dinamalar telegram
Advertisement

பைக்கில் இருந்து தவறி விழுந்து அண்ணன் கண் எதிரே தம்பி பலி

Share
குன்றத்துார் : குன்றத்துார் அருகே, ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று சிறுவர்களில் ஒருவர், லாரி சக்கரம் ஏறி இறந்தது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குன்றத்துார், புது வட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் சிபாஸ், 15; அப்பகுதி அரசு பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அவரது தம்பி, அனஷ் காஜா, 13; கோவூரில் உள்ள அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.அவர்களது நண்பர் முஷாரப், 15; நேற்று காலை, மூன்று பேரும், ஒரே இருசக்கர வாகனத்தில், கோவூர் நோக்கி சென்றனர். கோவூர், மின் வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற, லாரியை முந்த முயன்றனர்.அதில், மூன்று பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.பின்னால் வந்த லாரி ஒன்று, அனஷ் காஜா மீது ஏறி இறங்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.


மற்ற இருவரும், லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.அண்ணன் கண்எதிரே தம்பி இறந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.வாகனத்தில் சென்ற மூவரும் சிறுவர்கள். ஓட்டுனர் உரிமம் இன்றி, வாகனத்தை ஓட்டியுள்ளனர். அவர்களிடம் வாகனத்தை கொடுத்தது யார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், விபத்து நடந்த இடத்தில், பூந்தமல்லி போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளை மடக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, அறிவுரையும் வழங்கினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement