கொரோனா வைரஸ் பரவல் சூழல், வைரஸ் தடுப்பூசியை எவ்வாறு மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக நடந்த இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பங்கேற்றனர்.
காங்கிரஸ் சார்பில், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், திரிணமுல் காங்கிரஸ் சார்பில், சுதிப் பந்தோபத்யாய், தேசியவாத காங்கிரஸ் சார்பில், சரத் பவார் உட்பட, பல கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில், பிரதமர் மோடி மோடி பேசியதாவது:கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில், நம் விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். குறைந்த விலையில், பாதுகாப்பான மருந்தை உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. இதனால் தான், உலக நாடுகள், இந்தியாவை கூர்ந்து கவனித்து வருகின்றன. கொரோனா தடுப்பூசி, இன்னும் சில வாரங்களில் தயாராகிவிடும் என, நம் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்ததும், இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி துவங்கும்.
நம் நாட்டில், எட்டு தடுப்பூசிகள், மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளன. தடுப்பூசிக்கு என்ன விலை நிர்ணயிக்கலாம் என்பது குறித்து மத்திய அரசு, மாநில அரசுகளுடன் பேசி வருகிறது. மக்களின் உடல் நலனுக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்து, நல்ல முடிவு எடுக்கப்படும்.
கொரோனா தடுப்பூசியை பகிர்ந்தளிப்பதில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி வருகின்றன. தடுப்பூசி விநியோகத்தில், இந்தியாவுக்கு அனுபவம் உள்ளது. பலவிதமான நோய்களுக்கு, மற்ற நாடுகளைக் காட்டிலும், குறைந்த விலையில், நம் நாட்டில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன
.
தடுப்பூசி களத்தில் நமக்கு, பெரிய மற்றும் அனுபவம் வாய்ந்த, 'நெட்வொர்க்' உள்ளது. அதனை, முழுதும் பயன்படுத்துவோம். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், தங்களின் கருத்துகளை எழுத்துப்பூர்வமாக அனுப்பி வைக்கும்படி வேண்டுகிறேன்; அவை, தீவிரமாக பரிசீலனை செய்யப்படும் என, உறுதியளிக்கிறேன். இவ்வாறு, பிரதமர் பேசினார்.
கவனம் தேவை!
கொரோனா போன்ற தொற்று நோய்கள், உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உள்ளன; இதை, அரசும், கொள்கைகளை வகுப்பவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். குலாம்நபி ஆசாத்மூத்த தலைவர், காங்.,
யாருக்கு முதலில் தடுப்பசி?
பிரதமர் மோடி தலைமையில், நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தடுப்பூசி தயாரானதும், டாக்டர்கள், நர்ஸ்கள் அடங்கிய மருத்துவப் பணியாளர்கள் ஒரு கோடி பேருக்கு, முதலில் வழங்கப்படும்.அதன்பின், போலீசார், ராணுவத்தினர், நகராட்சிப் பணியாளர்கள் உள்ளிட்ட, இரண்டு கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
3வது பரிசோதனைக்கு அனுமதி
குஜராத் மாநிலம், ஆமதாபாதை தலைமையிடமாக வைத்து 'ஜைடஸ் காடில்லா' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், கொரேனாவுக்கு, 'ஜைகோவ் - டி' என்ற தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தன்னார்வலருக்கு இந்த தடுப்பு மருந்தை செலுத்தி, இரண்டு கட்ட சோதனைகள் நடந்து முடிந்து விட்டன. தற்போது மூன்றாவது கட்ட சோதனை நடத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளதாக, இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷர்வில் படேல் தெரிவித்துள்ளார்.
சீரகம் மஞ்சள் மிளகு எலுமிச்சை சேருங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெறுங்கள்