பாடி புதுக்கவிதை மூன்றாம் கட்டம். கவிதை எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தி, அன்றைக்கு கவிதை எழுதினோம்.ஆயிரக்கணக்கான புதிய கவிஞர்கள் கவிதைகள் எழுதினர். புதுக்கவிதையை, புலவர்களும், பண்டிதர்களும்எதிர்த்தனர். கவிதைக்கு இலக்கணம் தேவையில்லை என, பாரதிக்கு பிறகு வானம்பாடி கவிஞர்கள் முன்னெடுத்து செய்தோம். அந்த கருத்து இன்றைக்கு வளர்ந்து, நவீன வடிவம் பெற்று உள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement