dinamalar telegram
Advertisement

டி.டி.சி.பி.,யில் ஆட்டம் போடும் அதிகாரி!

Share
Tamil News
டி.டி.சி.பி.,யில் ஆட்டம் போடும் அதிகாரி!


''மாவட்டச் செயலரை மாத்திடுவான்னு சொல்றா ஓய்...'' என, காபியை பருகியபடியே, கதையை ஆரம்பித்தார், குப்பண்ணா.''எந்தக் கட்சி விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலரா இருக்கறவர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி... இவர், ஒன்றியச் செயலர் பதவிக்கு, ஒருத்தரிடம், 5 லட்சம் ரூபாய் வாங்கிட்டதா, பணம் கொடுத்தவரே, பன்னீர்செல்வத்திடம் புகார் குடுத்துட்டார் ஓய்...
''இது சம்பந்தமா, பரஞ்ஜோதியை சென்னைக்கு அழைச்சு, சில நாட்களுக்கு முன்ன விஜாரணை நடத்தியிருக்கா... அப்ப, அவரது விளக்கம் திருப்தியா இல்லையாம் ஓய்...
''இதனால, அவரது பதவிக்கு சிக்கல் வரும்கறா... அப்படி ஒரு சூழல் வந்தா, இன்னொரு, 'மாஜி' அமைச்சரான சிவபதி, மாவட்டச் செயலர் பதவிக்காக, இப்பவே துண்டு போட்டு வச்சிருக்கார்... அதுவும் இல்லாம, 'பரஞ்ஜோதியை மாட்டி விட்டதே, சாட்சாத் சிவபதி தான்'னும், கட்சிக்காரா மத்தியில ஒரு, 'டாக்' ஓடிண்டு இருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எத்தனை மணி நேரத்துல பழுக்க வைக்கணும்னு கேட்டு, 'டெலிவரி' பண்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''என்ன விவகாரமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''திருப்பூர், தென்னம்பாளையம் மார்க்கெட்டுல, பழங்கள் வாங்க வர்ற வியாபாரிகளிடம், 'உங்களுக்கு எத்தனை மணிக்கு பழம் கலர் வரணும்'னு கேட்கிறாங்க... வியாபாரிகளின் தேவையை பொறுத்து, ஒரு மணி நேரத்துல கூட, பழுக்க வச்சு குடுத்துடுறாங்க பா...
''இதுக்காகவே, விதவிதமா கெமிக்கல் ஸ்பிரேக்களை வச்சிருக்காங்க... ஸ்பிரேயை அடிச்சு, ஒரு மணி நேரத்துல, காய்களை பழமா மாத்தி குடுத்துடுறாங்க... உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், இந்த மார்க்கெட் மேல ஒரு கண்ணு வச்சா நல்லாயிருக்கும் பா...'' என்றார், அன்வர்பாய்.
''அதிகாரியை சுத்தி புரோக்கர் கூட்டமா தான் இருக்கு வே...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார், அண்ணாச்சி.
''எந்த துறையில ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''சென்னைக்கு வெளியில நடக்குற கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்குறது, நகர், ஊரமைப்புத் துறையான டி.டி.சி.பி.,யின் பொறுப்பு... இதுக்கு, மாவட்ட அளவுல அலுவலகங்கள் இருந்தாலும், தலைமை அலுவலகம், சென்னையில தான் இருக்கு வே...
''இயக்குனர் தலைமையிலான இந்த அலுவலகத்துல, கூடுதல் இயக்குனர், துணை இயக்குனர் இடங்கள் காலியாவே கிடக்கு... இங்க, உதவி இயக்குனரா வந்து, இப்ப இணை இயக்குனரா இருக்குற ஒருத்தர் ஆட்டம் அதிகமா இருக்கு வே...
''பொதுமக்கள், பிற துறைகள், பிற அலுவலகங்கள் தொடர்பான கோப்புகளை முடக்கி வச்சிருக்காரு...
''மேலிடத்துக்கு போக வேண்டிய தகவல்களை மறைக்கிறதோட, வசூல் வேட்டையிலும் கொழிக்காருன்னு புகார் மேல புகார்கள் வருது...
''இவரது அலுவலகத்தை சுத்தி, புரோக்கர்கள் கூட்டம் தான் ஜாஸ்தியா இருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
அரட்டை முடிந்து அனைவரும் கிளம்ப, எதிரில் வந்தவரை நிறுத்திய குப்பண்ணா, ''சேகரன், நேத்து நீர் போன காரியம் என்னாச்சு ஓய்...'' என, குப்பண்ணா கதை பேச, மற்றவர்கள் நடையைக் கட்டினர்.

பதவி உயர்வுக்கு காத்திருக்கும் தீயணைப்பு அலுவலர்கள்!''ஒட்டுமொத்த ஸ்டேஷனையும் ஆட்டி படைக்கிறாருங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.
''போலீஸ் ஸ்டோரியா... விபரமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''கோவை மாவட்டம், பொள்ளாச்சி பக்கத்துல இருக்கிற ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல, தனிப்பிரிவு போலீஸ்காரர் வச்சது தான், சட்டமா இருக்குதுங்க... தனிப்பிரிவு போலீசார் பெரும்பாலும், சீருடை அணிய மாட்டாங்க...
''ஆனா இவரோ, சி.கோபாலபுரம் சோதனைச்சாவடியில, தனக்கும், 'யூனிபார்ம் டூட்டி' வழங்கணும்னு, போலீஸ் அதிகாரிகளை கட்டாயப்படுத்துறார்... இந்த வழியா தினமும், ஜல்லிக்கற்கள், மண் ஏத்திட்டு, 200க்கும் மேற்பட்ட லாரிகள் போகுதுங்க... ஒரு லாரிக்கு, 300 ரூபாய் வசூல் பண்ணிடுறாருங்க...
''இதாவது பரவாயில்லை... 'நான் இல்லாம, ஸ்டேஷன்ல எந்த வழக்கையும் விசாரிக்கவே கூடாது'ன்னு மிரட்டுறார்... தனக்கு, எஸ்.பி., ஆபீஸ்ல இருக்கிற இன்ஸ்பெக்டர் சப்போர்ட் இருக்குன்னு சொல்லிட்டு, இவர் போடுற ஆட்டத்தால, ஸ்டேஷன் போலீசார், தவியா தவிச்சிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ராமசாமி, இந்த பேப்பரை அங்கன வையும்...'' என்ற அண்ணாச்சியே, ''ரப்பர் ஸ்டாம்பா தான் பயன்படுத்துதாவ வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.
''யாரைன்னு விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''நாகை மாவட்டத்துல நடந்த உள்ளாட்சி தேர்தல்ல, மாவட்ட ஊராட்சி தலைவரா ஒரு பெண்ணை தான் தேர்வு செய்தாவ... அதே மாதிரி, 11 ஒன்றிய தலைவர்கள்ல, எட்டு பேர் பெண்கள்... 434 ஊராட்சிகள்ல, 237ல, பெண்கள்
தான் தலைவரா இருக்காவ வே...
''இதுல, சிலர் மட்டும் தான், சுயமா மக்கள் பணிகளை செய்தாவ... பெரும்பாலான ஊராட்சிகள்ல, அவங்களது கணவர், அப்பா, அண்ணன், தம்பிகளின் ராஜ்யம் தான் நடக்கு வே...
''இவங்க, கிராம சபை கூட்டங்களை நடத்துறது, ஊராட்சி தலைவர் சீட்ல உட்கார்ந்து அதிகாரம் செய்றதுமா இருக்காவ... இவங்களது விதிமீறலுக்கு, பி.டி.ஓ.,க்களும் ஒத்து ஊதிட்டு இருக்காவ... இது, மாவட்ட அதிகாரிகளுக்கு தெரிஞ்சும், கண்டும் காணாமலும் இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''பதவி உயர்வு எப்ப வரும்னு காத்துண்டு இருக்கா ஓய்...'' என, கடைசி தகவலை கையில் எடுத்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''கொரோனாவுக்கு முன்னாடி, அதாவது மார்ச் மாதத்துக்கு முன்னாடி, தமிழக அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டது... அதுல, 'மாவட்ட தலைநகர தீயணைப்பு நிலையங்கள்ல, முதன்மை நிலைய அலுவலர் பணியிடம் புதிதாக தோற்றுவிக்கப்படுகிறது...
''பணி மூப்பு அடிப்படையில, சீனியரா இருக்கற தீயணைப்பு நிலைய அலுவலர், முதன்மை நிலைய அலுவலராக பதவி உயர்த்தப்படுவார்'னு சொல்லியிருந்தா ஓய்...
''இந்த பதவி உயர்வை எதிர்பார்த்து, மாநிலம் முழுக்க, 39 மாவட்ட தலைநகர தீயணைப்பு நிலைய அலுவலர்கள் காத்துண்டு இருந்தா... கொரோனா களேபரத்துல, இந்த அறிவிப்பை அரசாங்கம் செயல்படுத்தவே இல்லை...
''இந்தப் பதவியை கொடுத்தா, எஸ்.ஐ., ரேங்கில் இருக்கும் தங்களுக்கு, இன்ஸ்பெக்டர் ரேங்க் கிடைக்கும்னு, அவாள்லாம் காத்துண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கொரானா காலம் டாஸ்மாக் திறப்பு, டெண்டர் ஒப்பந்தங்கள் இதற்கெல்லாம் தடை செய்யாது, நியாயமான பதவி உயர்வுக்குத்தான் தடையாக இருக்கும்

Advertisement